- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

மேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று !

1500 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கில் உலக இருளைப் போக்க ஓர் ஜனநாயக ஒளி முகிழ்த்தது!

ஹீரா குகையில் தனித்து தியானம் செய்துகொண்டிருந்த ஒரு மகத்தான மனிதர் முன் வானவர் ஜிப்ரீல் வந்து வழங்கிய இறைக் கட்டளை ஒரே நேரத்தில் உலகுக்குக் கல்வியும் தந்தது; மனிதவாழ்வின் ஒவ்வோர் அசைவுக்கும் ஓர் அர்த்தத்தையும், அதனை உணர்ந்து செயல்படுத்துவதால் மனிதகுலத்துக்கு விளையும் இம்மை மறுமைப் பேறுகளையும் பிசிறில்லாமல் எடுத்தியம்பியது.

முகம்மது என்ற அந்த இறைவனின் இறுதித்தூதர் ஒரே நேரத்தில் ஆட்சித் தலைவராகவும் இருந்தார்கள்; அந்த ஆட்சியின் மகத்தான மக்கள் தொண்டனாகவும் இருந்தார்கள். மக்கள் ஆட்சியின் இயக்க இலக்கணங்கள் முழுமையாக வகுக்கப்பட்டு, அவை மனிதவாழ்வில் கடைப்பிடிக்க முடிந்த காரியசாத்தியமான சட்டங்கள்தான் – வழிமுறைகள்தான் என்பதை நிரூபித்துக் காட்டியதும் வரலாற்றில் அழுத்தந்திருத்தமாகப் பதிவு பெற்றுள்ளன.

அவர்களது பிரநிதிகளாக வந்தவர்களும் அதனை அடிபிசகாமல் நிகழ்ப்பித்துக் காட்டினார்கள்.

சக்கரவர்த்தி உமரைச் சந்திக்க வந்த யூத உச்சமட்டக் குழு மதினாவில் மிக உயர்ந்த அரண்மனையத்தேடி அலைந்து சலித்து, பள்ளிவாசல் வாசல்படியில் உட்கார்ந்திருந்த ஒரு சாமான்யரைப் பார்த்து “ஆட்சித்தலைவர் எங்கிருக்கிறார்?”என்று வினவியபோது, “இதோ, உங்கள் முன்னேதான் அவர் இருக்கிறார்; அவருடன்தான் நீங்கள் உரையாடிக்கொண்டிருக்கிறீர்கள் நண்பர்களே!” என்று கூறமுடிந்த அந்த நிகழ்ச்சி வெறும் நாடகக் காட்சி அல்ல …. அதுதான் இஸ்லாம் என்ற மார்க்கத்தின், ஜனநாயகம் என்ற நோக்கத்தின் மாட்சிமிக்க அத்தாட்சி !

அந்த இஸ்லாமிய ஆட்சித் தலவர்களைப் பிரதிநித்துவப் படுத்துகிறோம் என்று சொல்லிக் கொள்கின்ற அந்தப் பரம்பரை இப்போது என்ன செய்து கொண்டிருகிறது? எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறது?

அத்தனை  ஊடகங்களாலும் இன்று வெளிச்சப்படுத்தப்படும் பரபரப்புச் செய்திகள், முஸ்லிம் நாடுகளில் நடக்கும் போராட்டங்கள் பற்றித்தான்!

தூனுஸியாவை கொள்ளையடித்துக் கொண்டிருந்த ஓர் அரக்கனையும் அவனது நவநாகரீக கொள்ளைக்காரி மனைவியையும் மக்கள் எழுச்சி விரட்டியடித்திருகிறது!

ஓர் பாதசாரி காய்கறி வியாபாரி தனது அன்றாடப் பசிக்காக கடைவிரித்த போது ஆட்சித் தலவனின் கூலிப்படை தடுக்க, அவன் தனக்குத்தானே வைத்துக்கொண்ட தீ, இப்போது பென் – அலியையும் அவனது மனைவி லைலாவையும் உயிரைத் தக்கவைத்துக் கொள்ள ஓட்டி அடித்திருக்கிறது.

தூனுஸிய நிகழ்வு தந்த எழுச்சியில், ஏமனில் இப்போது குமுறல்!

எகிப்திலோ, உலகின் பெருந்தலைகளையெல்லாம் நடுநடுங்க வைத்திருக்கும் வரலாற்றுப் போருக்கான வீரப் புரட்சியின் தொடக்கம்!

ஒபாமா பதறுகிறார்; இஸ்ரேல் குலைநடுங்க மௌனியாய் அமைதி இழந்து!

அல்ஜீரியாவில், ஜோர்டானில், மொரோக்கோவில் …. வேறு எங்கெல்லாம் இஸ்லாத்தின் ஆட்சிச் சட்டவரைவுகளுக்கு எதிராக ஆட்சித் தலைமைகள் உல்லாசபுரிகளின் சஞ்சாரத்தில் உள்ளனவோ, அங்கெல்லாம் அதிர்வலைகள்!

இனி இதனைத் தடுக்க முடியாது!

எதற்கும் ஓர் எல்லை உண்டு, அல்லவா?

இஸ்லாத்துக்கும் – இயற்கைக்கும் மாற்றமான சர்வாதிகார முறைமைகள் சரிந்து வீழ்வதை இனி உலகின் எந்த வல்லரசுகளாலும் தடுத்து நிறுத்த முடியாது!

மேற்கு வானில் ஒளிவிடும் இந்த ஜனநாயகப் பிறைக்கீற்று இந்தச் செய்தியைத்தான் அடையாளப்படுத்துகிறது!

நன்றி: நர்கிஸ் – துணைத்தலையங்கம் – மார்ச் – 2011