- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

மிகப்பெரிய பூகம்பமாக இருந்தும் ஏன் சுனாமி ஏற்படவில்லை?

[1]கடந்த மாதம் (11-04-2012) இந்தோனேசியாவின் பண்டா அச்சே பகுதியில் ஏற்பட்ட 8.6 ரிக்டர் நிலநடுக்கமும் அதன் பிறகு ஏற்பட்ட பின் அதிர்வு என்று வர்ணிக்கப்பட்ட 8.2 ரிக்டர் நில நடுக்கத்தினாலும் 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பிறகு வாபஸ் பெறப்பட்டது. 2004ற்குப் பிறகு அதே பகுதியில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டும் சுனாமி ஏற்படாததன் காரணம் என்ன என்பதை புவியியல் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று ஏற்பட்ட பூகம்பம் கண்டத் தட்டுகள் கிடைக்கோட்டு மட்டத்தில் அதாவது செங்குத்து நகர்தல் இல்லாமல், நகர்ந்ததால் கடல் நீர் எழும்புதல் குறைவாகவே இருந்தது என்று கூறியுள்ளனர்.

நேற்று ஏற்பட்டது ‘ஸ்ட்ரைக் ஸ்லிப் ஃபால்ட்’ (Strike Slip Fault) என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2004-இலும் ஜப்பானில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பூகம்பமும் சப்டக்ஷன் மண்டலம் (Subduction Zone) அல்லது இரண்டு நாடுகளின் கண்டத் தட்டுகளில் ஒன்று மற்றதன் அடியில் போய் செருகிக் கொள்ளும் செங்குத்து நகர்தலாகும், இதில் வெளியாகும் நிலநடுக்க அலை சக்தி பயங்கரமானது ஆனால் கண்டத் தட்டுக்கள் கிடைக்கோட்டு மட்டத்தில் நகர்ந்ததால் சக்தி அவ்வளவாக வெளிப்படவில்லை.

நேற்று ஏற்பட்ட முதல் பூகம்பம் பண்டா அச்சே கடற்கரையிலிருந்து 269 மைல்கள் தென் மேற்கு திசையில் மையம் கொண்டிருந்தது. இரண்டாவது 8.2 ரிக்டர் அளவு பூகம்பம் இந்த மையத்திலிருந்து மேலும் விலகி 120 மைல் தெற்கு திசையில் மையம் கோண்டிருந்தது.

இரண்டுமே கடலுக்கு அடியில் 14 மற்றும் 10 மைல்கள் ஆழத்தில் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நேற்று ஏற்பட்ட முதல் பூகம்பத்திலிருந்து வெளியாகும் சக்தியைக் காட்டிலும் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி தாக்க பூகம்பத்தில் 6 மடங்கு அதிக சக்தி வெளியானது. நேற்று ஏற்பட்ட 2வது பூகம்பத்தில் வெளியான சக்தியைக் காட்டிலும் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தில் 22 மடங்கு அதிக சக்தி வெளியானது.

இந்தோனேசிய தேசிய பூகம்ப தகவல் புவி பௌதீக விஞ்ஞானி ஆமி வான் இதைப்பற்றி கூறுகையில், 2004 டிசம்பர் 26ஆம் தேதி ஏற்பட்ட அந்த கடும் பூகம்பத்தின் போது இந்தியக் கண்டத் தட்டு இதைவிட சிறிய பர்மா கண்டத்தட்டுக்களுக்கு அடியில் போய் செருகியது. அப்போது சுமார் 50 அடி உயரத்திற்கு கண்டத்தட்டு நகர்ந்துள்ளது. இதனால் கடல் தரை அமைப்பில் பெரும் மாற்றம் ஏற்பட சுனாமி பேரலைகள் ஏற்பட்டதுள்ளது

ஆனால் நேற்று ஏற்பட்ட பூகம்பம் ஒரே பிளேட்டில் அதாவது ஆஸ்ட்ரேலியக் கண்டத்தட்டின் உள்ளேயே ஏற்பட்ட மாற்றம் இதனால் இரண்டு நாடுகளின் கண்டத் தட்டுகள் இதில் மோதலில் ஈடுபடவில்லை. மாறாக ஸ்ட்ரைக் ஸ்லிப் ஃபால்ட் காரணமாக ஒன்று மற்றதிலிருந்து சற்றே கிடைக்கோட்டு மட்டத்தில் விலகியுள்ளது. இதனால் சீ ஃப்ளொர் என்று அழைக்கப்படும் கடலடித் தரையின் அமைப்பில் பெரும் மாற்றம் ஏற்படவில்லை. இதனால் சுனாமி ஏற்படவில்லை.

மேலும் ஆஸ்ட்ரேலிய கண்டத்தட்டு சாதாரணமாக் எதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதோ அதே திசையில்தான் இந்த ஸ்ட்ரைக் ஸ்லிப் ஃபால்ட் பாறை நகர்ந்துள்ளது.

1950 – 1965ஆம் ஆண்டுகளுக்கு இடையே 8.5 ரிக்டர் அளவு கோல் பூகம்பங்கள் ஏற்பட்டது போல் தற்போது 2004ஆம் ஆண்டிற்குப் பிறகு இத்தகைய பெரிய பூகம்பங்கள் ஏற்படுவதற்கான புவிப்பாறை சூழல் அப்பகுதியில் நிலவுவதாக சத்தா தெரிவித்துள்ளார். அதாவது 1950- 65 ஆம் ஆண்டுகளிடையே ஏற்பட்டது போல் தற்போதும் மிகப்பெரிய நிலநடுக்க வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிக ரிக்டர் அளவு பூகம்பம் வரும் நாட்களில் ஏற்படாது என்று கூறுவதற்கில்லை என்கிறார் சத்தா.

2004ஆம் ஆண்டு ஏற்பட்ட அந்த மிகப்பெரிய 9 ரிக்டர் அளவு பூகம்பத்தினால் கடற்பரப்புகளில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு இன்னமும் அது தன்னை அட்ஜஸ்ட் செய்து கொண்டுவருகிறது என்று வான் என்ற விஞ்ஞானி இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

நாடுகள் கட்டிடங்களைக் கட்டுவதில் கட்டுப்பாடுகளையும், பொதுமக்களுக்கு மிகப்பெரிய பூகம்பம் ஏற்படும் போது பாதுகாப்பிற்கு என்ன செய்யவேண்டும் என்பதையும் பற்றி மக்களுக்கு அறிவுறுத்தும் நேரம் வந்துவிட்டது.

செல்வா ஓர் உலகம்