- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

வாருங்கள் உலகை வெல்லலாம்-2

2. அறிக உங்கள் திறமையை

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான திறமையை இறைவன் அளித்திருக்கிறான். ஒரு மாணவன் படிப்பில் சிறந்து விளங்குவான். மற்றொரு மாணவி தனது இனிய குரலினால் அனைவரது பாராட்டையும் பெறுவாள். மற்றொரு மாணவன் தடகள விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டுவான். வேறு ஒரு மாணவி ஓவியம் வரைவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவளாக இருப்பாள். இப்படியாக ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருப்பது உண்மை. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் திறமை எதில் முழுமையாக வெளிப்படுகிறது என்பதை அறிந்து கொள்வதில் தான்.

எடுத்துக்காட்டாக நமது உடலில் உள்ள கண்கள் பார்ப்பதற்கு உதவுகிறது. கண்பார்வை இல்லாவிட்டால் உலகமே இருட்டாக காட்சி அளிக்கும். அந்தக் கண்களினால் பார்க்க மட்டுமே முடியும். ஆனால் கேட்க முடியாது. இந்த உண்மை நம் அனைவருக்கும் தெரியும். நாம் கண்களால் பார்ப்பதை அறியாமல் அதை கேட்பதற்கு பயன்படுத்தினால் என்ன ஆகும். உலகத்து ஓசைகள் எதுவுமே நமக்குத் தெரியாமல் போய்விடும். எனது கண்களினால் ஒரு சிறிய ஓசையைக்கூட கேட்க முடியவில்லை என்று யாரும் குறைப்பட்டுக் கொள்வதில்லை. இதற்குக்காரணம் என்ன? கண்களின் திறமை பார்ப்பது மட்டும் தான் என்பதை நாம் அறிந்து இருப்பது தான். நமக்கு ஒரு துறையில் திறமை இருந்து ஆனால் அதில் செயல்படாமல் வேறு ஒரு துறையில் ஈடுபட்டால் வெற்றி அடைவது தடைப்படும்.

நீச்சல் வீராங்கனையாக விரும்பும் ஆர்வமும், திறமையும், உடல் ஆற்றலும் உடைய மாலதியை, அவளது பெற்றோர் அந்த துறையில் ஈடுபட வைக்காமல், உட்கார்ந்த இடத்திலேயே ஓவியம் வரையும் துறையில் போகச் சொன்னால் மாலதி முன்னேற்றம் அடைய முடியாது.

எனவே உங்கள் திறமை எந்த துறையில் அதிகமாக வெளிப்படுகிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்வது மிகவும் அவசியம். குளத்தின் கரையில் வசிக்கும் மான்கள் பறப்பதற்கு முயற்சி செய்வதில்லை. குளத்தில் வாழும் மீன்கள் தரையில் ஓடுவதற்கு ஆசைப்படுவதில்லை. அவைகளுக்கு தங்கள் திறமை எந்த இடத்தில் முழுமையாக வெளிப்படும் என்பது தெரிகிறது.

ஓரு மாணவனும் தன்னுடைய திறமை எந்த பாடத்தில் அதிகமாக வெளிப்படுகிறது? எந்த பாடத்தில் அதிக மதிப்பெண் பெற முடிகிறது என்பதை அறிந்து கொண்டால் போதும். அதற்கு ஏற்ப அவன் மேல்படிப்பை தொடரமுடியும்.

அடுத்த வீட்டு அமலா அறிவியல் படிக்கிறாளே என்பதற்காக அறிவியலில் அதிக ஆர்வம் இல்லாத அனுராதா அந்த துறையை தேர்ந்தெடுப்பது தவறு. அனுராதாவிற்கு வணிக இயலில் ஆர்வம் அதிகமாக இருக்குமானால் அவள் அந்த துறையைத்தான் தேர்ந்து எடுக்க வேண்டும்.

உலக சாதனை படைத்த நீச்சல் வீரன் குற்றாலீசுவரன் தனக்கு நீச்சல் நன்றாக வரும் என்பதை உணர்ந்தான். அவனது பெற்றோரும் தங்கள் மகனை நீச்சல் பயிற்சியில் ஈடுபடுத்தினர். மிகவும் சிறுவனாக இருந்த போதே குற்றாலீசுவரன் கடலில் நீந்த ஆரம்பித்தான். இலண்டனின் ஆங்கிலக் கால்வாயை பதினோறு மணி நேரம் தொடர்ந்து நீந்தி உலக சாதனை படைத்தான். இதற்குக் காரணம் தனது திறமை நீச்சலில் முழுமையாக வெளிப்படும் என்பதை அவன் அறிந்ததுதான்.

இவ்வாறு ஒவ்வொரு மாணவனும், மாணவியும் தங்களுக்கு பிடித்த துறை எது? தங்கள் திறமையை எந்த துறையில் முழுவதுமாக வெளிக்காட்டலாம் என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்றவாறு செயல்படுவது அவசியம். அப்போது தான் சாதனையாளாராக வடிவெடுக்கலாம்.

முயற்சி செய்கின்ற வரையில் யாருக்குமே தன் திறமை தெரியாது. தோண்டத் தோண்ட மணலில் தண்ணீர் ஊறுவதைப்போல ஒரு செயலில் கண்ணுங்கருத்துமாக ஈடுபடும் போதுதான் திறமைகள் வெளிப்படும். தனக்கு யாருமே உதவ முன்வரவில்லையே என்று நம்பிக்கை இழக்க வேண்டாம். திறமை உள்ளவர்களின் பின்னால் திறமை உள்ளவர்கள் நிற்பார்கள்.

