- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

கடமைக்கு எடுத்துக்காட்டு – ஆர்.டி.ஓ., சங்கீதா

[1]போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரு போட்டியிடும், திருச்சி மேற்கு தொகுதிக்கு ஓட்டுப் போடுபவர்களுக்கு வீடு, வீடாக பணம் வினியோகம் செய்ய அமைச்சர் நேருவுக்கு நெருக்கமான உதயகுமார் என்பவருக்கு சொந்தமான, “எம்.ஜே.டி., ஆம்னி’ பஸ்சின் மேற்கூரையில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு பணம் கடத்தப்படுவதாக நேற்று முன்தினம் நள்ளிரவில், திருச்சி ஆர்.டி.ஓ.,வும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சங்கீதாவுக்கு, ரகசிய தகவல் கிடைத்தது.

ஆர்.டி.ஓ., சங்கீதா. நள்ளிரவு  2.30 மணி என்றும் பாராமல், அவரது டிரைவர் துரை மற்றும் உதவியாளர் ஒருவர் என மூன்று பேர் மட்டும் பொன்னகரில் உள்ள எம்.ஜே.டி., ஆம்னி பஸ் நிறுவனத்தின் ஷெட்டுக்கு சென்று  சோதனை செய்தனர்.

பஸ் மேற்கூரையில் மூடப்பட்டிருந்த தார்பாயை விலக்கி பார்த்தபோது, ஐந்து டிராவல் பேக்குகள் இருந்தன. அவற்றை திறந்து பார்த்தபோது, சங்கீதா அதிர்ச்சியடைந்தார். அவற்றில், கட்டுக்கட்டாக, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் இருந்தன.உடனடியாக, மாவட்ட தேர்தல் செலவின பார்வையாளர் ராஜகோபால், தேவதாசன் மற்றும் போலீசாருக்கு ஆர்.டி.ஓ., சங்கீதா தகவல் தெரிவித்தார்.

அந்த ஆம்னி பஸ்சை மாற்று டிரைவர் மூலம், ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து, வருமான வரித்துறை உதவி கமிஷனர் ஆல்பர்ட் மனோகரனுக்கும் தெரிவிக்கப்பட்டு, அவரும் திருச்சி ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு வந்தார். பணத்தை எண்ணிப் பார்த்த போது, 5 கோடியே, 11 லட்சத்து, 27 ஆயிரம் ரூபாய் இருந்தது.அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், சம்பவ இடத்தில் நின்றிருந்த ஆம்னி பஸ் உரிமையாளரின் இன்னோவா காரையும் பறிமுதல் செய்தனர்.