- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

சாமியார் முதல் ஊழல் ஒழிப்பு வரை எல்லாமே போலி!!

[1]அன்னா ஹசாரே என்பவர் ஊழலை ஒழிக்கப் புறப்பட்டவர் என்பது போல ஒரு மாயத் தோற்றம் தோன்றும். அப்படி ஒரு பிம்பத்தை உருவாக்கப் பார்க்கிறார்கள்.

சங்கரலிங்கனார், பொட்டி சிறிராமுலு, திலீபன் ஆகியோர் உண்ணாவிரதம் இருந்து இறந்தார்கள். அவர்களை எல்லாம் இந்த நாடு கண்டு கொள்ளவில்லை.

அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தால் மட்டும் ஏன் மத்திய அரசு இப்படித் தலைவணங்குகிறது? ஊழல் ஒழிப்பு என்பது சட்டப் பிரச்சினை அல்ல சமூகத்தை ஒட்டிய பிரச்சினை.

ஹசாரே குடும்பத்தைச் சேர்ந்த சாந்தி பூஷன், அவரது மகன் பிரசாந்த் பூஷன்தான் இந்தக் குழுவில் இருக்க வேண்டுமா? ஊழல் குற்றச்சாற்று சாந்தி பூஷன் மீது வந்த பொழுது இவர் பதவி விலகியிருக்க வேண்டாமா?.

ராஜா ஊழல் செய்தார் – ரூ.1,76,000 கோடி என்று சொன்னார்கள். ஆனால் நீதிமன்றத்திலோ வெறும் 22 ஆயிரம் கோடி என்று சொன்னார்கள். அப்படியானால் மீதி 1 லட்சத்து 54 ஆயிரம் கோடியை எடுத்துக் கொண்டு சென்றது யார்?

ஆதிக்கவாதிகள், இந்து மத மனப் பான்மையினர், அவாள் கூட்டத்தினர் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார்கள். நீதிமன்றம் செய்கின்ற வேலையை ஹசாரே குழு செய்வதா? அப்படியானால் எதற்கு நீதி மன்றங்கள்? கலைத்துவிடலாமே!

ஊழலை ஒழிக்கப் புறப்பட்டிருக்கின்ற நடிகர் ரஜினிகாந்த் தான் சம்பாதித்ததற்கு ஒழுங்கா வரி கட்டி இருப்பாரா? அவரிடம் இரண்டு கணக்கு இல்லையா?

அன்னா ஹசாரேயின் எண்ணம் இந்துத்துவா நாட்டை ஆள வேண்டும் என்பதே! லோக்பால் குழு உடனடியாக கலைக்கப்பட வேண்டும்

ஹசாரே நடத்திய உண்ணாவிரதம் மதச்சார் பின்மையை ஒழித்து இந்த நாட்டை இந்துத்துவா கொள்கை ஆள வேண்டும் என்பதற்காக நடத்தப் பட்ட ஒத்திகை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை. இதிலே யாருக்கும் மறுப்பு கிடையாது. எந்த வித கருத்து மாறுபாடும் கிடையாது.

யுத்த காலங்களில் எப்படி உண்மைகள் களபலியாகின்றனவோ அது போல அமைதியான இந்தக் காலகட்டத்தில் உண்மைகள் களபலியா கின்றன.

ஊழலை ஒழிப்பதற்கென்றே சில பேர் புது அவதாரங்களை எடுத்ததைப் போல சமீபத்தில் திடீரென்று அவதாரங்கள் எடுத்திருக்கிறார்கள்.

இதற்கு ஊடகங்கள் அபாரமாக வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்கள். நாட்டில் ஊழல் மலிந்துவிட்டது புரட்சி பூபாளத்தை நாட்டில் ஏற்படுத்த அன்னா ஹசாரே வந்திருக்கிறார்.

ஹசாரே உண்ணாவிரதம் இருந்த இடத்தில் காவித் துணியையும் பாரதமாதா படத்தையும் முன்வைத்துக் காட்டியிருக்கின்றார்கள்.

இதில் நோய் நாடி, நோய் முதல் நாட வேண்டும் என்பதுதான் எங்களுடைய வாதம்.
பத்திரிகையாளர்களைக் கேட்கிறோம். ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களைப் பார்த்துக் கேட் கிறோம். திக் விஜய் சிங் ஒரு கேள்வி கேட்டாரே!

ஊழலை ஒழிப்பதற்காக ஹாசரே நடத்திய உண்ணாவிரதத்திற்கு ஆன செலவு 50 லட்ச ரூபாய். இந்தப் பணம் எப்படி வந்தது? யார் செலவு செய்தது? இதன் பின்னணி என்ன? இதற்கே 50 லட்ச ரூபாய் செலவு செய்தவர்கள் எப்படி ஊழலை ஒழிப்பார்கள் என்றுகேள்வி கேட்டாரே!

டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஹேமந்த் பாபுராவ் என்பவர் டில்லி உயர் நீதிமன்றத்திலே ஒரு வழக்கைத் தொடுத்திருக்கிறார். அன்னா ஹசாரே மீது 2.5 லட்சம் ரூபாய் ஊழல் புரிந்துள்ளார் என்று வழக்குத் தொடுத்திருக்கிறார்.

ஹசாரே தலைமையில் உள்ள குழுவினர்களே ஊழல் வாதிகள். சாந்தோஷ் ஹெக்டே என்பவர் மட்டுமே வேண்டுமானால் இந்தக் குற்றச் சாற்றிலிருந்து மிஞ்சலாம், அவ்வளவுதான்.
அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ் அன்னா ஹசாரே, சாந்தி பூஷன், மற்றும் அவரது மகன் பிரசாந்த் பூஷன் போன்றவர்களை வைத்து கமிட்டி அமைக்கப்பட்டிருக்கிறது?

