- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

இராமநாதபுரத்தில் தொடரும் அவலங்கள்!

ரயில்வே ஸ்டேஷனில் அடிப்படை வசதிகளின்றி பயணிகள் அவதி

ராமநாதபுரம் ரயில்வே ஸ்டேஷனில் அடிப்படை வசதிகளின்றி பயணிகள் பரிதவிக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுலா ஸ்தலங்களான திருப்புல்லாணி, ஏர்வாடி, உத்தரகோசமங்கை, தேவிபட்டினம் போன்ற ஊர்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் ரயிலில் வந்து ராமநாதபுரம் ஸ்டேஷனில் இறங்கி பஸ்களில் செல்கின்றனர்.

சுற்றுலா பயணிகள் வந்து இறங்கும் ராமநாதபுரம் ரயில்வே ஸ்டேஷனில் கழிப்பறை, சுகாதாரமான குடிநீர், பயணிகள் ஓய்வு அறை போன்ற வசதிகள் இல்லாததால் லாட்ஜ்களில் அறை எடுக்க வேண்டிய நிர்ப்பந்த நிலை ஏற்படுகிறது. மேலும் ரயிலுக்காக வரும் பயணிகள் பிளாட்பாரங்களில் உட்கார வசதியின்றி நிற்க வேண்டிய நிலை உள்ளது. பிளாட்பாரங்களில் குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டுமே மேல்கூரை அமைக்கப்பட்டுள்ளதால் மழை காலங்களில் பயணிகள் மழையில் நனைந்தபடி நிற்க வேண்டிய அவலநிலையில் உள்ளனர்.

பிளாட்பாரங்களில் லைட் வெளிச்சம் இல்லாததால் பயணிகள் திருட்டு அச்சத்தில் உள்ளனர். வாகன நிறுத்தம் பெயரில் கான்ட்ராக்ட் எடுத்தவர்கள் பயணிகளை வழி அனுப்ப வருவோரிடம் நுழைவு வரிபோல் அடாவடி வசூல் நடத்துகின்றனர். இங்கு பயணிகளுக்கு பல்வேறு இடையூறுகள் இருப்பதால் சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கின்றனர். ரயில்வே நிர்வாகம் பயணிகள் நலன் கருதி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் அவலம்

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் நிதியை வீணடிக்க தெரிந்த அதிகாரிகள் நோயாளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தராததால் தரையில் படுத்திருக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தோண்டாத கிணறு, போடாத ரோடு, பயன்படாத கட்டடம் இதுபோன்ற பல்வேறு வழிகளில் நிதியை பயன்படுத்தியதாக செலவு செய்வதில் அதிகாரிகள் கில்லாடிகள்தான். இதற்காக அவர்கள் “ரூம்’ போட்டுதான் யோசிக்கின்றனரோ என்னமோ தெரியவில்லை.

இதற்கு உதாரணமாகத்தான் ராமநாதபுரம் அரசு தøமை ஆஸ்பத்திரியில் திறக்கப்படாத வாகன நிறுத்தம், பொது கழிப்பறை, நிர்வாக அலுவலக கட்டடம். இவைகள் கட்டுவதற்காக பல லட்சங்களை செலவு செய்து தற்போது பாம்புகளும் விஷ பூச்சிகளும் இலவசமாக தங்கி கட்டடம் பயன்படாமல் வீணடிக்கப்பட்டுள்ளது. ஆனால் நோயாளிகள் படுப்பதற்கு தேவையான கட்டில் போன்ற வசதிகள் இல்லாமல் தரையில் படுத்திருக்கும் அவலநிலையில்தான் உள்ளனர். தரையில் படுத்திருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் பல்வேறு நடைமுறை சிக்கல் உள்ளது.

ஆஸ்பத்திரியில் அத்தியாவசிய தேவைகள் பல இருந்தும் அதை கண்டுகொள்ளாமல் இருப்பதால் நோயாளிகள் நோயால் மட்டுமில்லை மனதளவிலும் பாதிக்கப்படுகின்றனர். இனியாவது நல்ல காலம் பிறந்தால் சரி.