- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

நீரிழிவிற்கு கட்டியம் கூறும் தோல் நோய்

கழுத்தில் கறுத்த வெல்வெட் தோல் நீரிழிவிற்கு கட்டியம் கூறுகிறதா? (Acanthosis Nigricans)

அழகான இளம் பெண்ணான அவள் சற்றுக் குண்டாவனவளும் கூட. கழுத்து, கைகள், நெஞ்சு, வயிறு எங்கும் தாராளமான கொழுப்பு விளைச்சல் கண்டிருந்தது. எனது பார்வை அவளது முகத்தை விட்டு விலகி கழுத்தில் மேய்ந்தது.

எனது பார்வையின் பொருளை அவள் புரிந்து கொண்டதை அவள் வாய் திறந்து பேச ஆரம்பித்ததும் நோயை உறுதிபடுத்த முடிந்தது.

‘ஓம் டொக்டர்… இது கொஞ்சம் அசிங்கமாகக் கிடக்குத்தான். இதைப் பற்றியும் உங்களிட்டை கேக்க வேண்டும் என்றுதான் வந்தனான். ஆரம்பத்தில் சாதுவாகத்தான் தெரிந்தது இப்பொழுது கொஞ்சம் கறுத்துத் தடித்துக் கொண்டு வருகிறது.’ என்றாள்.

இளைஞனின் கழுத்திலும்- நீரிழிவா? [1]

அதுதான் அக்கன்தோசிஸ் நிஹிரிகான். இது ஓரு தோல் வருத்தம். வருத்தம், நோய் என்று கூடச் சொல்ல முடியாது. தோலில் ஏற்படும் மாற்றம் என்ற சொல்லாம்.  கறுப்பாத் தடிப்பாக பள்ளங்களும் திட்டிகளுமாக வெல்வெட் போன்ற தோற்றத்தை பாதிப்புள்ள சருமத்தின் பகுதிக்குக் கொடுக்கும்.

[2]பெரும்பாலும் கழுத்து அக்குள், முழங்கால், இடுப்புப் பகுதியில் வருவதுண்டு.

நோயாளியைப் பொறுத்த வரையில் அதன் அசிங்கமான தோற்றம்தான் அக்கறையை ஏற்படுத்தும். ஆனால் மருத்துவர்களைப் பொறுத்த வரையில் இது தோன்றுவதற்கான அடிப்படைப் காரணம் என்ன என்பதையே ஆராயத் தோன்றும்.

காரணங்கள் என்ன?

எந்த நோயுமற்ற ஆரோக்கியமானவர்களில் இது ஏற்படக் கூடுமாயினும் வேறு சில நோய்களுடன் இதற்குத் தொடர்பு இருக்கக் கூடும்.

•    சிலருக்கு இது பிறப்பிலேயே தோன்றுகிறது.
•    வெள்ளைத் தோல் உள்ளவர்களைவிட கருமையான சருமம் உள்ளவர்களிடம் அதிகம் காணப்படுகிறது.
•    நீரிழிவு நோயாளர்கள் மற்றும் அதீத எடையுள்ளவர்களின் குருதியில் இன்சுலின் அதிக அளவிலிருப்பதுதான் அவர்களிடையே அதிகம் தோன்றுவதற்குக் காரணமாகும்;.
•    தைரொயிட் சுரப்பி குறைவாக வேலை செய்பவர்கள் (Hypothyroidism)
•    குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரைகளை உபயோகிக்கும் சிலரிடையே தோன்றலாம்.
•    அட்ரீனல் சுரப்பி (Adrenal gland ), பிட்டியுடரி சுரப்பி (pituitary gland ) ஆகியவற்றின் செயற்பாடுகளில் குறைபாடு இருந்தாலும் தோன்றலாம்.
•    கொலஸ்டரேலைக் கட்டுப்படுத்த உபயோகிக்கும் நிக்கடனிக் அமிலம் (Nicotinic acid) போன்ற மருந்துகளாலும் ஏற்பட வாய்ப்புண்டு.

நீரிழிவும் அக்கன்தோசிஸ் நிஹிரிகானும்

முழங்காலின் பிற்புறத்தே கருப்பான பட்டையாக

[3]இவ்வாறு பல காரணங்கள் இருந்தபோதும் அண்மைக் காலங்களில் இது நீரிழிவு வருவதற்கான முன் அறிகுறியாக இது இருக்கிறது என்பதே முக்கிய செய்தியாக இருக்கிறது.

கொழுத்த உடம்பு வாகையுடைய பல இளம் பிள்ளைகளிலும், இளைஞர்களிடையேயும் இது அதிகமாக காணப்படுகிறது. இதைக் கண்டவுடன் எனக்கு நீரிழிவு வரப்போகிறதே எனக் கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம். நீரிழிவு வருவதற்கு முன்னர் இதைக் கண்டுகொண்டது அதிஸ்டம் என எண்ண வேண்டும்.

உடனடியாகவே உணவு முறைகளை மாற்றுவது, அதிகளவு உடல் உழைப்பில் ஈடுபடுவது, எடையைக் குறைப்பது போன்ற முயற்சிகளில் இறங்க வேண்டும். இத்தகைய வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் அக்கன்தோசிஸ் நிஹிரிகானஸ்சின் அடர்த்தி குறையும். இது குருதியில் இன்சுலின் அளவினைக் குறைக்கும். இது எதிர்காலத்தில் நீரிழிவு ஏற்படாமல் தடுக்க உதவும்.

மருத்துவம்

இந்தத் தோல் மாற்றத்தை குணமாக்குவதற்கென விசேடமான சிகிச்சைகள் எதுவும் கிடையாது. அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து அதை நீக்குவதிலேயே சிகிச்சையின் வெற்றி தங்கியுள்ளது.

* அதீத எடையுள்ளவராயின் மேலதிக எடையைக் குறைப்பதையே முதல் இலக்காகக் கொள்ள வேண்டும்.
* அதற்கு உடற் பயிற்சி அவசியம்.
* அத்துடன் இனிப்பு, மாப்பொருள், எண்ணெய் போன்றவற்றைக் குறைத்து
* பழவகைகள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் உண்ண வேணடும்.
[4]

அவ்விடத்து சருமத்தின் தடிப்பைக் குறைத்து மெருகூட்டுவதற்கு கிறீம். மற்றும் லோசன்கள் உதவலாம். ரேடின் ஏ (Retin-A) கலந்தவை சற்று அதிகம் உதவலாம். சுலிசிலிக் அமில கிறீம், யூறியா கிறீம் போன்றவையும் பயன்படுத்தப்படுகின்றன. ஒமேகா மீன் எண்எணய்க் மாத்திரைகளும் உதவக் கூடும்.

விரல் மொளிகளில்

அவ்விடத்தில் சற்று துர்நாற்றம் ஏற்பட்டால் அன்ரிபயோடிக் கிறீம் சில் காலத்திற்குப் பூச நேரும்.

நோய்க்குக் காரணம் ஒருவர் உபயோகிக்கும் குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரை அல்லது வேறு மருந்துகளாக இருந்தால், அல்லது முற் கூறிய நோய்களில் ஒன்று எனில் அதற்கான சிகிச்சை முறைகளை உங்கள் மருத்துவர் விளக்குவார்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

நன்றி: ஹாய் நலமா