- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

அப்போ ஆட்டோ ஓட்டுநர், இப்ப வழக்கறிஞர்

அப்போ ஆட்டோ ஓட்டுநர், இப்ப வழக்கறிஞர்… வெங்கடலட்சுமியின் சாதனைக்கதை

பெங்களூரு தேவசங்கரி நகர் பகுதியில் இருந்து வெளிவருகிறது ஒரு ஆட்டோ, அந்த ஆட்டோவை ஒட்டிவருகிறார் ஒரு பெண். மலர்ந்த கண்களும், சிரித்த முகமும் கொண்ட அந்த பெண்ணைப் பார்த்து பலரும் வாழ்த்து தெரிவிக்கின்றனர். பதிலுக்கு அவரும் நன்றி தெரிவித்தபடி தனது பயணத்தை தொடர்கிறார்.

இவரது இந்த ஆட்டோ ஒட்டுனர் பணி இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. அடுத்த மாதம் முதல் இவர் காக்கி சீருடையை கழட்டிவைத்துவிட்டு கறுப்பு கவுனை மாட்டிக்கொண்டு கோர்ட்டிற்கு சென்று வாதாடப்போகிறார்.

ஆம்… ஆட்டோ டிரைவர் வெங்கடலட்சுமி, வழக்கறிஞர் வெங்கடலட்சுமியாகிறார்.

இது ஒன்றும் ஒரு நாள் கதை அல்ல அவரது மனதிற்குள் விழுந்த பலநாள் விதை.

எளிய குடும்பத்தைச் சேர்ந்த வெங்கடலட்சுமிக்கு, டிகிரி முடித்த கையோடு திருமணம் ஆகிவிட்டது. கணவர் வெல்டிங் வேலை செய்பவர். திருமணத்திற்கு சாட்சியாக ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.

பெண் குழந்தையை நல்லதொரு பள்ளியில் சேர்த்தார், படிப்பு செலவு அதிகமானது, கணவரது வருமானம் போதவில்லை, தனக்கு தெரிந்த சமையல் வேலையை மேற்கொண்டார். ஐம்பது, நூறு பேரின் தேவைக்கு, வீட்டிலேயே சமைத்து எடுத்துப்போய் கொடுத்து வருமானம் பார்த்து வந்தார். சமைத்த உணவுகளை எடுத்துப் போகவேண்டிய ஆட்டோ டிரைவர் பல சமயம் வராமல் போய் தொழிலில் சங்கடத்தை ஏற்படுத்தினார். இதன் காரணமாக இவரே ஆட்டோ ஓட்டுவது என்று முடிவு செய்தார்.

ஆட்டோ வாங்கியதும் பலரும் இவரது ஆட்டோவில் பயணம் செய்ய விருப்பப்படவே, சமையல் தொழிலை விட்டுவிட்டு ஆட்டோ ஓட்டுனராகி விட்டார். மீட்டருக்கு மேல் கட்டணம் வசூலிப்பது இல்லை. வாடிக்கையாளரிடம் சரளமாக ஆங்கிலத்தில் பேசுதல் போன்றவைகளால் இவருக்கு வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடியது.

இப்படியே சில வருடங்கள் ஓடியது இந்த நிலையில்தான் ஒரு நாள், ஐந்து பேர் கொண்ட ரௌடி கும்பல் இவரை தாக்கி, கடத்தி விபச்சார கும்பலிடம் விற்பதற்கு முயன்றது, மிகவும் போராடி அவர்களிடம் இருந்து தப்பிய வெங்கடலட்சுமி உடனே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இவரது புகார் அங்கே கண்டுகொள்ளப்படவில்லை, நாளைக்கு வாம்மா, நாளைக்கு வாம்மா என்று அலைக்கழிக்கப்பட்டார், குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் தீவிரமாக இருந்த வெங்கடலட்சுமி வழக்கு பதிவு செய்ய மிகவும் சிரமப்பட்டார், கோர்ட்டில் வெங்கடலட்சுமி சார்பில் வாதாடிய வழக்கறிஞரின் வாதத்தில் உயிரே இல்லை, மேலும் இந்த வழக்கை கோர்ட்டிற்கு கொண்டு வருவதற்கே பதிமூன்று வருடங்களாகி விட்டது.

தன்னைப்போல எத்தனை அபலைப் பெண்கள் இப்படி சத்தில்லாத, உணர்வில்லாத, உயிரில்லாத வாதத்தால் மோசம் போய்க் கொண்டு இருக்கின்றனர் என்று உணர்ந்து அப்போதே தானும் ஒரு வழக்கறிஞராவது என்று முடிவு செய்தார்.

சட்டக்கல்வியை தபால் மூலம் படிப்பதால் பலன் இல்லை என்பதால் தனது 36வது வயதில் ரெகுலர் கல்லூரியில் சேர்ந்தார். காலை 8 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை கல்லூரி வாழ்க்கை பிறகு மதியம் 2 மணிமுதல் இரவு வரை ஆட்டோ ஒட்டும்பணி. ஆட்டோவிலேயே பாடபுத்தகங்களை வைத்திருப்பார், வாடிக்கையாளருக்காக காத்திருக்கும் நேரத்திலும், ஆட்டோவை ஓட்டாத நேரத்திலும் பாடபுத்தகங்களை படிப்பார். வீட்டிற்கு போனாலும் அன்றைய பாடக்குறிப்புகளை படித்து முடித்துவிட்டே தூங்கப் போவார்.

இப்படியான இவரது ஐந்து வருட படிப்பு வீண் போகவில்லை, நல்ல மார்க்குகள் எடுத்து வெற்றிகரமாக எல்.எல்.பி., படித்து முடித்தார், ஆனாலும் பார் கவுன்சில் எக்சாம் பாஸ் ஆனால்தான் கேஸ்களில் ஆஜராகமுடியும் என்ற நிலை, அந்த தேர்வையும் வெற்றிகரமாக முடித்ததன் எதிரொலியாக வருகின்ற மார்ச் மாதம் முதல் கோர்ட்டிற்கு வழக்கறிஞர் வெங்கடலட்சுமியாக செல்ல இருக்கிறார்.

ஒரு நியாயமான ஆட்டோ ஒட்டுனராக இருந்த நான் இனி நேர்மையான அதே நேரத்தில் சமூகத்தில் நீதி கிடைக்காத பெண்களுக்காக வாதாடும் வழக்கறிஞராக இருப்பேன் என்கிறார் உறுதியாக…