- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

எலக்ட்ரானிக் எந்திரங்கள் – நவீன மாற்றங்கள்

நாம் அதிகமாகப் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் எந்திரங்கள் செல்போனும், கணினியுமாகத்தான் இருக்கும். இந்த எலக்ட்ரானிக் கருவிகள் எல்லாம் கால்குலேட்டர் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் வேகமான வளர்ச்சியடைந்து நவீன மாற்றங்கள் பெற்றவையாகும். பணப் பரிவர்த்தனையில் பயன்படும் எந்திரங்கள் ஏராளம். நாம் ஏ.டி.எம், இயந்திரம், பணம் எண்ணும் இயந்திரம் ஆகியவற்றைத்தான் அதிகமாகப் பயன்படுத்துகிறோம். ஆனால் அயல்நாடுகளில் பல்வேறு நவீன கருவிகள் புழக்கத்தில் உள்ளன. அவை ஒவ்வொன்றுக்கு பின்னாலும் ஒவ்வொரு கதை உள்ளது.

***

ஏ.டி.எம். மெஷின் கண்டுபிடிக்கப்பட்ட கதை கொஞ்சம் சுவாரசியமானது. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான் ஷெப்பர்டு பாரோன் தன் மனைவிக்கு பரிசு வழங்க நினைத்தார். அதற்காக பணம் எடுக்க வங்கியில் வரிசையில் நின்றார். அவரது முறை வந்தபோது நேரம் முடிந்துவிட்டதாக கவுண்டரை மூடிவிட்டனர். வெறுங்கையோடு செல்ல விரும்பாத அவர் வென்டிங் மெஷின் மூலம் கொஞ்சம் சாக்லெட் வாங்கிக்கொண்டு மனைவியை சந்தித்தார். பரிசளிக்க முடியாத அதிருப்தியும், வென்டிங்மெஷினும் அவரது நினைவைக் குழப்ப, புதிய எண்ணம் உதயமானது. பிறகு ஜான், ஏ.டி.எம். மெஷினை உருவாக்கினார். ஏ.டி.எம். நிஜத்தில் காதல் எந்திரமே.

***

பணம் எண்ணும் இயந்திரத்தை வங்கிகளிலும், அலுவலகங்களிலும் பார்த்திருப்பீர்கள். அது அலுவலக உபயோகத்துக்கு வசதியானது தான். ஆனால் கைகளில் எப்போதாவது பணம் வந்துபோகும் தனிநபருக்கு அந்த எந்திரம் உபயோகப்படாது. தனிநபரும் வசதியாக பணம் எண்ணுவதற்காக உருவாக்கப்பட்டது தான் `கவுன்டிங் ரிங்`. மோதிரம் போல இருக்கும் இதை கட்டைவிரலில் மாட்டிக்கொண்டு, பணக்கட்டின் மீது வைத்து மெல்ல மேலிருந்து, கீழாக நகர்த்தினால் எத்தனை நோட்டுகள் இருக்கின்றன என்று எண்ணிவிடும். அகச்சிவப்பு கதிர்கள் மூலம் இது செயல்படுகிறது.

***

கிரெடிட் கார்டை விட வேகமாகவும், பாதுகாப்பாகவும் பண பரிமாற்றம் செய்ய டிஜிட்டல் வாலட் உதவுகிறது. ஸ்வீடன் நாட்டை சேர்ந்த பிரெடரிக் பாம்பிளாட், `வாலட்` கருவியை வடிவமைத்தார். இது கடிகார வடிவிலான சிப். இதை கணினியுடன் இணைத்து யாருக்கு பணம் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்ற விவரத்தை தயாரித்துக் கொள்ள வேண்டும். பிறகு சம்பந்தப்பட்ட இருவரது வாலட் கருவிகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து, கருவியின் மேல்புறம் உள்ள திரையில் கொடுப்பவரும், பெறுபவரும் கைரேகையைப் பதிவு செய்தால் இருவர் கணக்கிலும் பணப்பரிமாற்றம் பாதுகாப்பாக நடந்து விடும். ஏமாற்றத்துக்கு வழியே இல்லை.

***

கால்குலேட்டர்களை கணக்குப்போடுவதற்கு மட்டும் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில் தொழில்நுட்ப முன்னேற்றம் அடைந்த நாடுகளில் பல்வேறு பயன்பாட்டுக்கும் கால்குலேட்டரைப் பயன்படுத்துகிறார்கள். சமையலில் எந்தப் பொருளை எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை அளந்து பார்க்க கிச்சன் கால்குலேட்டரை பயன்படுத்துகிறார்கள். ஒருவர் தனது உடல் எடைக்கு ஏற்ப எவ்வளவு சாக்லெட் சாப்பிடலாம் என்று பார்க்க சாக்லேட் கால்குலேட்டர் இருக்கிறது. நாம் சுவாசிக்கும் காற்றில் கார்பன் மிகுந்திருக்கிறதா? என்பதை கவனிக்க கார்பன் கால்குலேட்டர் இருக்கிறது. மருந்து சாப்பிடும் நோயாளிகளுக்கு சரியான அளவில் மருந்து சாப்பிட உதவும் `ஆர்கிமெடிஸ்` கால்குலேட்டர்கள் இருக்கின்றன.

