Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

July 2011
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,842 முறை படிக்கப்பட்டுள்ளது!

வாழ்நாள் நீட்டிக்கப்பட வேண்டுமா ?

 அதிரை ஏ.எம்.பாரூக்

وَاتَّقُواْ اللّهَ الَّذِي تَسَاءلُونَ بِهِ وَالأَرْحَامَ إِنَّ اللّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

…எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். திருக்குர்ஆன் 4:1 

 உறவைப் பேணி வாழுங்கள் என்றும் உறவுகளை அலச்சியம் செய்யும் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் என்றும் சாதாரண உபதேசமாக அல்லாமல் எச்சரிக்கையாகவே விடுக்கிறது இஸ்லாம்.

 உறவினர்களுக்கு ஸலாம் சொல்வதும், அவர்களை நலம் விசாரிப்பதும், அவர்கள் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வதும், இறுதிச் சடங்கில் கலந்து கொள்வது மட்டும் தான் உறவைப் பேணுதல் என்று நினைத்து விடாமல் இறைவன் நமக்கு கொடுக்கின்ற பொருளாதாரத்திலிருந்தும் உறவினர்களில் நலிவடைந்தோருக்கு வாழ்வாதார வசதிகளை செய்து கொடுத்து அவர்களின் வாழ்க்கை தரத்தை  முன்னேற்றி விடச் சொல்கிறது இஸ்லாம்.

 திருமறைக்குர்ஆனில் 2:83, 2:177, 2:215, 4:1, 4:36, 8:75, 16:90, 17:26, 30:38, 42:23, 47:22, 59:7, 90:15 போன்ற வசனங்களில்; இறைவன் வலியுருத்திக் கூறுகிறான்.

 மனிதர்கள் இவ்வுலகில் நிறைந்த பொருள்வளத்துடன் நீண்டகாலம் வாழவேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்காக ஓடியாடி உழைத்து செல்வத்தைக் குவித்து வைத்துக் கொண்டு திட்டங்கள் பல தீட்டி அதில் வித விதமாக சுகமனுபவித்து வாழ்ந்து வருகின்றனர்.  

இப்படிப் பட்டவர்களின் உடல் நலத்தில் சிறிது மாற்றம் ஏற்பட்டு விட்டால் இத்தனை செல்வங்களையும் உலகில் விட்டு விட்டு திடீரெனப் போய் விடுவோமோ என்ற அச்சத்தால் ஆயுளை கெட்டியாக்கிக் கொள்வதற்கு உயர் ரக ஆஸ்பத்திரயைத் தேடி மூலை முடுக்குகளுக்கெல்லாம் ஓடுவார்கள், அதில் முன்னேற்றம் கிடைக்கவில்லை என்றால் பிரசித்திப் பெற்ற(?) அவ்லியாக்களிடம் அடைக்கலம் புகுவார்கள், தாயத்து தட்டுத் தகடுகள் மூலம் மலக்குல் மௌத்துக்கு ( உயிரை எடுக்க வரும் வானவருக்கு ) தடுப்பு சுவர் போடுவதற்காக (?) மாந்திரீகர்களிடம் தஞ்சம் புகுவார்கள்.  

 அவர்கள் எந்தெந்த வழிகளில் என்னமாய் ஓடினாலும் எதுவும் பலனளிக்காமல் இறுதியாக விதியில்  எழுதப்பட்ட விதம் அவர்களின் கதை முடிந்து விடுவதையும் பார்க்கிறோம். 

”நீங்கள் எங்கே இருந்த போதும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே… திருக்குர்ஆன் : 4:78.

 ரணம் அவர்களின் வாழ்வாதாரமும், வாழ் நாளின் முடிவும் ஏற்கனவே விதியில் எழுதப்பட்டு விட்டதால் அதை எந்த மருத்துவராலும், எந்த அவ்லியாவாலும், எந்த மாந்திரீகராலும் மாற்ற முடியாது, மாற்றியதில்லை அங்கெல்லாம் சென்றவர்களில் ஏராளமானோரின் முடிவு படுதோல்வியில் முடிந்ததைப் பலர் அறிவர். 

…எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டு விட்டன ஏடுகள் காய்ந்து விட்டன. என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். திர்மிதி.

எழுதியவனே மாற்றி எழுதுவான் 

 உயிர் பிச்சைக்காகவும், உடல் ஆரோக்கியத்திற்காகவும் நாள் கணக்கில், மாத கணக்கில் அவ்லியாக்களின் கப்ருகளிலும், ஆஸ்பத்திரியின் வார்டுகளிலும் காலத்தைக் கழிப்பவர்கள் கத்தைக் கத்தையாக கரன்சிகளை வாரி இறைப்பவர்களில் பலர் உறவினர்களின் வறுமையைப் போக்குவதற்காக சிறிது தொகையையும், அவர்களின் தேவையை நிறைவேற்றிக் கொடுப்பதற்காக சிறிது நேரத்தையும் ஒதுக்க மாட்டார்கள். இவ்வாறு செலவிடுவதால் நேரத்தை ஒதுக்கி அலைவதால் என்ன பலன் கிடைக்கப் போகிறது என்றே அலச்சியம் செய்வார்கள். ஆனால் அதில் எண்ணிப் பார்க்க முடியாத பலன் இருப்பதை அவர்கள் அறிவதில்லை.

