- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

தமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்

இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. எந்த ஒரு தனிக்கட்சியும் தனித்துப் போட்டியிடும் தைரியத்தில் இல்லை என்பது, ஜனநாயகத்துக்கு நல்ல அறிகுறி அல்ல. இருந்தாலும், மத்தியிலாகட்டும் அல்லது மாநிலத்தில் ஆகட்டும் யாரும் யாருடனும் கூட்டணி வைக்கலாம் என்ற வணிக யுத்தியும் அதன் வழி புதிரான பேரங்களும் கடை விரித்திருக்கின்றன.

உங்கள் நர்கிஸ் ஒரு மாத இதழ் – வாசகர்கள் செல்போனிலும் ஈமெயிலிலும் ஏன்? ஃபேஸ் புக்கிலும் கேள்விகளை சரமாறியாகத் தொடுக்கிறார்கள். அந்த பதில்களை அவர்கள் இதழில் பார்க்கும் போது தேர்தலுக்கு பத்து நாட்களே பாக்கியிருக்கும் என்ற யதார்த்தம்.

எனவே … யார் யாருடன் கூட்டணிவைப்பார்கள்? -எத்தனை சீட்டுகள் ஒதுக்கீடாகும்? -எத்தனை பறிக்கப்பட்டு மற்றவர்களுக்கு வழங்கப் படும்? ஸீட் ஒதுக்கப்பட்டாலும் விரும்பும் தொகுதி கொடுக்கப் படுமா? – ஒரு கட்சியுடன் கூட்டணி சேர்ந்தவுடன் அக்கட்சியில் பிளவு ஏற்படுமா? .. இப்படி எதுவுமே உறுதிபடச் சொல்லமுடியாத நிலையில் வாசகர்களின் கேள்விகள் அனைத்துக்கும் பதில் சொல்ல முடியாத தர்ம சங்கடம்!

இதுபோக தாய்ச்சபை முஸ்லிம் லீகுக்கு முதலில் கொடுக்கப்பட்ட 3 இடங்களில் ஒன்றை காங்கிரஸுக்கு வழங்கி கூட்டணியைக் காப்பாற்றியதில் பல சகோதரர்களுக்கு ஆட்சேபம்… ஆதங்கம்! இப்படி பலதரப்பட்ட நிலைகளுக்கும் விரிவான பதில் சொல்ல முடியாத நெருக்கடியை வாசக அன்பர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

மே இதழில் கூட முழுமையாக விவரித்துவிட முடியாது… தேர்தல் முடிவுகள் ஒரு மாதம் கழித்துதான் அறிவிக்கப்படும் என்ற தேர்தல் ஆணைய அறிவிப்பு.

இன்ஷா தேர்தல் நல்லபடியாக முடியட்டும்… நமது ஒத்துழைப்பை முழுமையாகக் கொடுப்போம். நாட்டிலும் மாநிலத்திலும் பொது அமைதியும் சமுதாயத்தில் ஒற்றுமையும் தேர்தல்கால நடவடிக்கைகளால் எந்த வகையிலும் பாதிக்கப் பட்டுவிடாமல் நமது பாரம்பரிய கண்ணியத்தைக் காப்போம். அதற்காக அனைவரும் பிராத்திப்போம்!

நன்றி: நர்கிஸ் -துணைத்தலையங்கம் – ஏப்ரல் – 2011