- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

உங்களின் வார்த்தை வளத்தை மேம்படுத்துங்கள்

வார்த்தைகள் என்ற பூக்கள்தான், மொழி என்ற மாலைக்கான அடிப்படை. வார்த்தை வளங்களைப் பொறுத்தே மொழியின் சிறப்பு அமைகிறது.

எந்த ஒரு மொழியையுமே சிறப்பாக பேச வேண்டுமெனில், இலக்கணத்தோடு, வார்த்தை வளமும்(வொகாபுலரி) மிக முக்கியம். ஒரு புதிய மொழியை கற்கும்போது அதன் வார்த்தை வளத்தை நாம் வசமாக்கி கொண்டால்தான் நம்மால் விரைவாகவும், சிறப்பாகவும் அந்த மொழியை கற்றுக்கொள்ள முடியும்.

இன்றைய நிலையில் ஆங்கிலம் என்பது நாம் அனைவருமே கற்றுக்கொள்ள விரும்பும் ஒரு முக்கிய மொழியாக இருக்கிறது. ஆங்கிலத்தில் புலமை பெறும் முயற்சியில் பலரும் பலவிதமாக ஈடுபட்டு வருகிறார்கள். ஆங்கில இலக்கணத்தை(கிராமர்) தெரிந்து கொண்டாலும், அம்மொழியின் வார்த்தை வளத்தை, எளிதில் மனதில் பதிய வைக்க முடியாமல் திணறுகின்றனர். ஆங்கில மொழியின் வார்த்தை வளமானது, பி.எம்.எஸ், டோபல், கேட் போன்ற பல தேர்வுகளுக்கு முக்கியம். அதுமட்டுமின்றி தற்போது பொதுத் தேர்வுகள் நெருங்கும் சமயத்தில் ஆங்கில வார்த்தை வளம் முக்கியத்துவம் பெறுகிறது.
சில முக்கியமான வழிமுறைகளை தவறாமல் பின்பற்றினால், ஆங்கில வார்த்தை வளத்தை நாம் சிறப்பாக தக்கவைக்க முடியும்.

* அதிகமாக படிப்பதால் வார்த்தை வளம் அதிகரிக்கும் என்று பலரும் நம்புகின்றனர். ஆனால் அந்த செயல்பாட்டில் சில வழிமுறைகளைக் கடைபிடித்தால்தான் வார்த்தை வளத்தை தக்க வைக்க முடியும். நீங்கள் ஒரு ஆங்கில புத்தகத்தையோ அல்லது செய்தித்தாளையோ படிக்கும்போது உங்களுக்கு தெரியாத ஒரு புது வார்த்தையை கண்டால், உடனடியாக அகராதியை(டிக்ஷனரி) எடுத்துப் பார்க்க வேண்டும். இந்த அர்த்தமாகத்தான் இருக்கும் என்று நீங்களாகவே கற்பனை செய்துகொள்ளக் கூடாது. ஆனால் பலரும் இதை செய்வதில்லை. அகராதியை புரட்டவே சோம்பேறித்தனப்படுகின்றனர். இதனால் இழப்பு அவர்களுக்குத்தான்.

* ஒரு வார்த்தைக்கான அர்த்தத்தை ஒருமுறை கண்டுபிடித்துவிட்டால், அந்த வார்த்தையை நீங்கள் உரையாடும்போது அடிக்கடி பயன்படுத்த முயற்சிக்கவும். மேலும் எழுதும்போதும் அந்த வார்த்தையை அடிக்கடி பயன்படுத்த பழக வேண்டும். இதுபோன்று அடிக்கடி செய்வதால், அந்த வார்த்தை எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும், உங்களின் ஞாபகத்திலிருந்து நீங்காமல், உங்களுடனேயே நிலைத்துவிடும்.

* வார்த்தை வளத்தைப் பெருக்கிக் கொள்வதற்கென்றே தனியாக பல புத்தகங்கள் விற்பனையாகின்றன. அவற்றில் உங்களுக்கு ஏற்ற புத்தகத்தை தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். அந்த புத்தகம் மிகவும் பெரிதாக இருக்க வேண்டாம். ஏனெனில் பெரிய புத்தகங்களை வாங்கிய பலர், அதில் சில பக்கங்களுக்கு மேல் சென்றதில்லை.

* ஒரு நாளைக்கு 3 வார்த்தைகள் அல்லது 5 வார்த்தைகள் அல்லது ஒரு வாரத்திற்கு 20 அல்லது 25 வார்த்தைகள் என்ற அளவுகளில் உங்களின் ஞாபகத்திறனைப் பொறுத்து எண்ணிக்கையை நிர்ணயித்துக் கொள்ளவும். என்னதான் எண்ணிக்கை நிர்ணயித்தாலும், புதிய வார்த்தைகளை நிரந்தரமாக நினைவில் வைத்துக்கொள்வதற்கான சரியான வழிமுறைகளைப் பின்பற்றவில்லை எனில், நமது லட்சியம் நிறைவேறாது.

* வார்த்தைகளை கற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை தொடங்கிவிட்டப் பிறகு, அந்த முயற்சியை இடைவெளி இல்லாமல் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு வார்த்தை என்றாலும் முயற்சி என்பது தொடர்ச்சியான செயல்பாடாக இருக்க வேண்டும். இடையிலேயே முயற்சியை கைவிடும்போது, ஏற்கனவே நாம் கற்ற புதிய வார்த்தைகளும் ஞாபகத்தை விட்டு அகன்றுவிடும். இடைவெளிவிட்டு ஒவ்வொரு முறையும் முயற்சியை தொடங்கும்போதும், நாம் மறுபடியும் மறுபடியும் விட்ட இடத்திலிருந்தே ஆரம்பிக்கும் பரிதாப நிலைக்கு ஆளாவோம். நமது ஆற்றல்தான் விரயமாகும்.