***

சிறிய அளவிலான ரோபோ கால்குலேட்டர்கள், அநேக வேலைகளை தானே கணக்குப் போட்டு செய்து முடிக்கிறது. `ரிசிப்ட் ஸ்கேனர் கால்குலேட்டர்` என்ற நவீன கால்குலேட்டர் கருவி, கையால் எழுதும் கணக்குகளை ஸ்கேன் செய்து கணக்குப் பார்க்க உதவுகிறது. வங்கிக் கணக்கு, மளிகைச்சரக்கு பில் என அனைத்தையும் ஸ்கேன் செய்து கணக்குப் போட பயன்படுத்தலாம். ஏ.டி.எம். மிஷின்போல தங்கக் காசுகளை வழங்கும் கோல்டு ஏ.டி.எம்.கள் இருக்கின்றன. தாமஸ் இஸ்லர் என்ற ஜெர்மானியர் அபுதாபி தங்க மார்க்கெட்டில், கோல்டு ஏ.டி.எம்.-ஐ வடிவமைத்து பயன்பாட்டில் வைத்தார். இது அன்றைய கரன்சி மதிப்பிற்கு ஏற்ப 1, 5, 10 கிராம் தங்க காசுகளை வழங்கும்.

***

கிரெடிட் கார்டின் பயன்பாடு அதிகமாக இருந்தாலும் அது நிறைய சிக்கல்களையும் வரவழைக்கலாம். கார்டை தொலைத்துவிட்டால் எடுப்பவர் தங்கள் வசதிக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். இதைத் தடுக்க `கிரெடிட்கார்டு அலாரம்` இருக்கிறது. கார்டை, பாதுகாப்பாக வைக்க உதவும் இந்த சிறு பெட்டி, கார்டை எடுத்த 20 விநாடிகளுக்குள் திரும்ப வைக்காவிட்டால் ஒலியெழுப்பும். இதனால் கார்டு பாக்கெட்டில் இல்லை என்பதை உணர்ந்து உஷாராகி விடலாம். அதேபோல கிரெடிட் கார்டு பயன்பாட்டின்போது ரகசியம் கசியாமல் பணப்பரிமாற்றம் நடக்க `ஸ்மார்ட் ஸ்வைப் மிஷின்` உதவுகிறது.

***

ரூபாய் நோட்டுகள் அதிகமானால் கூட சிரமப்பட்டு எண்ணி விடலாம். ஆனால் சில்லறைகள் சேர்ந்து விட்டால் எண்ணும் முன்பாக தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டியிருக்கும். `டிஜிட்டல் கவுண்டிங் ஜார்` இந்த பிரச்சினையை தீர்க்கிறது. சாதாரண உண்டியலை விட கூடுதலாக இதன் மூடியில் ஒரு டிஜிட்டல் மீட்டர் இருக்கிறது. இது உண்டியல் துளை வழியே காசுபோடும்போது அது தானாகவே கணக்கிட்டு திரையில் இருப்புத் தொகையைக் காட்டி விடும். தேவைப்பட்டால் பணத்தை எடுத்துவிட்டு `ரீசெட்` செய்து சேமிக்கலாம். இது இயங்க இரண்டு சிறிய பேட்டரிகள் தேவை. இந்த ஜார், இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாணயங்களை மட்டுமே கணக்கிடும்.

***

கிரெடிட் கார்டில் செக்யூரிட்டி நம்பர் பதிந்து வைத்திருப்பார்கள். பின் நம்பரை பயன்படுத்தி நாம் உபயோகப்படுத்துவோம். இது தவறான நபர்களின் கையில் கிடைக்கும்போது சிக்கலை உருவாக்கி விடும். இந்த பிரச்சினையை தவிர்க்க `டிஜிட்டல் டிஸ்பிளே கிரெடிட் கார்டு’ இருக்கிறது. இதில் செக்யூரிட்டி நம்பரையும், பின் நம்பரையும் நாமே தேர்வு செய்து கொள்ளலாம். அதேபோல ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துபவர்கள் அத்தனை கார்டுகளையும் ஒன்றிணைத்து பயன்படுத்தலாம். அனைத்து கார்டுகளின் தகவல்களையும் சேமித்து விட்டு, ஓரமாக இருக்கும் `நாப்’ மூலம் தேவையான கார்டை மட்டும் தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.

***

ஏ.டி.எம். உண்டியல் ஒன்று இருக்கிறது. காயின் பாக்ஸ் டெலிபோன் போல இருக்கும் இவை வீட்டிலேயே பயன்படுத்துவதற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டவை. இதில் பணம் மற்றும் சில்லறைகளை போடலாம். அதிகபட்சம் எவ்வளவு சேமிக்க வேண்டும் என்பதையும் நாமே முடிவு செய்து பதிவு செய்து விடலாம். இதற்காக ஒரு ஏ.டி.எம். கார்டு தந்திருப்பார்கள். சேமிக்கும்போது திடீரென்று பணம் தேவைப்பட்டால் இந்த கார்டை உபயோகப்படுத்தி பணம் எடுக்கலாம். எவ்வளவு எடுத்திருக்கிறோம், எவ்வளவு இருப்பு இருக்கிறது என்பதும் தெரியும். குழந்தைகளுக்கு சேமிக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தவும், வங்கிப் பயிற்சியை எளிதாக கற்கவும் ஊக்குவிக்கிறது இந்த நவீன உண்டியல்!

நன்றி: உங்களுக்காக