- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

கடின உழைப்பிற்காகவே பிறந்து, மறைந்த டாக்டர் மைக்கேல்!

Michael E. DeBakey [1]ஒவ்வொரு மனிதரும் பிறக்கிறோம், 70, 80 ஆண்டுகள் வாழ்கிறோம். என்ன தொழில் வேண்டுமானாலும் செய்கிறோம். ஆனால் தான் சார்ந்த துறையில், சாதனை புரிந்து, இறந்தும் வாழ்பவர்கள் சிலரே.

அதுபோன்று சாதனை புரிந்து மறைந்த ஒருவரைத் தான் இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளோம்.

இதய அறுவை சிகிச்சை என்பது இன்றைய காலத்தில் வெகுசுலபமானதாகவும், சாதாரணமாக நிகழ்வாகவும் மாறிவிட்டது. ஆனால் அதன் பின்னணியில் பைபாஸ் அறுவை சிகிச்சை, ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை என்று ஏராளமான இருதய அறுவைச் சிகிச்சைக்கு வித்திட்டவர் டாக்டர் மைக்கேல் டிபேக்கி.

டாக்டர் மைக்கேல் டிபே‌‌க்கியின் திறமையால் ஈர்க்கப்பட்டு பலர் இதய அறுவைச் சிகிச்சை மருத்துவர்களாகி இருப்பதாக அமெரிக்காவின் மெத்தடிஸ்ட் மருத்துவமனையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதய அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தக்கூடிய எண்ணற்ற உபகரணங்களை கண்டுபிடித்தவர் டாக்டர் மைக்கேல் டிபேக்கி.

கடந்த img1080715040_2_2 [2]1932ஆம் ஆண்டில் மருத்துவ பேராசிரியராக பணியாற்றிய மைக்கேல் ‘ரோலர் பம்ப்’ என்ற உபகரணத்தை கண்டுபிடித்தார்.

அறுவை சிகிச்சையின்போது இதயத்தையும், நுரையீரலையும் இயக்கக்கூடிய கருவியாக இந்த பம்ப் இப்போதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்தக் கால கட்டத்தில் திறந்த இதய அறுவை சிகிச்சை (Open heart Surgery) அறிமுகப்படுத்தப்பட்ட சமயத்தில், இந்தக் கருவியே முன்னோடியாகத் திகழ்ந்தது.

தனது ஆயுட்காலத்தில் அவர் கண்டுபிடித்த ஏராளமான உபகரணங்களில் இந்த கண்டுபிடிப்பே முதல் துவக்கமானது. ஆனால், இன்று மருத்துவ உலகில் அதுவே சாதாரண நடைமுறையாக இருந்து வருகிறது.

இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நோயாளிகளுக்கான செயற்கை இதயமாக அது விளங்கியது எனலாம். இதனை முன்னோடியாக வைத்து சுமார் 70 அறுவை சிகிச்சை கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

கடந்த 2006ஆம் ஆண்டு துவக்கத்தில் மைக்கேல் டிபேக்கியின் இதயக் குழாயில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு வயது 97.

அவர் கண்டுபிடித்த உபகரணங்களின் அடிப்படையிலேயே அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனை அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

அறுவை சிகிச்சைக்குப் பின் தான் உயிருடன் இருப்பது மிகப்பெரிய அதிசயம் என்று கூறினார்.

துவக்கத்தில் தனக்கு அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர்களிடம் மறுப்பு தெரிவித்த மைக்கேல், பின்னர் மகிழ்ச்சியை தெரிவித்தார்.

70 ஆண்டுகால டாக்டர் தொழிலில் மைக்கேல் டிபே‌க்கி, சுமார் 60 ஆயிரம் இருதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளார்.

அப்படிப்பட்ட டிபே‌க்கி தனது 99-ஆவது வயதில் சில தினங்களுக்கு முன் ஹூஸ்டன் நகரில் மரணம் அடைந்தார்.

இதய அறுவை சிகிச்சை நிபுணர் என்பதோடு நில்லாமல், பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி வரும் உபகரண கண்டுபிடிப்பாளர் என்பதால், இதய அறுவை சிகிச்சை உள்ளவரை டாக்டர் டிபேக்கியின் புகழும் நிலைத்து நிற்கும்.

நன்றி: வெப்துனியா