- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

ஏட்டுப் படிப்பு எல்லாமாகாது!

வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 11

ஒரு நகரத்தில் ஒரு வணிகர் இருந்தார். அவர் படிப்பறிவில்லாதவர். அவர் கடையில் விற்காத பொருள்கள் குறைவு. எல்லாவற்றையும் தன் கடையில் வாங்கி வைத்திருந்து விற்பார். சில பொருட்கள் அவர் கடையில் மட்டுமே கிடைக்கும் என்கிற அளவுக்கு பிரபலமாக இருந்தானர். பல வருடங்களாக வெற்றிகரமாக வியாபாரம் நடத்தி வந்த அவர் உடல்நிலை தளர ஆரம்பித்தது. கண்பார்வை மங்க ஆரம்பித்தது. காதுகளும் சரியாக கேட்காமல் போகவே தன் தொழிலை மகனிடம் ஒப்படைக்க நினைத்தார். மகனை நிறைய படிக்க வைத்திருந்தார். படித்து முடித்து மகன் பெரிய நகரத்தில் வேலையில் இருந்தான்.

அவரது கடை லாபத்தில் பத்து சதவீதத் தொகையைக் கூட சம்பளமாக வாங்காத மகனிடம் அந்த வேலையை விட்டு வந்து கடையைப் பார்த்துக் கொள்ள சொன்னார். மகனும் வந்தான். தந்தை வியாபாரம் நடத்தும் முறையைக் கண்ட மகன் சொன்னான். “அப்பா இப்போது உலகமெங்கும் பொருளாதாரம் சரிவடைய ஆரம்பித்துள்ளது. அமெரிக்க பொருளாதாரமே ஆட்டம் கண்டு விட்ட நிலையில் நம் நாடெல்லாம் ஒரு பொருட்டல்ல. வரப் போகும் காலத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லா விட்டால் பிற்காலத்தில் நிறைய கஷ்டப்பட வேண்டியதாகி விடும்”

அவர் பயந்து போனார். இப்போதைய உலகப் பொருளாதார நிலையை அவர் அறியாதவர். அமெரிக்கா பணக்கார நாடென்று கேள்விப்பட்டிருக்கிறார். அந்த நாடு கூட பொருளாதார சரிவை சந்தித்திருக்கின்றதென்றால் நிலைமை பூதாகரமானதாகத் தான் இருக்க வேண்டும். அவரோ தன் சொந்தத் தொழில் தவிர வேறு எந்த பொது அறிவும் இல்லாதவர். அறிவாளிகளோடு அதிக பழக்கமும் இல்லாதவர். வியாபாரம் ஒன்றே கதி என்றிருந்தவர். மகனோ மெத்தப் படித்தவன். பல டிகிரிகள் வாங்கியவன். உலக நடப்புகள் தெரிந்தவன்.

“மகனே என்ன செய்ய வேண்டும் என்று சொல்”

“இப்படி தேவையில்லாமல் கண்ட கண்ட பொருள்கள் எல்லாம் வாங்கி விற்கிற வேலை எல்லாம் வேண்டாம். அதெல்லாம் ஆபத்தானது”

”இத்தனை நாட்கள் அப்படி செய்து தானே மகனே இத்தனை சொத்து சேர்த்திருக்கிறேன்”

”அப்பா அந்தக் காலத்தில் எப்படியோ என்னவோ செய்து நிறைய சம்பாதித்து விட்டீர்கள். அந்தக் காலம் போல் அல்ல இந்தக் காலம். இப்போது காலம் மாறி விட்டது. காலத்தை அனுசரித்து நாம் மாறா விட்டால் நாம் நஷ்டப்பட வேண்டி வந்து விடும்”

பயந்து போன அவர், ”சரி மகனே நீ எப்படி குறைக்க வேண்டுமோ குறைத்துக் கொள்” என்றார்.

தந்தையின் வாணிபத்தில் மகன் தன் அறிவுக்கு எட்டாத, தன் விருப்பத்திற்கு ஒவ்வாத பொருள்களை எல்லாம் வாங்கி விற்பதை நிறுத்தி விட்டான். ஒரு காலத்தில் கிடைத்தபடி எல்லாப் பொருள்களும் இந்தக் கடையில் கிடைக்கும் என்ற நிலை இல்லை என்பதால் பெரும்பாலோர் அந்தக் கடைக்கு வந்து பொருள்கள் வாங்குவதை நிறுத்திக் கொண்டார்கள். வேறு கடைகளுக்குச் செல்ல ஆரம்பித்தனர். நாளாவட்டத்தில் வியாபாரம் சரிந்து கொண்டே வந்தது.

