- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

சாப்பிடுவதைப் பாருங்கள்.. நல்ல மாப்பிள்ளை கிடைப்பார்..’

சாப்பிடுவதைப் பாருங்கள்.. நல்ல மாப்பிள்ளை கிடைப்பார்..’

உணவு குறித்த ஒருவரின் மனோபாவம், சாப்பிடும் விதத்தை கவனிப்பதன் மூலம் அவரின் நடத்தை, குணாதிசயங்களை கணித்திட முடியும் என்கிறார்கள், வல்லுனர்கள். `சாப்பாட்டு மேஜையில் குளறுபடியானவராகவும், பிரச்சினைக்குரியவராகவும் நடந்து கொள்பவர் நிஜத்திலும் அப்படித்தான் இருப்பார்’ என்கிறார், புகழ்பெற்ற மேலை நாட்டு எழுத்தாளர் ஒருவர். `உணவைப் பெறுவது, சாப்பிடுவது போன்ற விஷயங்களில் சீடர் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை வைத்தே அவர் நல்லவரா? கெட்டவரா? என்பதை அறிந்து, தனக்கான சீடர்களை அந்த காலத்தில் முனிவர்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்’ என்கிறார், டெல்லியைச் சேர்ந்த பிரபல நட்சத்திர ஹோட்டல் `செப்’ மஞ்சித் எஸ்.கில்.

“முடியும்..! அதனால்தான் இன்று நிறைய பேர் மாப்பிள்ளை, பெண் பார்ப்பதற்கு பிரபலமான ரெஸ்டாரண்ட்களை தேடி வருகிறார்கள்”- என்கிறார், சேமியர்ஸ் டஸ்கானா ரெஸ்ட்டாரண்ட் டின் விபின் சச்தேவ்.

அவரே ருசிகரமான சம்பவம் ஒன்றையும் விளக்குகிறார்.

“பிரபலமான குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காக குன்னூர் சென்றோம். வெளியூரில் உள்ள மாப்பிள்ளை பையன், அங்குள்ள உயர்தர ஹோட்டலுக்கு வந்தார். பெண் வீட்டு சார்பில் நாங்கள் ஏழெட்டு பேர் அங்கு சென்றி ருந்தோம்.

மாப்பிள்ளை பையனும், பெண்ணும் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். பையனை, பெண்ணின் அம்மா உற்று கவனித்துக்கொண்டிருந்தார். அப்போது உணவு ஆர்டர் எடுப்பதற்காக `வெயிட்டர்’ வந்தார். சீருடையில் வந்த அவரைப் பார்த்ததும் மாப்பிள்ளை பையன் ஏதோ பொறிதட்டியதுபோல் அருகில் சென்று விசாரித்தார். பின்பு இருவரும் கட்டிப் பிடித்துக்கொண்டார்கள். இருவரும் பள்ளித் தோழர்களாம். பத்து வருடத்திற்குப் பிறகு அவர்கள் சந்தித்திருக்கிறார்கள்.

வெயிட்டரை தனது பால்ய நண்பன் என்று எல்லோருக்கும் அறிமுகம் செய்துவைத்த மாப்பிள்ளை பையன், யார்- யாருக்கு என்னென்ன உணவு தேவை என்பதைக் கேட்டு, சில உணவுகளைப் பற்றி விளக்கமும் கொடுத்தார். சிறிது நேரத்தில் உணவு வந்தது.

தனது நண்பன் கொண்டுவந்த உணவு பிளேட்களை தானே வாங்கி, அங்கே இருந்தவர்களில் வயதானர்களுக்கு முதலில் தனது கையாலே கொடுத்தார். வரிசையாக ஒவ்வொருவருக்கும் கொடுத்துவிட்டு, அந்தப் பெண்ணுக்கும் கொடுத்துவிட்டு கடைசியில் தனக்கு எடுத்துக்கொண்டார்.

பேசிக்கொண்டே நிதானமான எல்லோரும் சாப்பிட்டார்கள். ஒவ்வொரு உணவாக சுவையறிந்து அந்த பையன் சாப்பிட்டார். தேவையான அளவு மட்டுமே உணவினை எடுத்துக் கொள்ளவும் செய்தார். அனைவருக்கும் என்னென்ன தேவை, எல்லோரும் சாப்பிடுகிறார்களா என்றும் கவனித்துக்கொண்டார். எல்லோரும் சாப்பிட்டு முடித்தார்கள்.

