- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

ஹாஜி எம்.கே.ஏ. ஜப்பார்

பெரும்பாலான தமிழ் முஸ்லிம்களின் – அதிலும் தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் -வாழ்வியலுக்கு இரண்டு கால்கள் உள்ளன. ஒன்று தமிழகக்கால்; தென்கிழக்காசியாவின் நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், பர்மா, சைகோன், லாவோஸ், வியட்நாம், சிலோன் என்ற ஸ்ரீலங்கா போன்றவற்றில் மற்றது.

அந்தக்காலத்தில் 10 வருடங்களுக்கு ஒரு முறையும் அதற்கு மேலும் ‘சபுர்’ செய்தவர்கள் இருந்துள்ள வரலாறும் புதிய செய்தி அல்ல.

என்றாலும் சில ஊர்களைச் சேர்ந்த முன்னோர்கள் தங்களது குடும்பங்களுடன் குடிபெயர்ந்து அந்தந்த நாடுகளிலேயே தங்களது வாழ்வாதாரங்களை உருவாக்கிக் கொண்டார்கள். தங்கள் தங்கள் ஊர்களின் பெயரிலேயே சமுதாய அமைப்புக்களை அமைத்துக் கொண்டு வாழ்ந்தோரும் உள்ளனர்.

இந்த மக்களுக்காகக் குரல் கொடுத்து சுயதேவைகளுக்கும் அப்பால் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு மக்கள் தொண்டு செய்தவர்கள் பட்டியல் நீளமானது. ஆனால், தாங்கள் வாழ்ந்த நாடுகளின் அரசியல் சட்ட வரையரைகளுக்குள் இணைந்து நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் – குறிப்பாக தனது சமுதாய மக்களின் மேம்பாட்டுக்காகவும் உழைத்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவானது. மலேசியாவில் டான்ஸ்ரீ மா அல்ஹிஜ்ரா உபைதுல்லாஹ் ஸாஹிப் அவர்களை மறக்க முடியாது.

அந்தப் பட்டியலில் இடம் பெற்று மக்கள் பணி செய்தவர்களுள் சிங்கப்பூரைப் பொறுத்து, சென்ற நவம்பர் 27 அன்று அல்லாஹ்விடம் மீண்ட ஹாஜி எம்.கே.ஏ. ஜப்பார் அண்ணன் அவர்கள் முக்கியமானவர்.

சமூகப் பணியாளராக பொதுவாழ்வைத் தொடங்கிய அன்னார் சிங்கப்பூர் துறைமுகத்தில் பணியாற்றி வந்த இந்தியத் தொழிலாளர்காளுக்காக அரும்பணி செய்தவர். அதனைக் கண்ட சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் – இந்நாள் மதியுரை அமைச்சர் திரு லீ குவான் இயூ அவர்கள் அவரை அரசியலுக்கு அழைத்து, பொதுத்தேர்தலில் ராடின் மாஸ் தொகுதியில் ஆளும்கட்சி வேட்பாளராக நிறுத்தி வெற்றிபெறச் செய்தார்.1981 முதல் 1984 வரை அவர் பதவி வகித்தார். நாகூரைப் பூர்வீகமாகக் கொண்ட ஜப்பார் அண்ணன் நமது தாய்மொழி தமிழில் கணீர் குரலில் நாடாளுமன்றத்தில் முழங்கி தமிழையும் தமிழர்களையும் கண்ணியப் படுத்தினார்.

சமுதாயத்தளத்தில் பல்வேறு இந்திய சமுதாய அமைப்புக்களில் பணியாற்றிய அவர் தனித்தனித் தீவுகளாகப் பணியாற்றிவந்த இந்திய முஸ்லிம் அமைப்புக்களை ஒருங்கிணைப்பதில் அரும்பணியாற்றினார். ஐக்கிய முஸ்லிம் சங்கத்தின் தலைவராக 1990 முதல் 2003 வரை பணியாற்றினார்.1992-ல் இந்திய முஸ்லிம்களின் கூட்டமைப்பான ‘இந்திய முஸ்லிம் பேரவை’யைத் தொடங்கினார்.அதன் தலைவர் மற்றும் செயலர் பதவிகளையும் வகித்தார். அதன் பிறகும் தொடர்ந்து ஆலோசகராகவும் தொண்டாற்றி வந்தார். இனம் மொழி மதங்களைக் கடந்து அனைத்து மக்களுடனும் இணைந்து சேவையாற்றவேண்டும் என்று அவர் அடிக்கடி கூறிவந்ததாக முஸ்லிம் அமைப்புக்களின் தலைவர்கள் கூறுகிறார்கள்.

சிங்கப்பூரில் பணியாற்றி வந்தாலும் தமிழககத்தின் தொப்புள்கொடி உறவை மறக்காமல், தமிழகத்தின் சிறந்த உலமாக்கள், சமுதாயத் தலைவர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், பாடகர்களை அழைத்து வெளிநாட்டில் வாழ்ந்தாலும் பூர்வீகத் தென்றலின் பரிச்சியத்தையும் சுவைக்கச் செய்தவர்.  தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமத் ஸாஹிப் –  இசைமுரசு நாகூர் ஹனிஃபா அண்ணன் ஆகியோரின் நெருங்கிய நண்பர்.

1994-ல் அவர் ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்கத்தின் தலைவராக இருந்த போதுதான் நான் முதன்முதலில் சிங்கப்பூர் மீலாது விழாவுக்கு சிறப்பு அழைப்பில் வந்து உரைநிகழ்த்தினேன். கடந்த சில வருடங்களாக உடல்நலம் குன்றியிருந்த அன்னாரின் மறைவு சமுதாயத்தின் பேரிழப்பாகும். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிழைகளைப் பொறுத்து தனதளவில் உயர்த்தி அருள்பாலிப்பானாக, ஆமீன்!

Nargis – துணைத்தலையங்கம் – ஜனவரி – 2011