Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

November 2011
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,320 முறை படிக்கப்பட்டுள்ளது!

எது தர்மம்?

“தர்மம் செய்வது எல்லா முஸ்லிம்களின் மீதும் கடமையாகும்” என்று இறுதி இறைத்தூதர் பெருமானார் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் கூறியபோது மக்கள், “ஒருவருக்கு தர்மம் செய்ய எதுவும் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது?” என்று கேட்டார்கள்.

அதற்கு நபி( ஸல்) அவர்கள், “அவர் தம் இரு கைகளால் (அவர்) உழைத்துத் தாமும் பயனடைவார். தர்மம் செய்(து பிறரையும் பயனடைய செய்)வார்!” என்று கூறினார்கள்.

அதற்கு மக்கள், “அவருக்கு (உழைக்க உடலில்) தெம்பு இல்லையென்றால் அல்லது அவர் அதைச் செய்யா(செய்ய இயலா)விட்டால் (என்ன செய்வது)?” என்று கேட்டனர்.

நபி(ஸல்) அவர்கள் “பாதிக்கப்பட்ட தேவையுடையோருக்கு அவர் உதவட்டும்!” என்றார்கள்.

மக்கள், “(இதையும்) அவர் செய்ய (இயல)வில்லையென்றால்?” என்று கேட்டார்கள்.

நபி(ஸல்) அவர்கள் அப்போது, “அவர் நற்காரியங்கள் செய்யும்படி பிறரை ஏவட்டும்!” என்றார்கள்.

“இதையும் அவர் செய்யாவிட்டால்?” என்று மீண்டும் கேட்டதற்கு, நபி(ஸல்) அவர்கள், “அவர் (பிறருக்கு எதுவும்) தீங்கு செய்யாமல் இருக்கட்டும். அதுவே அவருக்கு தர்மம் ஆகும்” என்றார்கள்.

அறிவிப்பவர் : அபூமூஸா அல் அஷ் அரீ (ரலி), நூல்: புகாரி, ஹதீஸ் எண் 6022.

தர்மம் என்பது, ‘பணத்தையும், பொருளையும் கொடுத்து உதவுவது மட்டுமே!’ என்று விளங்கி வாழ்ந்து வரும் இன்றைய கால கட்டத்திற்கும் ஏற்ப, ஏறத்தாழ 1420 ஆண்டுகளுக்கும் முன்னர் மனித சமூகத்திற்கு வழி காட்ட அனுப்பப்பட்ட இறுதி இறைத்தூதர் மூலம் அல்லாஹ் மிகவும் அழகான முறையில தர்மத்தின் விளக்கத்தை வழங்கியுள்ளான்.

இந்த நபிமொழி மூலம், சில்லறைகளை எடுத்து வறியவருக்கு இறைத்து விடுவதுதான் தர்மம் என்று பலர் கருதுவது எவ்வளவு தவறான கண்ணோட்டம் என்பதை உணர்த்தி, மக்களது சிந்தனைகளில் இது நாள் வரை இருந்து வந்த தர்மம் குறித்த தவறான கருத்துக்கள் அடங்கிய மூடத்திரைகளை இறைவன் அழகாக அகற்றுகின்றான்.

தர்மம் செய்வது பொருளாதாரத்தின் மூலம் செல்வந்தர்களாக இருப்பவர்கள் மட்டும் செய்யும் காரியமன்று என்பதை இந்நபிமொழி தெளிவாக எடுத்துரைக்கின்றது.

தன்னிடம் எது இருக்கின்றதோ அதனை தேவையுடையவர்களுக்குக் கொடுப்பதும், தன்னிடம் எதுவுமே இல்லை எனில் மற்றவர்களை நன்மைகளை செய்வதற்கு ஏவுவதும் அதற்கும் இயலாதெனில் யாருக்கும் எவ்வித தீங்கும் இழைக்காமல் இருப்பதும் தர்மமே என்று இஸ்லாம் தர்மத்திற்கு விரிவான விளக்கம் அளிக்கின்றது. இதன் மூலம் நன்மைப் பெற்றுத் தரும் எளிய வழிமுறையை இஸ்லாம் மனித சமூகத்திற்கு கற்றுத் தருகிறது.

பெரும்பொருள் படைத்த செல்வந்தர்கள் மட்டுமின்றி தன்னிடம் அடுத்த வேளை உணவுக்குக் கூட வழியில்லாத ஒரு பரம ஏழையும் இவ்வழிகாட்டல் மூலம் தர்மம் செய்து நன்மைகளை இலகுவாகப் பெற முடியும்.

