- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

இன்ஜி., படிப்பை விட எல்.கே.ஜி.,க்கு கூடுதல் கட்டணம்

காஸ்ட்லி’யானது பள்ளி கல்வி: இன்ஜி., படிப்பை விட எல்.கே.ஜி.,க்கு கூடுதல் கட்டணம்

தமிழகத்தில், புதிது புதிதாக பள்ளிகள் துவங்கப்பட்டாலும், கல்விக் கட்டணம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பட்டப்படிப்பு மற்றும் இன்ஜினியரிங் படிப்பை விட, எல்.கே.ஜி.,க்கு அதிக தொகை செலவழிக்கும் நிலை காணப்படுகிறது. அரசு கல்லூரிகளில் இருக்கும் மதிப்பு, அரசு பள்ளிக்கு இல்லாததால், தனியார் பள்ளிக்கு பெற்றோர் படையெடுக்கும் நிலை உருவாகியுள்ளது.

உலகமயமாக்கல் கொள்கையினால், பன்னாட்டு நிறுவனங்கள் நுழைந்ததும், ஐ.டி., துறை வளர்ச்சி, தமிழகத்தில், சில ஆண்டுகளாகவே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐ.டி., துறை வளர்ச்சியால், ஆங்கில அறிவும், இன்ஜினியரிங் படிப்பும் இருந்தாலே, நல்ல சம்பளம் கிடைக்கும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், பள்ளிப்படிப்பை ஆங்கிலவழியில் தரவேண்டும் என்ற ஆசை அனைத்து பெற்றோரிடமும் காணப்படுகிறது. இதனால் அரசு பள்ளிகளை தவிர்த்து, தனியார் பள்ளிகளில் சேர்க்கவும், முன்னணி பள்ளிகளில் சேர்க்கவும் போட்டி அதிகரித்துள்ளது. மாணவர் சேர்க்கையில் ஏற்படும் போட்டியை சாதகமாக எடுத்துக்கொண்டு, தனியார் பள்ளிகளும் கல்விக் கட்டணங்களை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இதுகுறித்த புகார் இரண்டாண்டுகளுக்கு முன்பே எழுந்தது. இதனாலேயே சமச்சீர் கல்வி அமல்படுத்த வேண்டும் எனவும், கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பட்டன. ஆனாலும், தனியார் பள்ளிகள் தங்களுக்குண்டான மவுசை விட்டுக்கொடுக்க தயாரில்லை. சமச்சீர் கல்விக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு எடுத்து வந்த, அதே சமயத்தில், தனியார் பள்ளிகளில் பெரும்பாலானவை, “சி.பி.எஸ்.இ.,’ பாடத்திட்டத்தில் புதிய பள்ளிகள் துவக்கி விட்டன.

இப்பள்ளிகளில் குறைந்தபட்சம், 25 ஆயிரம் முதல், 60 ஆயிரம் ரூபாய் வரை எல்.கே.ஜி., கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. ப்ளஸ் 2 படிப்புக்கென பிரத்யேக பயிற்சியளிக்கும் சிறப்பு பள்ளிகளில், ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அரசு கட்டணம் நிர்ணயித்திருந்தாலும், புத்தக கட்டணம், பஸ் கட்டணம் உள்ளிட்ட இதர செலவினங்களை பட்டியலிட்டு, விரும்பும் கட்டணங்களை வசூல் செய்வதை தனியார் பள்ளிகள் விட்டுக்கொடுப்பதேயில்லை.

இதனால் சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டாலும், கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டாலும், தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளையை தடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் தனியார் கல்லூரிகளில் பட்டப்படிப்புகளில் சேர்ந்தால் கூட, ஆண்டுக்கு அதிகபட்சம், 15 ஆயிரம் ரூபாய் வரையே செலவாகிறது. இன்ஜினியரிங் படிப்புகளை பொறுத்தவரை கவுன்சலிங் மூலம் சேரும் பட்சத்தில், முதல்தர கல்லூரிகளுக்கு, 40 ஆயிரம், மற்ற கல்லூரிகளுக்கு 32 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதில் பெற்றோரின் சுமையை குறைக்க முதல் தலைமுறை குழந்தைக்கான கல்வி உதவித்தொகையும், கல்விக்கடனும் வேறு உதவி செய்கிறது. மேலும் இக்கல்லூரிகளுக்கு தனித்தனியே லேப் வசதி, பேராசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு கூடுதல் வசதிகள் செய்ய வேண்டியுள்ளது.

இவை எதுவும் எல்.கே.ஜி., வகுப்புகளுக்கு தேவைப்படுவதில்லை. ஆனாலும் இன்ஜினியரிங் மற்றும் மேலாண்மை படிப்பை விட, பள்ளிகளில் உள்ள எல்.கே.ஜி., படிப்புகளுக்கான கட்டணத்தை அதிகமாக வசூலிக்கின்றனர்.

எல்.கே.ஜி., மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வாங்க, இரண்டு நாட்களுக்கு முன்பே பெற்றோர் வரிசையில் நிற்கும் நிலை காணப்படுகிறது. ஆனால், அரசு பள்ளியில், கல்விக்கட்டணம், தேர்வுக்கட்டணம் அனைத்தும், அரசே செலுத்தியும், பல்வேறு சலுகைகள் வழங்கியும், மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது. செயல்வழிக்கற்றல் திட்டம், படைப்பாற்றல் கல்வி முறை என புதுப்புது கல்வி முறை அமல்படுத்தியும், அரசு பள்ளி குறித்த எண்ணம் மக்களிடையே மாறவில்லை. தமிழக உயர்கல்வித்துறையில் இந்நிலை தலைகீழாக உள்ளது.

அரசு இன்ஜினியரிங் கல்லூரிகள், அரசு பல்கலைகள், கலை அறிவியல் கல்லூரிகளில் சேரவே அனைத்து தரப்பு மக்களும் விரும்புகின்றனர். இன்ஜினியரிங் படிப்பில் கூட அண்ணா பல்கலை மற்றும் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் சேரவே, பெரும் பணக்காரர்கள் கூட விருப்பம் தெரிவிக்கின்றனர். இதே போல் அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு, செல்வந்தர்களும் அரசு பள்ளியில் சேர்க்கும் நிலை ஏற்பட்டால் மட்டுமே, தனியார் பள்ளிகள் கட்டணத்தை குறைக்கும் என, கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

நன்றி: தினமலர்