- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

வைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி

[1]கொடை வள்ளல்கள் எம். ஜமால் முஹம்மது ஸாஹிப், என்.எம்.காஜா மியான் ராவுத்தர் இணைந்து 1951-ல் சமுதாயத்தின் கல்விக்காக விதைத்த விதை, இன்று பூத்து-காய்த்து-பழுத்து கல்வி அமுதசுரபியாய் ஆயிரமாயிரம் கல்வியாளர்களை ஆண்டுதோறும் உருவாக்கி சமுதாயத்துக்கு -நாட்டுக்கு -உலகத்துக்கு அன்பளித்துக் கொண்டிருக்கிறது!

உலகின் பல நாடுகளிலும் இன்று ஜமாலியன்கள் தாங்கள் கல்வி கற்ற தாய்வீட்டின் தகைமையைப் பறைசாற்றிக் கொண்டு வாழ்கிறார்கள். தங்களை- தங்களது குடும்பங்களை வளமாக்கிக் கொண்ட அவர்கள், தங்களது ஆற்றலால் -உழைப்பால் நாட்டுக்கும் உலகத்துக்கும் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பத்தாயிரம் மாணவ மாணவியர் இந்த ஆண்டு பயில்கின்றனர்.. பெண்கள் மட்டுமே நான்காயிரம்! தொலைதூரக் கல்விக்காக சனி- ஞாயிறுகளில் கல்லூரிவளாகத்தைத் தொட்டுச் செல்வோர் இந்த எண்ணிக்கையில் இல்லை!

87 ஏக்கர் நிலப்பரப்பில் திருச்சிமாநகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஜமால், வித்திட்ட சான்றோர்களின் நிய்யத்தை முழுதும் பேணி, தமிழகத்தின் அனைத்து மூலை முடுக்குகளிலிருந்தும் மாணவர்களை ஈர்க்கிறது. இன மத மொழி பேதங்களைப் புறந்தள்ளிய ஒர் அற்புத மாணவ சங்கமத்தைப் பார்க்க விரும்புவோர், ஜமாலுக்குச் சென்று பார்க்கலாம்.

தங்கள் பிள்ளைகளின் ‘பொது ஒழுக்கம்’, ‘அகவெளிச்சம்’ பற்றிக் கவலைப்படும் பெற்றோர்கள் அனைவரும் ஜமால் என்ற மையப் புள்ளியை நோக்கியே இன்று ஈர்க்கப் படுகிறார்கள்!

கோழிப்பண்ணைகள் உருமாற்றம் பெற்று கல்லூரிகளாகி -கல்வியை விற்கும் கிளை நிலையங்களாகி வியாபாரம் செய்யும் இந்தக் காலத்தில் கூட, ஜமால் தனது பாரம்பரிய விழுமியங்களை இழக்கவில்லை என்பது நிஜம்.

‘மொத்த மதிப்பெண் என்ன?’ என்று கேட்டு, மாணவனையும் அவனது பெற்றோரையும் தடுமாறவைத்து … ‘இந்த மார்க்குக்கெல்லாம் நாங்கள் இடம் கொடுப்பதில்லை’ என்று அதிர வைத்து, ‘வேறு ஏதாவது வழியில்லையா?’ என்று கெஞ்சவைத்து, பணப்பரிமாற்றத்தில் சீட்டுக் கொடுக்கும் இழிநிலை ஜமாலில் இல்லை!

ஊரும் உலகமும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடும் பெரிய பெரிய கல்லூரிகளையெல்லாம் முற்றுகையிட்டு, தோற்று, அட்மிஷன் எல்லாம் முடிந்த பிறகு ஜமாலுக்கு வந்து ‘முஸ்லிம் கல்லூரியில் எனக்கு இடமில்லையா?’ என்று வாக்குவாதம் செய்யும் பெற்றோர்களைக் கூட இயன்றவரை திருப்திப் படுத்துகிறது ஜமால்!

ஏழை மாணவர்களுக்கு அட்மிஷன் போடுவது மட்டுமல்ல, எப்படியெல்லாம் உதவமுடியுமோ, அந்தந்த வழிமுறைகளையெல்லாம் கண்டறிந்து ஆவண செய்வதும் மிகையான குறிப்பல்ல.

‘எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயர் சொல்லி, இதயசுத்தியோடு தொடங்கப் படுகிற எந்த நிகழ்வையும் -முயற்சியையும் இந்த உலகத்தில் வேறு எந்த ச் சக்தியாலும் முறியடிக்க முடியாது’ என்ற வேத வரிகளை மெய்ப்பிக்கும் வகையில் ஜமாலின் நிறுவனர்களின் நிய்யத்தை இன்றளவும் போற்றிப் பாதுக்காத்துவரும் ஜமால் முகம்மது கல்லூரியின் நிர்வாகக் குழு, நம் பாராட்டுக்குரியது!

60 ஆண்டுகளை நிறைவு செய்து வைரவிழாக் கொண்டாடும் ஜமாலின் அரிய செயல்பாட்டைப் புரிந்து சமுதாயப் புரவலர்கள், முன்னாள் மாணவர்கள் ஜமாலை வாரி அணைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாட்டிலும், உலகின் பல நாடுகளிலும் இன்று ஜமாலின் முன்னாள் மாணவர்கள் சங்கங்கள் இயங்குகின்றன. அந்த வரிசையில் கடந்த 30 -1- 2011-ல் சிங்கப்பூரில், அரசின் பதிவாணைச் சட்டப்படி பதிவுசெய்யப்பட்ட ஒரு சமூகசேவை அமைப்பாக சிங்கப்பூர் ஜமால் முஹம்மது முன்னாள் மாணவர் சங்கம் உருவாக்கப் பட்டுள்ளது. அவ்விழாவில் எங்கள் கௌரவ ஆசிரியரும் வாழ்த்துரை வழங்கினார்.

சர்வதேச அளவில் ஜமாலின் முன்னாள் மாணவர் சங்கங்களுடன் தொடர்புகொண்டுள்ள நர்கிஸ், ஜமால் முஹம்மது கல்லூரியின் நிர்வாகக்குழுவுக்கும், முன்னாள்/இந்நாள் முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துச் சொல்வதுடன், ஜமால் இன்னும் வளர்ந்து பல்கலைக் கழமாக உருவாகி உலகம் உள்ளளவும் கல்விப்பணியாற்ற உளமாரப் பிரார்த்திக்கிறது.

நன்றி: நர்கிஸ் – தலையங்கம் -மார்ச் -2011