அத்துடன், தர்மம் எனும் பெயரில் மக்களை மானமிழந்து, மதியிழந்து செயல்படும் நிலையிலிருந்து வெளியேற்றி தர்மத்தின் மகத்துவத்தையும், அதே நேரத்தில் உழைப்பின் அவசியம் மற்றும் சிறப்பையும் இந்த நபிமொழி மிகவும் தெளிவாகக் கோடிட்டுக் காட்டுகின்றது.

இதைத் தொடர்ந்து, தேவையுடைய ஒருவருக்கு அவர் தம் பணிகளில், அல்லது அவரது தேவைகளை நிறைவேற்ற உடலாலோ உள்ளத்தாலோ உழைப்பதும் தர்மமாக கணிக்கப்பட்டு அவருக்கும் இதன் மூலம் நற்பலன்கள் பெற இயலும் என்று கூறி ஒரு சுமூகமான, புரிந்துணர்வுடன் கூடிய சமூக ஒற்றுமையைக் கொண்டதொரு வாழ்க்கை முறையை மனித சமூகத்துக்கு அறிமுகப்படுத்துவதையும் அவதானிக்க முடிகின்றது.

மேலும் உடல் ஊனங்களோ, பலவீனங்களோ, முதுமையோ, வறுமையோ ஒருவர் தர்மம் செய்து நன்மைகள் பெற தடையாக நிற்காது என்றும், நல்லதைச் செய்ய தன்னால் இயலவில்லையென்றாலும், பிறரை அதற்காக ஏவுதலும் உபதேசித்தலும் கூட தர்மத்தின் நன்மையைப் பெற்றுத் தரவல்லவை எனும் உன்னதமான நல்வழியை இஸ்லாம் சமூகத்திற்குக் கற்றுத் தருகிறது.

எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக ஒருவருக்குச் செல்வமோ, உடல் வலிமையோ, ஆற்றலோ, நாவன்மையோ அல்லது இதில் எதுவுமே இல்லையென்றாலும் (சொல்லாலும் செயல்களாலும் உள்ளத்தாலும் பிறருக்கு ஏற்படும்) தீங்குகளிலிருந்து விலகி இருப்பதும் தர்மம் ஆகும் என்று இஸ்லாம் உபதேசிக்கிறது.

“ஒருவருக்குத் தீங்குகள் ஏற்படுத்தாமல் செயல்படுவதும் நன்மையை பெற்றுத் தரும்” எனும் ஓர் உன்னதமான உயரிய சிந்தனையை இந்த இரத்தினச் சுருக்கமான நபிமொழி எடுத்தியம்பி கலாச்சாரச் சீரழிவுகளில் அலைமோதி, மனித நேயமும் ஒழுக்க மாண்புகளையும் மறந்து மனித சமூகத்திற்கெதிராக பல்வேறு அக்கிரமங்கள் புரிந்து வாழ்ந்து மரணிக்கும் மனித சமூகத்திற்குத் தெளிவான வாழ்வியல் நெறியை அக்கறையோடு இந்நபிமொழி நினைவூட்டுகின்றது.

இறுதியாக, நன்மையென்பது அதை செய்பவருக்கு மட்டுமன்றி அது யாருக்கு செய்யப்படுகிறதோ அவருக்கும் நன்மையென்பதுடன், யாருக்கும் நன்மை செய்ய இயலவில்லையெனினும் எந்தத் தீங்கையும் செய்யாமல் இருப்பதே அவருக்கு (தர்மம் செய்த) நன்மையென்று கூறி, ஒவ்வொரு தனி மனிதனையும் ஒட்டு மொத்த சமூகத்துடன் மனித நேயத்துடன் வாழுமாறு இந்த நபிமொழி பிணைத்து விடுகிறது.

இது போன்ற செயல்களின் நற்பலன்கள், மறுமையில் மட்டுமின்றி இம்மை வாழ்க்கைக்கும் பயனுள்ளது என்பதை மக்கள் அனைவரும் உணர முற்பட்டால், உண்மையிலேயே மனிதர்களின் இவ்வுலக வாழ்க்கையின் நிலை மிகவும் சிறப்பானதாக மாறிவிடும். மறுமையில் வெற்றியும் பெற வழி பிறக்கும். எல்லாம் வல்ல (இவ்வுலகின் ஏக இறைவனாகிய) அல்லாஹ் நமக்கு அதற்காக உதவிகள் மற்றும் நல்லருள் புரிய எந்நேரமும் அயராமல் பிராத்திப்போமாக. ஆமீன்.

 நன்றி: சத்தியமார்க்கம்.காம் – ஆக்கம்: இப்னு ஹனீஃப்