- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

ஸ்டூடன்ட் ஸ்டார்! – ஹாலிஸ் நிசார்

[1]”சின்ன வயசுல விளையாட்டா ஐ.ஏ.எஸ்., ஆகணும்னு சொல்லிட்டே இருப்பேனாம். அதை சீரியஸா எடுத்துக்கிட்ட என் அப்பா -அம்மா, எல்.கே.ஜி படிக்கும்போது இருந்தே எனக்கு திருக்குறள்லாம் சொல்லிக் கொடுத்தாங்களாம். அவங்க போட்டுக் கொடுத்த கோட்டுல இப்போ நான் ரோடு போட்டுட்டு இருக்கேன்!”-பளிச் பல்ப் ஒளிரும் கண்கள் ஹாலிஸ் நிசாருக்கு. இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நிறுவனத்தால் ‘இளம் விஞ்ஞானி’ என அங்கீகரிக்கப்பட்ட திறமைசாலி.

”கல்லூரி செமஸ்டர் தேர்வுகளில் இதுவரை மொத்தம் 18 பேப்பர்ல நான்தான் ஃபர்ஸ்ட். புத்தகப் புழுவாக மட்டும் அடங்கிடக் கூடாதுன்னு கவிதை, கட்டுரை, விநாடி-வினா,குறுக் கெழுத்துப் போட்டி, நாடகம், குறுநாடகம், ஓவியம், விளையாட்டுனு எல்லாப் போட்டி களிலும் கலந்துக்குவேன். அலமாரியில் இடம் இல்லாம ஏகப்பட்ட மெடல் குவிச்சு வெச்சிருக்கேன்.

இந்த அத்தனை வெற்றிகளிலும் நான் பெருமையா நினைக்கிறது ‘இளம் விஞ்ஞானி’ பட்டம்தான். இந்தியா முழுக்க உள்ள அறிவியல் சார்ந்த கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி அது. என் புராஜெக்ட் டுக்குப் பேர் ‘ஆன்டிபயாடிக் புரொடக்ஷன்’. உடற் கிருமிகளைக் கொல்லும் ஆன்டி பயாடிக்கை மண்ணில் இருந்து தயாரிக்கும் ஐடியா அது. சாதாரண மண்ணுதானேன்னு நாம நினைப்போம். ஆனா, அந்த மண்ணில் ஏகப்பட்ட உயிர்ச் சத்துக்கள் நிரம்பி இருக்கு. அப்படி அதில் புதைந்திருக்கும் ஆர்கானிக் பொருட்களை மிகக் குறைந்த செலவில் எப்படித் தயாரிக்கலாம்னு ஒரு திட்டம் வடிவமைச்சு அனுப்பி இருந்தேன். இந்தியா முழுவதிலும் போட்டியில் கலந்துகொண்ட 8 லட்சம் மாணவர்களுள் தேர்வான 33 பேர்ல நானும் ஒருத்தி. ‘தபால் துறையை மேம்படுத்து வது எப்படி?’ங்கிற தலைப்பில்  தபால் துறை நடத்திய கருத்தரங்கில் நான் கொடுத்த சில ஐடியாக்களுக்கு முதல் பரிசு கிடைத்தது.

இதெல்லாம் மனதை ரிலாக்ஸ் பண்றதுக்கான திசை திருப்பல்கள்தான். ஐ.ஏ.எஸ்., மட்டும்தான் என் கனவு. அதற்காக இப்பவே தினமும் பயிற்சி வகுப்புகள், ஆப்ட்டிட்யூட் பாடங்கள், பொது அறிவுப் புத்தகங்கள்னு பிளான் பண்ணி உழைக்கத் தொடங்கிவிட்டேன். நான் நிச்சயம் ஒரு நாள் கலெக்டர் ஆவேன். அதே சமயம், அறிவியல் துறையிலும் பேர் சொல்ற மாதிரி சாதனை படைப்பேன்”- அத்தனை பெரிய கண்கள் முழுக்கக் கனவு!

நன்றி: விகடன்