- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

ஆப்பிளின் ஐ-பேடுக்குப் போட்டி

சில வாரங்களுக்கு முன் அமேசான் iCloud Drive சேவையை வெளியிட்டபோதே, அவர்கள் குளிகைக் கணினியைத் தயாரித்துக்கொண்டு இருக்கலாம் என்பதை யூகித்தேன். குளிகை தயாரிக்கும் திட்டம் பற்றி வாய் திறக்காமல் இருந்த அமேசான், இன்னும் சில மாதங்களில் குளிகை வெளியிடப்போவதாக அறிவித்து இருக்கிறது. ஆப்பிளின் ஐ-பேடுக்குப் போட்டியாக இருக்கும் என்று பரவலாகப் பேசப் பட்டாலும், அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. காரணம்?

முக்கியமாக, விலை! இந்தக் குளிகையை ஐ-பேடைவிடக் குறைவான விலையில் விற்றாக வேண்டும். கணிசமாகக் குறைவான விலை. (அற்புதமாக இருந்த மோட்டரோலாவின் Xoom குளிகை பயங்கரத் தோல்வியைச் சந்தித்ததற்கு மிக முக்கியக் காரணம், விலைதான்!) விலை குறைத்து விற்பது என்பது அமேசானுக்குப் பழக்கமான மாடல்தான். அவர்களது கிண்டில் சாதனத்தை நஷ்டத்துக்கு விற்பது என்பது அவர்களது பிசினஸ் பிளான். மின் புத்தகம் மற்றும் பத்திரிகைகள் போன்ற digital content சமாசாரங்களை கிண்டில் பயனீட்டாளர்களுக்கு விற்பதன் மூலம் சாதன விற்பனை நஷ்டத்தை ஈடு செய்து விடலாம் என்ற திட்டம் சிறப்பாகவே நிறைவேறியதைச் சென்ற இரண்டு ஆண்டுகளில் பார்த்தோம். இதற்கு மாறான திட்டம், ஆப்பிளுடையது. சாதனங்களை விற்பதற்காக, digital content ஐ இலவசமாகவோ, அல்லது அடிமாட்டு விலைக்கோ கொடுப்பது அவர்களது திட்டம். இதுவும் பிரமாண்ட வெற்றியைக் கொடுப்பதை நான் சொல்லி, நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது இல்லை!

கிண்டில்போல மின் படிப்பானாக மட்டுமே இந்தக் குளிகை இருக்காது. கூகுளின் ஆன்ட்ராய்டில் இயங்கும் இந்தக் குளிகையில் மென்பொருள்களைப் பதிவேற்றிக்கொள்ளலாம். இது மடிக்கணினிக்கு நிகரானதாக இருக்கும் என்கிறது அமேசான். இன்னொரு விதத்தில் சொல்லப்போனால், ஐ-பேடுக்குப் போட்டியாக இருக்கும்.

குளிகை விற்க இலவச content என்பது ஒரு புறமும் content விற்க விலை குறைந்த குளிகை என்பது மறு புறமும் இருந்தால், அமேசானின் மாடல் வெற்றியடைய வாய்ப்புகள் குறைவு என்றே எனக்குத் தோன்றுகிறது. இதைச் சமாளிக்க ஒரே வழி, விலையைக் கூட்டுவது. அப்படிச் செய்தால், Xoomன் கதி அமேசான் குளிகைக்கும் ஏற்படலாம். தான் எடுத்த முயற்சிகளில் போராடி வெற்றி பெறும் வரலாறு அமேசானுக்கு உண்டு. மேகக்கணினியத் தொழில்நுட்பத்தில், ஆப்பிள், கூகுள் போன்ற ஜாம்பவான்கள் நுழையும் முன்னரே, அழுத்தமாகத் தனது பெயரைப் பதித்து, தொடர்ந்து வளர்ந்து வருகிறது இந்தப் ‘பழைய’ இணைய நிறுவனம். குளிகைத் துறையில் என்ன/எப்படி செய்யப்போகிறது என்பதை அக்டோபர் மாதவாக்கில் தெரிந்துகொள்ளலாம்.

உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட பயனீட்டாளர்கள் இணையத்தில் இயங்குகிறார்கள். அதில் முக்கால்வாசி ஃபேஸ்புக்கில் இருக்கிறார்கள் என்பது போன்ற புள்ளிவிவரங்கள் அத்தனை முக்கியம் இல்லை. காரணம், பொருளாதாரம் பயின்றவர்களுக்கு, ‘Law of diminishing returns’ என்ற விதி நன்றாகத் தெரிந்திருக்கும். முதலீட்டு எண்ணிக்கை அதிகரிக்கும்போது, அதற்குத் தகுந்தபடி விளைவு அதிகரிப்பது இல்லை. அதற்கு மாறாக, குறையத் தொடங்கும் என்பதுதான் இந்த விதியின் சாராம்சம். தெளிவாகத் தெரிந்துகொள்ள, இந்த விதிபற்றிய விக்கி உரலியைச் சொடுக்குங்கள் http://en.wikipedia.org/wiki/Diminishing_returns. சமூக ஊடகத்தில் அதிக அளவில் பயனீட்டாளர்கள் இணையும்போதும், இதே விதியின்விளைவு நிகழும் என்பது உறுதி.

அதே வேளையில், டெக் உலகின் ட்ரெண்டுகளைக் கூர்ந்து கவனித்து வருபவர்களுக்கு ஒன்று தெளிவாகப் புலப்படும். எந்த ஏரியாவில் (முக்கிய மாக கவனிக்கவும்… எந்த நிறுவனத் தில் அல்ல! எந்த ஏரியாவில்) தொழில் முதலீடு அதிக அளவில் செய்யப் படுகிறதோ, அந்த ஏரியாவில் ஆராய்ச்சிகளுக்காக அதிகம் செலவழிக்கப்படும். அதிகமானவை தோல்வியில் முடிந்தாலும், புதிய முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்படும். 90-களில் ஈகாமர்ஸ் ஏரியாவுக்கு தண்ணீராய் அனுப்பப்பட்ட தொழில் முதலீட்டுப் பணம் தான், ஈபே, அமேசான் போன்ற பிரமாண்ட நிறுவனங்களை நிறுவவும், அவை வணிகம் என்பதன் அடிப்படை யையே மாற்றவும் பயன்பட்டது.

வீடியோ ஏரியாவில் செலுத்தப்பட்ட முதலீடு YouTube, BrightCode போன்ற நிறுவனங்களும் அவற்றின் தொழில்நுட்பங்கள் பயனீட்டாளர்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்தது!

ஏன் சொல்கிறேன் என்றால், இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் சமூக ஊடகத் தொழில்நுட்பங்களுக்காகச் செலுத்தப்பட்டு இருக்கும் தொழில் முதலீடு 2.5 பில்லியன் டாலர்கள்.

நன்றி: – விகடன்