அத்தனையையும் பார்த்துக்கொண்டிருந்த பெண்ணின் அம்மாவிடம் நான், `என்ன பையனைப் பிடித்திருக்கிறதா?’ என்று கேட்டேன். `அவர் நட்புக்கு கொடுத்த மரியாதை, உணவை ஆர்டர் செய்த விதம், மற்றவர்களுக்கு முதலில் பரிமாறியது எல்லாமே பக்குவமான பையனாகக் காட்டியது. அருகில் இருக்கும் ஒவ்வொருவர் சாப்பிடுவதையும் கவனித்து, அவர்களுக்கு தேவையானவைகளை எடுத்துக்கொடுத்தார். அவர் நிதானமாக சாப்பிட்ட முறையும், மேஜையில் நடந்துகொண்ட விதமும் அவரை பொறுப்புள்ளவனாக காட்டியது. அதனால் எனக்கு பையனை பிடித்துவிட்டது’ என்றார். மகளும் அதையே சொல்ல, கடந்த பத்து நாட்களுக்கு முன்பு அந்த திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது.

இந்த உண்மையை நம்ம ஊர் முனிவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்து சீடர்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அதனால்தான் இப்போது பெரும்பாலானவர்கள் பெண் பார்ப்பதற்கும், மாப்பிள்ளை பார்ப்பதற்கும் ஹோட்டலுக்கு வந்துவிடுகிறார்கள். பையனோ, பெண்ணோ எப்படிப்பட்டவர்கள் என்பதை சாப்பிடும் விதத்திலே அறிந்து கொள்கிறார்கள்…” என்று கூறும் விபின் சச்தேவ், சாப்பிடும் விஷயத்தை வைத்து ஒருவரை எப்படி கணிக்கவேண்டும் என்ற டிப்சையும் தருகிறார்.

 இப்படி வெகுநீளமாக `மனோதத்துவ’ ரீதியான கணிப்பு உண்மைகளை வெளியிடும் இவர், “இந்திய உணவகங்கள் மன அழுத்தத்தை அகற்றும் மையங்களாக செயல் படுகின்றன. ஒரு நாள் முழுவதும் பல்வேறு மன அழுத்தத்தில் வேலை பார்ப்பவர்கள் அதை எல்லாம் அகற்ற வேண்டும் என்றால் பேச வேண்டும், ருசிக்க வேண்டும், மகிழ வேண்டும். அதற்காக அவர்கள் ஹோட்டல்களைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். அதனால் ஹோட்டல்களின் பொறுப்புகள் சுவையான உணவு வழங்குவது மட்டுமல்ல, அதையும் தாண்டி உறவுகளை மேம்படுத்தி மனிதர்களின் மன உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்து கிறது. இந்தியாவில் உணவுப் புரட்சி ஏற்பட இதுதான் முக்கிய காரணம்..” என்கிறார்.

`சாப்பிடும் முறையில் குணங்கள் தெரியும்..’

சாப்பிடுபவர்களின் குணநலன்களை அறிவது பற்றி சவேரா ஹோட்டலின் மக்கள் தொடர்பு மேலாளர் நவோமியிடம் சில கேள்விகள்:

ஆத்திரம், அவசரம், கோபம் கொண்டவரை, அவர் சாப்பிடும் முறையில் கண்டு பிடித்துவிட முடியுமா?

“முடியும். ஹோட்டலுக்கு வரும் ஒருவர் பசியுடன், அவசரமாக ஆர்டர் கொடுத்தால் அவரது முக பாவனை செயல்பாடுகளை வைத்து அவர் விரைவாக சாப்பிட்டுவிட்டு செல்ல விரும்புகிறார் என்பதை தெரிந்துகொள்ளலாம். அவர் பிசியான மனிதராகவும் இருக்கலாம். சாப்பாட்டு மேஜை யில் கோபமாக ஒருவர் நடந்துகொள்கிறார் என் றால் அவரிடம் சுயநலம் இருக்கும். தன்னை மற்றவர்கள் கவனிக்கவேண்டும் என்று விரும்பு கிறவர்களும் கோபத்தைக் காட்டுவார்கள். அவர் களுக்கு பொறுமை இருக்காது. மற்றவர்களின் உணர்வு களை புரியத் தெரியாதவர்களாகவும் இருப்பார்கள். கோபதாபம் எதுவும் இன்றி அமைதியான மனதுடன் இருப்பவர் உணவை ரசித்து, ருசித்து சாப்பிடுவார். ஒரு வெயிட்டரால் தனது வாடிக்கையாளர் என்ன குண நலன்களை கொண்டவர் என்பதை அறிந்திட முடியும். மற்றவர்களாலும் முயன்றால் முடியும்”

ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துபவர், பட்ஜெட் போட்டு செலவிடுபவர்களை எப்படி கண்டறிவது?

