- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

மார்க்கப் பண்பு இல்லையென்றால்…..

மார்க்கப் பண்புகளினின்றும் தூர விலகிச் சென்றுவிட்ட சமுதாயங்களில், மக்கள் கீழ் வருமாறு அடிக்கடி கூறுவதை நீங்கள் நிச்சயமாகக் கேட்டிருக்கலாம்; எனக்கு ஏராளமான நண்பர்கள் இருக்கிறார்கள்; ஆனால் ஒருவர் கூட உண்மையான நண்பன் அல்ல. அல்லது என் நண்பர்கள் யாருமே நம்பகமானவர் அல்ல. வெளிப்படையாக நெருக்கமான நண்பர்கள் இருந்தும் இந்த மக்கள் உள்ளூர நண்பர்கள் யாரும் இல்லாதவர்களாகவே உணர்கிறார்கள். மேலும் நம்பகமான ஒரு நண்பனை இவர்கள் காண்பதும் அரிதே.

இந்த உண்மையை உணர்ந்தவர்களாக இந்த மக்கள் நல்ல நட்புறவை உருவாக்க முயற்சி மேற்கொள்வதும் இல்லை. இதற்குக் காரணம் நல்ல நட்புறவு தியாகம் மற்றும் முயற்சியினால் உருவாக வேண்டும் என்பதே ஆகும். தொல்லைகள் எழும்போது, தனி மனிதன் ஒருவன் தன் நண்பர்களுக்காக, தான் தியாகம் செய்ய முன்வரவேண்டும். எவ்விதத் தயக்கமுமின்றி தன் பணத்தையும் தான் விலை மதிப்பு மிக்கது என நினைக்கும் எதையும் தன் நண்பர்களுக்ககாகச் செலவிட முன்வரவேண்டும். ஆனால் மார்க்கக் கோட்பாடுகள் பேணப்படாத சமுதாயங்களில் மக்கள் தியாகம் செய்வதை அர்த்தமற்றதாகவே கருதுகின்றனர்.

உதாரணமாக யாரேனும் திடீரென நோய்வாய்ப்பட்டு விட்டால் அவரது நண்பர் அவரை மருத்துவமனைக்கு அவரது நண்பர் அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதை தொந்தரவு மிக்கதாகவே கருதுவார்; அவரது மருத்துவ சிகிச்சைக்காகப் பணம் செலவழிப்பதையும், அவரோடு மருத்துவமனையில் தங்க நேரிடுவதையும், அவரைக் கவனித்துக் கொள்ள வேண்டியதையும் தொந்தரவாகவே நினைப்பார். வேலைகள் இருப்பதாகவோ, பிள்ளைகளுடன் பள்ளிக்கூடம் செல்ல வேண்டுமென்றும் அல்லது குடும்பத்தோடு இருக்க வேண்டுமென்றும் சாக்குப்போக்குச் சொல்வார்களே அன்றி நண்பனுடன் தங்க முன்வரமாட்டார்கள். ஒவ்வொருவரும் இதை இயல்பான, முற்றிலும் நியாயமான ஒரு போக்காகவே கருதுவதுதான் கவனத்திற்குரியது.

மார்க்கப் பண்புகளுக்கு, முக்கியத்துவம் வழங்காதவர்கள் உண்மையான நண்பர்கள் யாருமின்றி இருப்பதற்கு இதுதான் தலையாய காரணம் ஆகும். அவர்களுடைய வாழ்க்கைத் துணையும் (மனைவி அல்லது கணவனும்) கூட நம்பகமானவர்களாகக் காணப்பெறுவதில்லை; அன்பும் மரியாதையும் குறுகிய காலத்தில் மறைந்துவிடும். நீண்ட நாட்கள் அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ள நேரிட்டால் அது பொருளாதார காரணங்களுக்காக அல்லது சமுதாயக் கட்டாயத்திற்காகவே இருக்கும். சுருக்கமாக கூறுவதானால், திருமணமான தம்பதிகளும் கூட பிரிந்து வாழ்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில் தங்கள் சந்ததியினரையே பெற்றோர்கள் தங்கள் பாதுகாப்புக்கு சார்ந்திருக்கின்றார்கள். ஆனாலும் இதுவும் ஒரு பயனற்ற முயற்சியே ஆகும்; ஏனெனில் அவர்களுடைய சந்ததிகளும் தனி வாழ்க்கையையே மேற்கொண்டுள்ளனர். உலகாயத ஆசைகளாலும் தன்னல ஆர்வங்களாலும் இவர்களும் தங்கள் பெற்றோர்களுக்கு உதவ முன்வருவதில்லை. இதன் விளைவாக, மார்க்க நெறி முறைகளைப் பேணாத மக்கள் இவ்வுலகில் தன்னந்தனியாகவே வாழும் கதிக்கு ஆளாகிறார்கள்; அவர்களுடைய மனப்போக்கு விளைவிக்கும் இயல்பான பலன் இது.

 

மூலம்: ஹாரூன்யஹ்யா – தமிழாக்கம்:  H.அப்துஸ்ஸமது, இன்ஜினியர்.