யார் தங்களுக்கு என்ன தேவை என்பதை சரியாகத் தெரிந்து கொண்டு அதை அடையும் வழியில் சோம்பல் இல்லாமல் உழைக்கிறார்களோ அவர்கள் எண்ணிய எண்ணம் நிச்சயமாக நிறைவேறும். இதற்கு உதாரணமாக தொழில் மேதை என்று அனைவராலும் போற்றப்பட்ட ஜி டி நாயுடு அவர்களைக் குறிப்பிடலாம்.

‘நான் சிறந்த தொழில்மேதையாக எதிர்காலத்தில் வருவேன்’ என்ற அசையாத நம்பிக்கை கொண்டவர் நாயுடு அவர்கள். அதற்காக அவர் தனக்குப் பிடித்த துறையை தேர்ந்தெடுத்துக் கொண்டார். அவருக்குப் படிப்பதில் ஆர்வம் இல்லை. எனவே அவர் தொழில் கற்றுக் கொள்ளவும், தனியாக இருந்து தொழில் செய்யவும் விரும்பினார்.

பதினெட்டு வயதில் அவர் உணவு விடுதியில் வேலைக்குச் சேர்ந்தார். மோட்டார் சைக்கிளின் உதிரி பாகங்களை கழற்றவும், மறுபடியும் மாட்டவும் கற்றுக் கொண்டார். மெக்கானிக்காக தொழில் தொடங்கினார். இந்த அனுபவம் அவருக்குப் பிற்காலத்தில் சொந்தமாக ஒரு மோட்டார் கம்பெனியை நடத்துவதற்குத் தேவையான அனுபவத்தைப் பெற்றுத் தந்தது.

நாயுடு அவர்கள் தொடங்கிய யுனைட்டட் மோட்டார் சர்வீஸ் என்ற பேருந்து நிறுவனம் நாற்பது ஆண்டுகளில் வியக்கத்தக்க அளவில் வளர்ந்தது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் அவரது பேருந்துகள் போகாத ஊர்களே இல்லை என்று கூட கூறலாம்.

இந்த நிறுவனத்தின் மூலமாக ஒவ்வொரு நாளும் அந்தக் காலத்தில் பத்தாயிரம் மக்கள் பயன் அடைந்தனர். இவரது நிறுவனத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றினர். நாயுடு அவர்கள் தொழில் துறையில் மட்டும் சாதனை புரிந்தவர் அல்ல, ஆராய்ச்சித் துறையிலும் புகுந்து கலக்கியவர். பல பட்டங்கள் பெற்று பல்கலைக்கழகத்தில் படித்த அறிவியல் அறிஞர்களால் செய்ய முடியாத பல சாதனைகளை அவர் தனது சிந்தனை வீச்சினால் நிகழ்த்திக் காட்டினார். வேளாண்மைத் துறையில் மூன்று முதல் நான்கு அடி உயரம் மட்டுமே வளரக்கூடிய பருத்திச் செடியினை பத்து முதல் பதினைந்து அடி உயரம் வளருமாறு செய்தார்.

பொதுவாக பருத்திச் செடியின் ஆயுட்காலம் ஆறுமாதங்கள் மட்டுமே. ஆனால் நாயுடு அவர்கள் உருவாக்கிய பருத்திச் செடி நான்கு ஆண்டுகளுக்குப் பயன் தந்தது. அதோடு மட்டும் அல்ல, அதன் விளைச்சல் சாதாரண பருத்திச் செடியின் விளைச்சலைப் போல ஐந்து மடங்கு அதிகமாக இருந்தது. நாயுடு அவர்களுக்கு முறையான கல்வி பயில ஆர்வம் இல்லை. ஆனாலும் அவர் தன்னுடைய திறமை வெளிப்படும் துறை எது என்பதை மிகத் துல்லியமாக கணித்து வைத்திருந்தார். அந்த துறைகளில் ஆர்வத்தோடு உழைத்து உலகப் புகழ் அடைந்தார்.

எனவே மாணவச் செல்வங்களே உங்கள் திறமை எந்த துறையில் பளிச்சிடும் என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள். அதற்குத் தகுந்த படிப்பை தெரிந்தெடுத்துப் படியுங்கள். வெற்றி பெறுவது உறுதி.

சோம்பல் இல்லாமல் உழைக்க நினைத்தால் தெய்வம் கூட அவர்களுக்கு உதவி செய்ய வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு முன்னால் வந்து நிற்கும் என்று திருக்குறள் கூறுகிறது.

குடிசெய்வல் என்னும் ஒருவர்க்குத் தெய்வம்

மடிதற்றுத் தான் முந்துறும்.
ஓவ்வொருவரும் தகுதி உடைய மனிதராக தன்னை ஆக்கிக் கொள்வதே வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாகும். நீ பறவையா அல்லது விலங்கா என்பதை தீர்மானித்துக் கொள். பறவையாக இருந்தால் பறக்க வேண்டும், விலங்காக இருந்தால் பொதி சுமக்க வேண்டும். நீ யார் என்பதை அறியாத வரையில் தெளிவான வாழ்க்கை வாழ முடியாது. அதனால் தான் மகான்கள் ‘நீ யார் என்பதை அறிந்து கொள். அப்படி அறிந்தால் துன்பங்களுக்கு எல்லாம் விடுதலை அளித்து விடலாம்’ என்கின்றனர்.
தன்னை அறியத் தனக்கு ஒரு தீங்கில்லை
தன்னை அறியாமல் தான் கெடுகின்றான்
என்று இதே கருத்தை வலியுறுத்துகிறார் திருமூலர் தனது திருமந்திர நூலில். எனவே மாணவச் செல்வங்களே உங்கள் திறமையை கண்டு பிடியுங்கள். வாழ்க்கையில் உயர்வு உங்களைத் தேடி வரும்.
வேணுசீனிவாசன்