- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

ஐ.ஐ.டி, என்.ஐ.டி-களில் சேர புதிய நடைமுறைகள்:

 ஐ.ஐ.டி, என்.ஐ.டி மற்றும் ஐ.ஐ.ஐ.டி போன்ற தேசிய கல்வி நிறுவனங்களில் சேர, 2013ம் ஆண்டு முதல், புதிய முறையிலான பொது நுழைவுத்தேர்வை மாணவர்கள் எழுத வேண்டும். மேலும், ஒருவரின் பிளஸ் 2 மதிப்பெண்களும் கணக்கில் எடுக்கப்படும்.

இத்தகவலை தெரிவித்திருப்பவர், மத்திய மனிதவள அமைச்சர் கபில்சிபல்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: மேற்கூறிய எந்த கவுன்சில்களிலிருந்தும், இந்த புதிய முடிவிற்கு எதிர்ப்பு வரவில்லை. ஆனால், கலந்துரையாடலின்போது, ஐ.ஐ.டி அமைப்பிலிருந்து, நிறைய எதிர்ப்புகள் வந்தன. இந்த புதிய செயல்திட்டத்தை, குறிப்பாக, ஐ.ஐ.டி ஆசிரியர் பெடரேஷன் எதிர்த்தது.

புதிய பொது நுழைவுத்தேர்வு நடைமுறையின் கீழ், அனைத்து நிலைகளையும் ஒரு மாணவர் கடக்க வேண்டும் என்றாலும், மத்திய கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்களை சேர்க்கும் நடைமுறை வித்தியாசமாகவே இருக்கும். இந்த புதிய முறையின் மூலமாக, IIT – JEE மற்றும் AIEEE போன்ற தேர்வு முறைகள் நீக்கப்படும்.

ஒரே நாளில் நடத்தப்படும், மெயின் மற்றும் அட்வான்ஸ் தேர்வுகளை மாணவர்கள் எழுத வேண்டும். 40% மதிப்பெண்கள்(weightage), 12ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களுக்கும், 30% மதிப்பெண்கள் மெயின் தேர்வு செயல்பாட்டிற்கும், 30% மதிப்பெண்கள், அட்வான்ஸ்டு தேர்வு செயல்பாட்டிற்கும் வழங்கப்படும்.

ஐ.ஐ.டி -களை பொறுத்தவரை, வடிகட்டும் செயல்முறை இருக்கும். 12ம் வகுப்பு மதிப்பெண்களுக்கும், மெயின் தேர்வு செயல்பாட்டிற்கும் தலா 50% மதிப்பெண்கள் வழங்கப்படும். 12ம் வகுப்பு மதிப்பெண்கள் மற்றும் மெயின் தேர்வு செயல்பாட்டு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் முதல் 50,000 மாணவர்கள் மட்டுமே, அட்வான்ஸ்டு தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சி பெறுபவரே, இறுதியாக, ஐ.ஐ.டி -யில் சேர்க்கைப் பெறுவார். 2015ம் ஆண்டு வாக்கில், வேறு முறைக்கு மாறுவதற்கு ஐ.ஐ.டி கவுன்சில் ஒப்புக் கொண்டுள்ளது.

பிற மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சேர்க்கை நடைமுறைகளை விட, ஐ.ஐ.டி சேர்க்கை நடைமுறைகள் வித்தியாசமாக இருந்தாலும், இந்த கல்வி நிறுவனங்களுக்கான கவுன்சிலிங் ஒன்றாகவே நடத்தப்பட்டு, சேர்க்கை கடிதமும் ஒன்றாகவே வழங்கப்படும்.

மெயின் தேர்வானது, மல்டிபிள் வகையிலான பேப்பராகும். மேலும், அட்வான்ஸ்டு பேப்பரின் அம்சங்கள், ஐ.ஐ.டி -களின் கூட்டு சேர்க்கை வாரியத்தால்(Joint admission board) முடிவு செய்யப்படும். இந்த கூட்டு சேர்க்கை வாரியம்தான், பேப்பர் உருவாக்கம், திருத்துதல் மற்றும் அட்வான்ஸ்டு தேர்வின் அடிப்படையில் மெரிட் பட்டியலை தயாரித்தல் போன்ற செயல்பாடுகளுக்குப் பொறுப்பு. இந்த அட்வான்ஸ்டு தேர்வை நடத்த CBSE துணைபுரிகிறது.

மெயின் தேர்வை நடத்த, என்.ஐ.டி, மத்திய நிதியுதவி பெறும் நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு பிரதிநிதிகள் அடங்கிய ஒரு கூட்டு விரிவாக்க கமிட்டி அமைக்கப்படும். மராட்டியம், குஜராத் மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்கள், இந்த புதிய முறையை ஏற்றுக்கொள்ள ஆர்வமுடன் இருக்கின்றன.

இந்த புதிய முறையானது, பள்ளி அமைப்பை புதுப்பிக்க மட்டுமின்றி, கற்பித்தலில் இருக்கும் குறைகளைப் போக்கவும் உதவும். மாநில வாரியத் தேர்வுகளில் சிறப்பாக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், ஐ.ஐ.டி -யில் இடம் பெறுவார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இறுதியான மாணவர் பிரதிநிதித்துவம், கடந்த காலங்களைவிட நிச்சயம் விரிவான அளவில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: கல்விமலர்