- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

சென்னை நகரப் போக்குவரத்து நெரிசல்

சென்னை மாநகரம் நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது. உள்ளூர் மக்கள் தொகை மட்டுமல்ல, வெளிமாநில மக்களின் புழக்கமும் அதிகரித்து வருகிறது. ஆனால் நகரில் தற்போது உள்ள மின்சார ரயில், பேருந்து போன்ற பொதுப் போக்குவரத்து வசதி இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் இல்லை. சென்னை போன்ற நகரங்களின் சாலைகளில் கார் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இந்த எண்ணிக்கைக்கு ஏற்ப சாலை வசதி இல்லை. இதனால் நாள் தோறும் காலை, மாலை நேரங்களில் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து அலுவலகம் செல்வோரும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களும் அவதிப்படுகிறார்கள்.

நகரில் உள்ள பழமையான போக்குவரத்து புறநகர் மின்சார ரயில்கள்தான். அதுவும் போத வில்லை என்பதால், கடற்கரை முதல் வேளச் சேரி வரை துரித ரயில்போக்குவரத்து திட்டம் (எம்ஆர்டிஎஸ்) துவங்கப்பட்டது.விரைவில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப்பாதைகள் தோண்டும் பணி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் மக்களின் குடியேற்றம் காரணமாக மாநிலத்தின் கிராமம் மற்றும் நகரங்களில் நாளுக்குநாள் விரிவடைந்து வருகின்ற புதிய பகுதிகளை போக்குவரத்து வசதியால் மட்டுமே இணைக்கமுடியும். அதற்கு பொதுப் போக்குவரத்து மிக அவசியம். சென்னையை பொறுத்தவரை மெட்ரோ ரயில் திட்டத்தை விரைந்து நிறைவேற்றினால்தான் நகரில் தற்போதுள்ள போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணமுடியும். அதிமுக அரசு செய்த ஒரே நல்ல காரியம், கடந்த கால திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் அனைத்து திட்டங் களையும் ஒழித்தது போல் அல்லாமல், மெட்ரோ ரயில் திட்டத்தை மட்டும் ஏற்றுக்கொண்டதுதான். ஆனால் ஏட்டிக்கு போட்டியாக மோனோ ரயில் திட்டத்தை அறிவித்தது. அந்த திட்டமும் ஏலம், ரத்து, மறு ஏலம் என பல சிக்கல்களுடன் துவங்கியுள்ளது.

எந்த ஒரு நாடாக இருந்தாலும் மக்களின் போக்குவரத்து தேவையை பொதுப்போக்கு வரத்து மூலமாகவே நிறைவேற்ற முடியும். ஐரோப்பாவில் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் பெரும்பான்மையான மக்களின் அன்றாட போக்குவரத்து தேவையை மெட்ரோ, டிராம், பேருந்து, சிறு கப்பல்கள் போன்ற பொதுப்போக்குவரத்துதான் நிறைவேற்றுகின்றன. பொருளாதார சீர்திருத்தம் என சகல துறைகளையும் மத்திய அரசு தனியார்மயமாக்கி வரும் நிலையில், கொல்கத்தா, தில்லி மெட்ரோ ரயில் திட்டம் லாபகரமாக இயங்குவதோடு, மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவையை அளித்து வருகின்றன.

இதில் தனியார் முதலீட்டை அனுமதிக்கலாம் என்று கூறியுள்ள மத்திய வர்த்தக அமைச்சர் கமல்நாத்திற்கு தில்லி மெட்ரோ ரயில் திட்ட நிர்வாக இயக்குநர் ஸ்ரீதரனே நல்ல பதிலை அளித்துள்ளார். இத் திட்டத்தில் தனியார் அனுமதிக்கப்பட்டால், பொதுச் சொத்தை தங்கள் பைகளில் போட்டுக்கொள்ளவே அவர்கள் நினைப்பார்கள் என்பதுதான் அந்த பதில். ஸ்ரீதரனின் இந்த கூற்று நூற்றுக்கு நூறு சரியானதே. மகாராஷ்டிராவில் மோனோ ரயில் திட்டம் போதுமான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாக அமைய வில்லை. உலகில் பல பகுதிகளிலும் இந்த திட்டம் தோல்வியடைந்திருப்ப தாக கூறப்படுகிறது. எனவே தமிழக அரசும் மோனோ ரயில் திட்டத்தை அமலாக்கும் முன்பு பொதுப்போக்குவரத்து குறித்து திட்டமிடுபவர்களின் ஆலோசனைகளை பெறவேண்டியது அவசியமாகும்.

http://www.maattru.com/2011/12/blog-post_30.html