 இறைவன் நமக்கு தரக்கூடிய பொருளாதாரத்திலிருந்து சிறிதை தனது பெற்றோர், உற்றார் உறவினர்களுக்கு செலவிட்டு சிறிது நேரத்தை ஒதுக்கி அவர்களின் தேவையை நிறைவேற்றிக் கொடுத்து அவர்களுடன் இணக்கத்துடன் வாழ்ந்து வந்தால் உயர் ரக ஆஸ்பத்திரியை தேடி ஓட வேண்டிய தேவை இல்லாமல், பிரசித்திப்பெற்ற(?) தர்வாவில் அடைக்கலம் புக வேண்டிய அவசியமில்லாமல் அவர்களின் வாழ்வாதாரத்தையம், வாழ் நாளையும் வல்லோன் இறைவன் நீட்டித்துத் தருவதாக இறைநம்பிக்கையாளர்களுக்கு இறைவனின் தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். 

தம் வாழ்வாதாரம்(ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்களும், அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களும் அறிவிக்கின்றனர். புகாரி 5985, 5986. 

உறவுகளைப் பேணி வாழாவிட்டால் விதியில் எழுதியபடி மட்டும்  நடக்கும் வேறொன்றும் நிகழாது என்று எண்ணி விட்டு விடக்கூடாது அவ்வாறு எண்ணி உறவுகள் விஷயத்தில் அலச்சியம் காட்டுபவர்கள் இன்று மிகைத்திருப்பதைப் பார்க்கிறோம். அவ்வாறு நினைத்தே பலர் அற்ப காரணங்களுக்காக அறுபட முடியாத தொப்புள் கொடி உறவையும் கூட அற்பமாக எண்ணி அறுத்துவிட முணைகின்றனர். இப்படிப்பட்டவர்களிடம் இறைவனும் அவர்களுடனான உறவை உலகில் முறித்துக் கொள்வதாக இறைத்தூதர்(ஸல்)அவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.  

உறவு (ரஹிம்) என்பது, அளவிலா அருளாளன் (ரஹ்மான்) இடமிருந்து வந்த (அருட்கொடை) கிளையாகும். எனவே, இறைவன் (உறவை நோக்கி) ‘உன்னோடு ஒட்டி வாழ்பவனுடன் நானும் உறவு பாராட்டுவேன். உன்னை முறித்துக் கொள்பவனை நானும் முறித்துக்கொள்வேன்” என்று இறைவன்  கூறியதாக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புகாரி 5988.

 உறவு (இறையருளின்) ஒரு கிளையாகும் எனவே, ‘அதனுடன் ஒட்டி வாழ்வோருடன் நானும் உறவு பாராட்டுவேன். அதை முறித்துக் கொள்கிறவரை நானும் முறித்துக் கொள்வேன்” (என்று உறவைப் படைத்தபோது இறைவன் சொன்னான்). என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” புகாரி.5989

 அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையயோனுமாகிய அகில உலக அதிபதியாகிய அல்லாஹ்வுடனான உறவு உலகில் அவனுடைய அடியானுக்கு முறிந்து விட்டால் நியாயத் தீர்ப்பு நாளில்  அவனுடைய நிலை என்னவாகும் ? என்பதை எண்ணிப் பார்க்க கடமைப் பட்டுள்ளோம்.   

 உறவை முறித்துக் கொள்பவர்கள் மீது இறைவனின் கோபம் இருப்பதை அறிந்த அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தங்களை ஒதுக்கி வாழ்ந்த தங்களுடைய குடும்பத்தார்களிடம் நீயா ? நானா ? என்று ரோஷம் பாராட்டாமல் அவர்களே வழியச் சென்று உறவை புதுப்பித்துக் கொள்வார்கள் தங்கள் தோழர்களையும் அவ்வாறே நடந்து கொள்ள உபதேசம் செய்தார்கள்.  

பதிலுக்கு பதில் உறவாடுகிறவர் (உண்மையில்) உறவைப் பேணுகிறவர் அல்லர்; மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகிறவரே உறவைப் பேணுபவராவார். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி 5991. 

அபூ ஹூரைராவே நற்குங்களை மேற்கொள்வீராக ! என்று என்னிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்  கூறியதும் இறைத்தூதர் அவர்களே! எவ்வாறு நான் நற்குணங்களைப் பேணுவது என்று கேட்டேன் அதற்கவர்கள் உன்னைத் துண்டித்து வாழ்பவருடன் நீ சேர்ந்து வாழ், உனக்கு அநீதம் செய்தவரை மன்னித்து விடு, உனக்கு தர மறுத்தவருக்கு நீ கொடுத்து உதவு என்று கூறியதாக அபூ ஹூரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். நூல் : பைஹகீ 

உலகில் ஒரு முறை பிறந்து விட்டால் மீண்டும் பிறக்கப் போவதில்லை அதனால் அடுத்து பிறக்கும் பொழுது பார்த்துக் கொள்வோம் என்று உறவுகளை தள்ளி வைக்க முடியாது.

 அதேப் போன்று எப்பொழுது உலகிலிருந்து விடை பெறுவோம் என்ற அறிவும் நமக்கு கொடுக்கப்படாததால் உறவுகள் விஷயத்தில் தாமதப் படுத்த முடியாது.

 செல்வ செறுக்குடனும், திடகாத்திரமான ஆரோக்கியத்துடனும் வாழும் காலத்திலேயே உற்றார், உறவினர்களில் வறியோருக்கு இயன்றளவு வாழ்வாதார வசதிகளை செய்து கொடுத்து அவர்களின் மீது அன்பைப் பொழிந்து இணைந்து வாழ முயற்சிக்க வேண்டும்.

 பாவங்கள் மன்னிக்கக் கூடிய புனித ரமளான் மாதம் மிகவும் அன்மித்து விட்டதால் நற்செயல்களை இப்பொழுதே தொடங்கி விடுவோம்.  

 எழுதியபடி என்னையும், வாசித்தபடி உங்களையும் உறவுகளைப் பேணி அல்லாஹ்வின் அருளை அடைந்து கொள்ளும் நன் மக்ககளாக வல்ல அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக !