- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

உம்மு சுலைம் (ரலி)

இஸ்லாமிய வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற பெண்மனிகளில் உம்மு சுலைம்(ரலி) அவர்களும் ஒருவராவார். இவர்கள் ஈமானிய உணர்வும், திடஉறுதியும், அறிவும், ஆற்றலும், வீரமும், ஒப்பற்ற ஒழுக்க மாண்புகளும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற அன்னையவர்கள். ஒரு தாயாகவும் தாயியாகவும் மட்டுமின்றி இஸ்லாத்திற்க்காகப் போராடும் வீராங்கனையாகவும் திகழ்ந்தார்கள். ஸஹீஹ் முஸ்லிமில் வரக்கூடிய ஹதிஸில் – உஹது யுத்தத்தில் பங்குகொண்ட 14 பெண்களில் இவர்களும் ஒருவர், போராளிகளுக்கு உணவு தயாரித்தல், நீர் விநியோகித்தல், காயங்களுக்கு மருந்து கட்டுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டதாக இவர்களது மகன் அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஹுனைன் யுத்தத்தின்போது, இவர்கள் கற்பவதியாக இருந்தார்கள். அப்போதும் இடுப்பில் கத்தியை வைத்திருந்தார்கள். அபூதல்ஹா(ரலி) அவர்கள்,  நபி(ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! உம்மு சுலைம் கத்தியை வைத்துள்ளார் என முறையிட்டபோது, உம்மு சுலைம்(ரலி) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! முஷ்ரிக் எவனாவது என்னை நெருங்கினால், அவனது வயிற்றைக் கிழித்துவிடுவேன் என பதிலளித்தார்கள். சிந்தித்து பாருங்கள் சகோதரிகளே! இவர்கள் கற்பிணியாக இருந்தும் ஜிஹாதுக்கு புறப்பட்டுள்ளார்கள் என்றால்? நமது நிலை என்ன?  இஸ்லாத்தை வளர்ப்பதற்க்கு நாம் செய்த தியாகம் என்ன? குறைந்தளவு இஸ்லாமிய வழிமுறைகளையாவது நமது வாழ்வில் எடுத்து நடக்கின்றோமா? என்பதை நாம் ஒவ்வொருவரும் சுயபரிசோதனை செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.

அன்னையவர்கள், தமது கணவர் மாலிக் அவர்கள் ஊரில் இல்லாத போது இஸ்லாத்தை ஏற்றார்கள். கணவர் ஊர் திரும்பிய போது மனைவி மதம் மாறிவிட்டாள் எனக் கடுமையாக சினமுற்றார். நீ மதம் மாறிவிட்டாயா? எனக் கோபத்துடன் கேட்டபோது, இல்லை, நான் அல்லாஹ்வை விசுவாசித்திருக்கிறேன், எனப் பதிலளித்தார்கள். (அஃலாமுன்னுபலா)

கணவனின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் தனது குழந்தையை இஸ்லாமிய நிழலில் வளர்தெடுத்திட உறுதி பூண்டார்கள். தனது மகன் அனஸ்(ரலி) கலிமாவை கற்றுக் கொடுத்தார்கள். தனது மகனின் எதிர்காலம் வளமாக அமைய வேண்டுமென்பதற்க்காக, அவரை  நபி(ஸல்) அவர்களுக்கு பணியாளாக்கினார்கள். உழைத்துத்தர கணவனில்லை, எனவே இவர் பணிவிடை செய்து உழைத்து போட வேண்டும் என்ற எண்ணத்தில் அன்னையவர்கள் அப்படி செய்யவில்லை, நபி(ஸல்) அவர்களின் கண்காணிப்பில் தனது அன்பு மகன் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கமே அவரை பணியாளராக்க தூண்டியது. அது நடந்தேறியது. நபியவர்களுக்கு பணியாளராக செயற்பட்டதன் மூலம் 2286 நபிமொழிகளை அறிவிக்கும் வாய்ப்பை அனஸ்(ரலி) அவர்கள் பெற்றார்கள். தனது தாய் செய்த இந்த நல்ல செயலை அனஸ்(ரலி) அவர்கள் அடிக்கடி நன்றியுடன் நினைவு கூறினார்கள்.

சகோதரிகளே! இதன்மூலம் நாம்பெறும் படிப்பினை என்ன? நாமும் நமது வீட்டை இஸ்லாமிய சூழலாக்க வேண்டும். நமது குழந்தைகளை இஸ்லாமிய சூழலில் வளர்த்தெடுக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் இம்மை, மறுமை இரண்டினதும் அமைதியை கெடுத்துவிடுவார்கள். பிள்ளைகளுக்கு சிறந்த உதாரணமாக தாய்மார்களே வாழ்ந்து காட்ட வேண்டும். உங்கள் பார்வை, பேச்சு, எண்ணம் அனைத்தையும் தூய்மையாக்கி வையுங்கள், இதன்மூலம் நல்லதொரு சந்ததியை உருவாக்கலாம், இன்ஷா அல்லாஹ்.

