- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

தைராய்ட் பிரச்சனைகள்

தைராய்ட் பிரச்சனைகளால் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும்? – டாக்டர் சரோஜா

[1]உடலின் வளர்ச்சியில் நாளமில்லாச் சுரப்பிகளில் சுரக்கும் ஹார்மோன்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றில் தைரொக்சின் என்னும் ஹார்மோன், உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி போன்றவற்றிற்கு பயன்படுகிறது. தைரொக்சின் நமது தாடையின் கீழ்புறமாக அமைந்த தைரொய்ட் சுரப்பிகளிலிருந்து சுரக்கின்றது. தைரொய்ட் சுரப்பியில் பாதிப்பு ஏற்பட்டால் பல வகையான நோய்கள் வரக் கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

பலரும் கழுத்து வீங்குவதை தைரொய்ட் சுரப்பியின் பாதிப்பாகக் கருதுகின்றனர். சில நேரங்களில் தாடை யின் கீழ்ப்பகுதியில் உள்ள நிண நீர் முடிச்சுகள் நோய் தாக்குதலின்போது வீக்கமடைந்து மிகுந்த வலியை ஏற்படுத்தும். கழுத்து வீங்கக்கூடிய தைராய்டு பிரச்சனையானது குறை தைரொய்ட் என அழைக்கப்படுகிறது. இது தவிர மிகை தைரொய்ட், லிங்குவல் தைரொய்ட், மீடியா தைரொய்ட் போன்ற பிற தைரொய்ட் குறைபாடுகளும் உள்ளன.

நாக்கின் பின்பகுதியில் கட்டி போன்று ஏற்படுவதை லிங்குவல் தைரொய்ட் என்பர். சிலருக்கு மார்புக்கூண்டுக்குள் மீடியா ஸ்டெர்னல் தைராய்டு இருக்கும். இதனால், மூச்சுத்திணறல் ஏற்படும். குழந்தைப் பிறப்பைத்  தடுக்கும் மாத்திரைகள் தைராய்டு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

தைரொய்ட் சரிவர சுரப்பதற்கு அயோடின் தேவைப்படுகின்றது. உடலில் அயோடின் குறையும்போது தைரொய்ட் சுரப்பும் குறையும். எனவே, சுரப்பினை அதிகப்படுத்த சுரப்பிகள் பெரிதாகும். இதனால், முன் கழுத்து கழலை ஏற்படுகின்றது. இதனுடன் உடல் பருமனாகும். மலச்சிக்கல், காலில் வீக்கம் போன்றவை ஏற்படும். நினைவாற்றல் குறைதல், பெண்கள் பூப்பெய்ய தாமதமாகுதல், மூட்டு வலி உண்டாகுதல் போன்றவை ஏற்படும். இதனை வராமல் தடுக்கவே அயோடின் கலந்த உப்பினைப் பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்படுகின்றது.

மலைவாழ் மக்களுக்கு குறை தைரொய்ட் உருவாவது அதிகளவில் காணப்படுகிறது. குழந்தைகளுக்கு தைரொய்ட் பிரச்சனை இருப்பின் வளர்ச்சி குறைவாக இருக்கும். மேலும், அவர்களின் மூளை வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. தைரொய்ட் நோய்களில் மிக ஆபத்தான ஒன்று கிரேவ்ஸ் அல்லது அஷி மோட்டா தைரொய்ட் நோயாகும். இந்நோயால் பாதிக்கப்படுபவர்களின் தைரொய்ட் சுரப்பி அவர்களது உடலில் எதிரியாகவே செயற்படுகிறது. இத னால், உடல் உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. இந்நோயினால் பாதிக்கப் பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களும் தைரொய்ட் நோயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

தைரொய்ட் கட்டிகளை தொடக்க நிலையில் கண்டறிந்து விட்டால் எளிதாக கட்டுப்படுத்திவிடலாம். தைரொய்ட் பிரச்சனையை தைரொய்ட் அப்டேக் பரிசோதனை, ஸ்கேன் போன்றவை மூலம் கண்டறிந்து கொள்ள முடியும்.

நன்றி: Medical Online