- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

காலேஜ் கார்னர் – செல்வி ஹலிமா

செல்வி ஹலிமா – அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரி

[1]தங்கள் வாழ்க்கையை, வலியை, இழப்புகளை, அவமானங்களை, புறக்கணிப்புகளை என்று வாழ்வின் பெரும்பகுதியை கடந்துவிட்ட அங்கன்வாடி ஊழியரின் மகள் அமெரிக்க பல்கலையில் படித்துவந்துள்ள நிகழ்வுகள் தான் இந்த மாதக் காலேஜ் கார்னரில் பார்ப்பது.
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர் பாத்திமா. அங்கன்வாடி ஊழியர். இவரது மூத்த மகள் ஹலிமா. வயது 20. நெலலை மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 3ம் ஆண்டு பயில்கிறார்.

“இளமை இதோ… இதோ…” என்று உடம்பும், மனசும் ரெக்கை கட்டிப் பறக்கும் வயசு, மாயா ஜாலங்கள் சாத்தியம் என்று நம்பும் பட்டாம்பூச்சிகள் நுழைய ஜன்னல் திறந்து வைக்கும்… படிப்பு என்றாலே அலர்ஜி… மற்ற அனைத்துக்கும் எனர்ஜி என்று தத்தித்தாவும் டீனேஜ் வயசுதான் என்றாலும், இந்த உற்சாகம் மட்டுமே தான் இளமையின் அடையாளம் என்று இல்லாமல் இந்த உலகத்தில் எதுவுமே… எதுவுமே உங்கள் கைக்கு எட்டக்கூடியது தான். எதையும் கற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வளர்த்திக் கொண்டு தொடர்ந்து கற்றுக் கொண்டதால் அவர் வாழ்வில் ஏற்பட்ட மாற்றமே தொடர்ந்து வருபவை.

கடந்த ஆண்டு பாளையங்கோட்டை சவேரியர் கல்லூரியில் அமெரிக்க தூதரகத்தினர் நடத்திய ஆங்கிலப் பேச்சுப் போட்டியில், “ஜனநாயகம்” என்ற தலைப்பில் பேசிய பேச்சு அனைவரையும் கவர்ந்தது. அந்த சமயத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வாழ்க்கை வரலாற்றை ஒளி பரப்பி, அதில் சில விமர்சனங்களை சொல்லச் செய்தனர். அதையும் சிறப்பாக செய்த மாணவி ஹலிமாவை அமெரிக்க அரசின் செலவில் 10 மாதங்களுக்கு வடக்கு அலபாமா பல்கலையில் கலாச்சாரம் மற்றும் கம்ப்யூட்டர் கல்விக்குத் தேர்வு செய்தனர்.

மாதம் சுமார் 12 ஆயிரம் ஊதியத்துடன் தங்கும் வசதி, உணவுடன் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்ததைப் பற்றி 10 மாத படிப்பிற்கு பின், தற்போது நெல்லை வந்துள்ள மாணவி ஹலிமா கூறுகையில்,

“மிகவும் பின்தங்கிய பகுதியில் வளர்ந்த நான் சிறுவயதில் நன்றாகப் படித்தேன். என் தந்தை தர்வேஷ் தனியார் நிறுவனத்தில் பணியாளராக இருந்தார். நாங்கள் சிறுவயதாக இருக்கும்போதே இறந்துவிட்டார். அப்பாவின் மரணத்தால் குடும்பம் வறுமைக்குத் தள்ளப்பட்டது. உறவினர்களின் செலவில் மேலப்பாளையம் பெண்கள் கல்லூரிக்கு பயில வந்தேன். அப்போதுதான், “எட்டப்படும் வரை குறிக்கோள்கள் என்பவை வெறுமனே நம்பிக்கைதான். உங்கள் குறிக்கோள்கள் திட்டமிட்டதாக, எட்டக்கூடியதாக, வளர்ச்சியைக் கணக்கிடக் கூடியதாக, நிர்ணயித்த காலக் கெடுவுக்குள் அடைவதற்கான செயல்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து தொடர்ந்து கற்றதால் அமெரிக்க வாய்ப்பைப் பெற்றேன்”.

மேலும் கடந்த 10 மாதங்களாக அமெரிக்காவில் நிறைய கற்றுக்கொண்டேன். நவீன முறையில் கற்றுக்கொடுத்தல், கம்ப்யூட்டர் துறையில் நாம் 5 ஆண்டுகளுக்குப் பின்பு படிக்கும் விஷயங்களைக்கூட அங்கு உடனுக்குடன் கற்றுத் தருகிறார்கள். என்னைப்போலவே ஜோர்டான், இஸ்ரேல் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 88 பேர் அங்கு பயின்றோம்.

சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்ததுடன் மாதாமாதம் அமெரிக்கா உதவித் தொகையையும் கொடுத்தது. அதை எங்கள் குடும்ப வறுமையை போக்குவதற்காக வீட்டுக்கு அனுப்பி வைத்தேன்.

கல்லூரி முடிந்தபிறகு வீட்டின் தேவைக்காகவும், 11ம் வகுப்பு பயில உள்ள தங்கை ரிஸ்வானாவுக்காகவும் ஏதாவது வேலையில் சேர்ந்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஹலிமா, “ஒரு நிலம் எவ்வளவுதான் வளமானதாக இருந்தாலும், அதில் உழவு மேற்கொள்ளாவிட்டால் எதற்கும் பயன்அளிக்காது. அதுபோலத்தான் மேலும் மேலும் கற்றுக்கொள்ள ஆர்வம் இல்லாத மனித மூளையும் துருப்பிடித்துப்போகும். கற்பதற்கு மட்டும் எந்தக் காலத்திலும் தடை போடமாட்டேன்” என்று தொடர்ந்து படித்து ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற தனது கனவையும் பதிவு செய்கிறார்.

ஹலிமா தர்வேஷின் கடின உழைப்பும், தனியாத ஆர்வமும் அவரின் காந்தத் திறனை அதிகரித்து அவரின் கனவு மெய்ப்பட வாழ்த்துகிறது தன்னம்பிக்கை…

நன்றி: தன்னம்பிக்கை