அன்னையவர்களின் கணவர் மரணித்த பின், இவரை மணக்க அபூதல்ஹா  முன்வந்தார், எனினும் அப்போது அவர் முஷ்ரிக்காக இருந்தார். வாழ்க்கைத்துணை கிடைத்தால் போதும், அது யாராக இருந்தால் என்ன என்று அன்னையவர்கள் எண்ணவில்லை, இந்த வாய்ப்பை பயன்படுத்தி தாஃவத் செய்தார்கள். அன்னையவர்கள் அவரை நோக்கி கூறுகிறார்கள். உங்களுக்கு நன்மையோ தீமையோ செய்ய சக்தியற்ற சிலைகளை நீங்கள் வணங்குகிறீர்களே இது சரிதானா? உங்களுக்கு ஒரு தச்சன் மரப்பலகையால் ஒரு சிலையைப் படைத்து தருகிறான், அதற்குப் போய் நீங்கள் வழிபாடு செய்வது அறிவுக்குப் பொருத்தமானதா? என்று அடுக்கடுக்காக வினாக்களை தொடுத்தார்கள். இந்த கேள்விக்கனைகளால் தாக்கப்பட்ட அபூதல்ஹா உண்மையை உணர்ந்து இஸ்லாத்தில் இணைய சம்மதித்தார். இந்த மகிழ்ச்சியில் அன்னையவர்கள் நீங்கள் இஸ்லாத்தில் இணைந்ததையே எனக்கு மகராக ஏற்றுக்கொள்கிறேன் எனக் கூறினார்கள்.

அன்னையவர்கள், அபூதல்ஹா(ரலி) அவர்களை மணந்து, அதன் மூலம் அபூஉமைர் என்றொரு ஆண்மகனைப் பெற்றார்கள். இவர் ஒரு முறை நோயுற்றார், அபூதல்ஹா ஊரில் இல்லாத போது மரணித்து விட்டார்கள். இந்த செய்தியை நானாகக் கூறும்வரை நீங்கள் யாரும் அபூதல்ஹாவிடம் கூறாதீர்கள். என தன் குடும்பத்தாருக்கு அறிவித்தார்கள், அபூதல்ஹா(ரலி) அவர்கள் இரவில் இல்லம் வந்து, மகனை விசாரித்தபோது முன்னதைவிட அமைதியாகவுள்ளார் என்று கூறினார்கள், பின்பு இரவு உணவு உண்ட பின்னர், இல்லறத்திலும் ஈடுபட்டதற்க்குப்பின், மகன் மரணித்த செய்தியை அறிவிக்கிறார்கள். குழந்தையின் மரணத்தை நினைத்து, ஒப்பாரி  ஒலமின்றி இப்படி எடுத்துக்கூறிய இன்னொரு பெண்ணை உலக வரலாற்றில் காணமுடியாது சகோதரிகளே. இப்படிப்பட்ட பொறுமையுள்ளம் கொண்டவர்களாக வாழ்ந்து காட்ட அல்லாஹ் எம்மை ஆக்கியருள்வானாக! அன்னையவர்கள் விருந்தாளிகளை கௌரவிப்பதிலும் முன்மாதிரியாகத் திகழ்ந்து காட்டினார்கள்.

ஒருமுறை நபி(ஸல்) அவர்களின் சமூகத்துக்கு ஒரு புதிய விருந்தாளி வந்தார். இவரை அபூதல்ஹா(ரலி) அவர்கள் தனது வீட்டுக்கு விருந்தளிக்க அழைத்து வந்தார்கள். மனைவியிடம் ஏதேனும் உணவு உண்டா எனக்கேட்க, குழந்தைகளுக்கு மட்டும்தான் உணவுள்ளது, இருந்தாலும் விருந்தாளியை கெளரவிக்க வேண்டும் என்ற நோக்கில் நான் குழந்தைகளை எப்படியேனும் சமாளித்து தூங்க வைத்துவிடுகிறேன், விருந்தாளி மட்டும் உண்டு பசியாறட்டும் என்று ஆலோசனை கூறினார்கள். பெற்ற குழந்தைகளை பட்டினி போட்டு இவர்கள் தமக்குள் செய்த இந்த இரகசிய தியாகம் பற்றி அல்குர்ஆன் வசனமொன்று அருளப்பட்டது.

தமக்கு தேவையிருந்த போதிலும் அவர்கள் தங்களைவிட பிறருக்கே முன்னுரிமை அளிப்பார்கள்  (அல்குர்ஆன் 59:9)

இதுபோன்ற அழுத்தமான அறிவுரைகளுக்கேற்ப நபித்தோழர்கள் அனைவரும் எளியோர்க்கும் வழியோர்க்கும் விருந்திட்டு உபசரித்தார்கள். ஆனால் அபூதல்ஹா, உம்மு சுலைம்(ரலி) இருவரின் வாழ்வு இப்பண்பாட்டில் சிறந்த வியக்கத்தக்கதொரு முன்மாதிரியாய் திகழ்கிறது.

அன்னையின் சிறப்பை சிகரத்தில் ஏற்றும் நபியவர்களின் முன்னறிவிப்பொன்று உள்ளது, நான் சுவனத்துக்கு சென்றேன். அங்கே ஒரு காலடி ஓசை கேட்டது பார்த்தபோது உம்மு சுலைம்(ரலி) அங்கே இருந்தார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்

இந்த நற்செய்தியை பல்வேறு தியாகங்களால் பெற்ற அன்னை உம்மு சுலைம்(ரலி) அவர்களது வாழ்வை நாம் நமக்கான சிறந்த படிப்பினையாக பெறுவோம்.

நன்றி: உம்மு யாசிர் – சுவனம்