மகன் தந்தையிடம் சொன்னான். “அப்பா நான் சொன்னபடி வியாபாரம் குறைய ஆரம்பித்து விட்டது பார்த்தீர்களா? முதலிலேயே நான் எச்சரிக்கை செய்து நாம் ஜாக்கிரதையாக இருந்ததால் பெரிய நஷ்டப்படாமல் தப்பித்தோம். நீங்கள் முன்பு செய்து வந்த மாதிரியே நாம் இப்போதும் வியாபாரம் செய்து வந்திருந்தால் விற்பனை இல்லாமல் பொருள் தேங்கி நாம் நிறைய நஷ்டப்பட்டிருப்போம்.”

அந்த வணிகருக்கு ஆமென்று பட்டது. என்ன இருந்தாலும் படித்தவன் படித்தவன் தான் என்று நினைத்துக் கொண்டார்.

மேலே சொன்ன உதாரணத்தில் அந்த வணிகரின் தொழிலின் வெற்றிக்கு ஒரு முக்கியமான அடிப்படைக் காரணம் இருந்தது. மற்ற கடைகளில் கிடைக்காத பொருட்களைக் கூட தன் கடையில் அவர் தருவித்து வைத்திருந்ததால் அவர் கடையைத் தேடி வரும் வாடிக்கையாளர்கள் நிறைய பேர் இருந்தனர். அவர்கள் அந்த பொருட்களுடன் மற்ற இடங்களில் கிடைக்கும் பொருட்களையும் கூட ஒரே இடத்தில் இதையும் வாங்கிக் கொள்ளலாம் என்று வாங்கிச் சென்றதால் வியாபாரம் செழித்தது.

ஆனால் மகன் அதி மேதாவியாய் உலகப் பொருளாதார அளவில் சிந்தித்து அதற்கும் தந்தையின் வாணிபத்திற்கும் முடிச்சு போட்டு அதன் மூலம் ஏதோ ஒரு முடிவெடுத்தது முட்டாள்தனம். அதற்கு பதிலாக கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் எத்தகையவர்கள், அவர்கள் தேவைகள் என்ன, எதனால் மற்ற கடைகளை விட்டு இங்கு வருகிறார்கள் என்ற வியாபார அடிப்படை அறிவில் சிந்தித்திருந்தால் வியாபார விருத்தி ஏற்பட்டிருக்கும். ஒழுங்காக சென்று கொண்டிருந்த வியாபாரத்தைக் கெடுத்ததுமல்லாமல் தான் அதைப் பெரிய நஷ்டத்திலிருந்து காப்பாற்றியதாக மகன் நினைத்ததும், தன் சொந்த அறிவையும் அனுபவத்தையும் விட மகன் அப்படி சொன்னதை அந்த தந்தை நம்ப ஆரம்பித்ததும் தான் வேடிக்கை.

பலரது கல்வி அவர்களுக்கு அதி மேதாவிகள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறது. அதிகம் படித்திருந்தால், பெயர் போன கல்விக்கூடங்களில் படித்திருந்தால் அத்தனை அறிவையும் பெற்று விட்டோம் என்ற கர்வத்தையும் தந்து விடுகிறது. அதனால் தான் எண்ணிலடங்கா தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கும் பலரும் நிஜ வாழ்க்கையில் கோட்டை விட்டு விடுகிறார்கள். இந்த உலகம் அவர்களுக்கு உரிய கௌரவத்தையும், வெற்றியையும் தரத் தவறி விட்டது என்று புலம்ப ஆரம்பித்து விடுகிறார்கள்.

வாழ்க்கையில் எதற்கு என்ன தேவையோ அதை முக்கியமாக அறிந்திருங்கள். அந்த அறிவு கல்விக்கூடங்களில் கிடைக்கலாம், அதற்கு வெளியிலும் கிடைக்கலாம். அந்த அறிவே அந்த விஷயத்திற்கு உங்களுக்கு உதவும். அதில் வெற்றி பெற்றவர்களுடைய அனுபவத்தை, அவர்களின் செயல் முறையை உற்று கவனியுங்கள். அதன் மூலம் கிடைக்கும் அறிவு ஆயிரம் சான்றிதழ்களாலும் கிடைத்து விடாது. அதை எந்த பள்ளிக்கூடத்திலும் கற்றுக் கொண்டு விட முடியாது.

பாடசாலைகளில் கிடைக்கும் கல்வியறிவு முக்கியம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதிலேயே அத்தனை அறிவும் அடங்கி விடுகிறதென்று யாரும் முடிவுகட்டி விடக் கூடாது. ஏட்டில் இல்லாதது, கல்விக்கூடங்களில் கற்க முடியாதது எத்தனையோ இருக்கிறது. கல்வியறிவு சுயமாய் சிந்திக்கும் திறனுக்கு என்றுமே நிகராகி விடாது. உண்மையாகச் சொல்வதானால் கல்வியறிவே சூழ்நிலையை உணர்ந்து அதற்கேற்றாற் போல் நடந்து கொள்ளும் சமயோசித  அறிவுடன் இணையா விட்டால் வாழ்க்கைக்கு உதவாது.  இதை என்றும் நினைவில் நிறுத்துவது நல்லது.

மேலும் படிப்போம்….

  நன்றி:    என்.கணேசன் –     வல்லமை