“ஒரு விருந்தாளி மெனுவில் உள்ள உணவுப் பொருட்களின் விலையைப் பார்த்துக் கொண்டே தேர்வு செய்தால் அவர் பட்ஜெட் போட்டு வாழ்பவராக இருக்கலாம். எந்த வகை உணவை தேர்வு செய்கிறார் என்பதை வைத்து அவர் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத் துவம் கொடுப்பவரா அல்லது ருசிக்கு முக்கியத்துவம் கொடுப்பவரா என்பது தெரிந்து விடும். விலை, தயாரிப்பு முறை, ஆரோக்கியம் என்று எதையும் பார்க்காமல் தாராளமாக ஒருவர் ஆர்டர் கொடுக்கிறார், செலவிடுகிறார் என்றால் அவர் தனக்கு மிக முக்கிய மானவர்களை ஹோட்டலுக்கு அழைத்து வந்திருக்கிறார் என்று தெரிந்துகொள்ளலாம்”

தானாகவே ஆர்டர் செய்பவருக்கும், வெயிட்டரிடம் ஆலோசனைகேட்டு ஆர்டர் கொடுப்பவருக்கும் மனதளவில் என்ன வித்தியாசம் இருக்கும்?

“பயண அனுபவம் கொண்டவர்கள் குறிப்பிட்ட உணவை கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அந்த உணவை அவர் வெளிநாடுகளில் ஏற்கனவே சாப்பிட்டிருக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட உணவுகளை வாங்கி விதவிதமாக ருசிப்பவர்கள் உணவுப் பிரியர்களாக இருப் பார்கள். வெயிட்டரிடம் ஆலோசனை கேட்டு விபரங்கள் தெரிந்துகொண்டு ஆர்டர் செய்கிற வர்களிடம், அதுஅதற்குரியவர்களிடம் கருத்துக் கேட்டு முடிவுசெய்யும் குணம் இருக்க வாய்ப்பிருக்கிறது”

சிறந்த வளர்ப்புமுறை, நாகரீகம் போன்றவை ஒருவரிடம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை அவர் சாப்பிடும் முறையில் கண்டறியலாமா?

“சாப்பாட்டு மேஜையில் ஒருவர் வந்து அமர்வது முதல், அவர் சாப்பாட்டை முடித்துவிட்டு எழுந்து செல்வதுவரையிலான அனைத்து விஷயங்களையும் கூர்ந்து கவனித்தால் அவரு டைய வளர்ப்புமுறை, நாகரீகம், குணநலன், இயல்பு, மற்றவர்களுக்கு மதிப்பு கொடுக்கும் மனநிலை போன்ற அனைத்தையும் தெரிந்துகொள்ளலாம். சாப்பிட்டு முடிந்த பின்பு வெயிட்டருக்கு நன்றி தெரிவிப்பதும், உணவின் சுவையைப் பற்றி பாராட்டுவதும் ஒருவரிடம் இருந்தால் அவரிடம் எல்லோரையும் மதிக்கும் பண்பு இருக்கும். அவர் எங்கே திறமை இருந்தாலும் அதை தேடிவந்து பாராட்டுபவராக இருப்பார்.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. கனிவான உபசரிப்பு என்ற கலையில் இந்தியா உலகிற்கே முன்னோடி. ஒருவர் என்ன மனநிலையில் சாப்பிட வருகிறார் என்றாலும், அவரை நல்ல மனநிலைக்கு மாற்றும் விதத்தில் அன்புடன் நாம் செயல்படுவதால்தான், இந்திய ஹோட்டல் உணவுத்துறை உலக அளவில் பெருமைக் குரியதாக இருக்கிறது..”-என்கிறார்.

நன்றி-தினத்தந்தி