அன்னா ஹசாரே குழுவினர் மிரட்டினால் மத்திய அரசு பணிவதா? சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் முடிக்க இன்னும் 12 கி.மீ. தான் பாக்கி. இராமனைக் காட்டி அந்தத் திட்டத்தை உச்சநீதிமன்றத்தின் மூலம் முடக்கி வைத்திருக்கிறார்களே

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நாங்கள் மக்களைத் திரட்டி சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளலாமா? அதேபோல ஈழத் தமிழர் பிரச்சினைக்காக மக்களை நாங்கள் ஒன்று திரட்டினால் இவர்கள் ஒப்புக்கொள்வார்களா?

மத்திய அரசு சும்மா இருந்துவிடுமா? எதற்கும் ஒரு வரைமுறை வேண்டாமா? அன்னா ஹசாரே குழு அரசியல் சட்டத்தின் எந்த பிரிவின் கீழ் இவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்? சட்டரீதியான அங்கீகாரம் உண்டா?

இதற்கு சட்டரீதியான அங்கீகாரம் உண்டா? இது டில்லியில் நடத்தப்பட்ட கட்டப் பஞ்சாயத்து.
மத்திய அரசாலே அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்டப் பஞ்சாயத்து.

பிரபாகரன் உண்ணாவிரதம் இருந்தார். அவர்களுடைய கருவிகளை எல்லாம் போலிசார் பறித்துக் கொண்டு சென்று விட்டார்கள் என்பதற்காக நாங்கள் தான் சென்றோம். பிரபாகரன் அவர்களிடத்திலே சொன்னோம். ஒரு போர் வீரன் உண்ணாவிரதம் இருக்கக்கூடாது என்று சொல்லி உண்ணாவிரதத்தையே முடித்து வைத்தவர்கள் நாங்கள்.

உண்ணாவிரதம் என்ற பெயரில் அச்சுறுத்தல். இது சமூகத்திற்கு பொது ஒழுக்கக் கேட்டைத்தான் உருவாக்கும். மத்திய அரசாங்கத்தை அச்சுறுத்தி காரியம் சாதிக்கலாம் என்று நினைத்தால் இது எங்கே போய் முடியும்? இந்த ஹசாரே குழு அமைக்கப்பட்டதே போலித் தனமானது.

அன்னா ஹசாரே குழுவில் உள்ளவர்களில் ஒவ்வொருவருடைய ஊழலும் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அதில் உள்ள ஊழல் பேர்வழிகள் ஒவ்வொருவரும் இப்பொழுது வரிசையாக நிற்கிறார்கள். இவர்களா ஊழலை ஒழிக்கப் போகிறவர்கள்?

நீதிபதிக்கு ரூ. 4 கோடி கொடுத்தால் அவரை சரிப்படுத்தி விடலாம் என்று சாந்தி பூஷன் சொன்னது ஆதாரப் பூர்வமாக வெளிவந்துவிட்டது. இப்பொழுது உச்சநீதிமன்ற நீதிபதிக்கு விலையே உச்சகட்டமாக 4 கோடி ரூபாய் என்று நிர்ணயம் செய்துவிட்டார்கள். அந்த அளவுக்கு ஊழல் பேர்வழிகள் இவர்கள்.

அது மட்டுமல்ல – மாயாவதி அவர்களுக்காக சாந்தி பூஷன் ஒரு வழக்கில் ஆஜரானார். அதற்காக சாந்திபூஷனுக்கு பண்ணை வீடு வழங்கப்பட்டிருக்கிறது. சாந்திபூஷன் மகனுக்கு ஒரு பண்ணை வீடு வழங்கப்பட்டிருக்கிறது. இவர்கள்தான் ஊழலை ஒழிக்கப் போகின்ற உத்தமர்களா?

சாந்தி பூஷன் போன்றவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? எப்பொழுது என்மீது இப்படி ஒரு குற்றச்சாற்று வந்ததோ இனி நான் அந்தக் குழுவில் இருக்க விரும்பவில்லை என்று சொல்லி அல்லவா விலகியிருக்க வேண்டும்? அதுதானே சான்றாண் மைக்கு அழகு?

மத்திய அரசு மதச்சார்பற்ற அரசு என்று இருக்கக்கூடாது. அடுத்து மத்தியில் இந்துத்துவா ஆட்சிதான் வரவேண்டும் என்பதற்குப் பார்க்கப்பட்ட ஒத்திகைதான் இந்த அன்னா ஹசாரே குழு நாடகம். ஊழலை ஒழிப்போம் என்று பேசுவது இப்பொழுது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. நாட்டில் எல்லாவற்றிலும் போலி.

மருந்தா அது காலாவதியான மருந்து, மருந்தில் போலி. அதே போல தண்ணீரில் கலப்படம் போலி. உணவா அதிலும் கலப்படம் போலி, சாமியார் என்றாலே போலி. அதையும் தாண்டி போலி சாமியார்கள். போலி சர்டிபிகேட். சரி, விமானம் ஓட்டுவதிலும் போலி சர்டிபிகேட் கொடுத்து விமானத்தை ஓட்டியிருக்கின்றான். ஊழலை ஒழிக்கவேண்டுமானால் அதன் அடித்தளத்திற்குப் போக வேண்டும்.