- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

நூற்றுக்கு நூறு!

இன்றைய இளம் தலைமுறையினரிடம் பெற்றோர்களும் ஆசிரியர்களும் எதிர் பார்க்கும் ஒரே ஒரு விஷயம் நூற்றுக்கு நூறு. தேர்வுகளில் நூற்றுக்கு நூறு கொடுத்து பாராட்டி மகிழ்கிறது. குறைவாக மதிப்பெண் களைப் பெறும் மாணவர்களுக்கு எதிர்காலம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்று முத்திரையிட்டு அவர்களை மன உளைச் சலுக்கு ஆளாக்கிவிடுகிறது.

ஒரு மாணவன் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்கி விட்டால் மட்டும் போதுமா? இந்த கேள்வியை நாம் அனைவரும் நமக்குள்ளே கேட்டுப் பார்த்து விடை தேட வேண்டிய அவசியம் வந்துவிட்டது. ஒரு நாட்டின் எதிர்காலம் அந்நாட்டின் மாணவர் களை நம்பித்தான் இருக்கிறது. நல்ல பண்புகளை இளம் வயதில் வளர்த்துக் கொண்டு வாழப் பழகும் மனிதனே பிற்காலத்தில் உலகம் போற்றும் உயர்ந்த நிலையை அடைகிறான். ஒரு மாணவன் தேர்வில் மட்டுமின்றி அனைவரையும் மதிக்கும் நல்ல குணத்திலும், பிறருக்கு உதவும் கருணை உள்ளத்திலும், எந்த சூழ்நிலையிலும் நேர்மையை கடைப்பிடித்து வாழ்வதிலும், உடல் நலத்தினை பேணிக்காப்பதிலும் நூற்றுக்கு நூறு வாங்க வேண்டும்.

வாழ்க்கையில் அறிவிற்கு முதலிடம் கொடுக்க வேண்டுமா? அல்லது அன்பிற்கு முதலிடம் கொடுக்க வேண்டுமா? வாழ்க்கையில் அன்பு நெறியை முதன்மையாகக் கடைப்பிடித்து வாழ்ந்த பலர் உலகம் போற்றும் உத்தமராக போற்றப்படுகின்றனர். அத்தகைய ஒருவரே சைதன்ய மகாபிரபு. வட மாநிலத்தைச் சேர்ந்த இந்த மகான் கிருஷ்ணபக்தியில் ஊறி திளைத்தவர். சைதன்ய மகாபிரபுவை இந்த உலகம் இன்றுவரை பெரிதும் மதித்துப் போற்று கிறது. அதற்குக் காரணம் அவர் பிறரிடத்தில் காட்டிய உண்மையான அன்பு.

சைதன்யருக்கு பதினாறு வயது நடந்துகொண்டிருந்த சமயத்தில் அவருக்கு ரகுநாத்ஜி என்றொரு நண்பர் இருந்தார். சைதன் யருக்கு ரகுநாத்ஜியும் ஒரே ஆசிரியரிடத்தில் பயின்று வந்தார்கள். “நியாய சாஸ்திரம்” என்ற தலைப்பில் இருவரும் ஆளுக்கு ஒரு நூலை படைத்தார்கள். ரகுநாத்ஜி மிகுந்த அறிவு உடையவர் என்று போற்றப்பட்டவர். இதனால் தன் அறி வாற்றல் மீது அதிக நம்பிக் கையும் கர்வமும் கொண்டிருந்தார். தன்னுடைய நூலே நிலைத்து நிற்கும் என்று அதிக நம்பிக்கை வைத்திருந்தார் ரகுநாத்ஜி. இருவரும் தினமும் படகில் பயணித்தே பாட சாலைக்குப் போவதை வழக்கமாக வைத்திருந் தார்கள். இருவரும் ஒரு வருக்கொருவர் அன்புடன் பழகி வந்தார்கள்.

ஒரு நாள் படகில் பயணித்துக் கொண்டி ருக்கையில் ரகுநாத்ஜி சைதன்யரிடம் அவர் எழுதிய நியாய சாஸ்திர நூலைப் படித்துக் காட்டும்படி கேட்டுக் கொண்டார். உடனே சைதன்யர் தான் எழுதிய நியாய சாஸ்திர நூலை வாசிக்கத் தொடங்கி வாசித்துக் கொண்டே சென்றார். இதைக் கேட்ட ரகுநாத்ஜி சற்று நேரத்தில் தேம்பித் தேம்பி அழத் தொடங்கினார். திகைத்துப் போன சைதன்யர் தன் நண்பனிடம் இதற்கான காரணத்தைக் கேட்டார். அதற்கு ரகுநாத்ஜி ஒரு காரணத்தையும் சொன்னார்.

“நான் இயற்றிய நியாய சாஸ்திர நூல் தான் பெரும் புகழைப் பெறப்போகிறது என்ற அகந்தை யில் இருந்தேன். ஆனால் நீ இயற்றியிருக்கும் நியாய சாஸ்திரம் நான் எழுதியதைவிட மிகச் சிறப்பாக இருக்கிறது. உயர்வாகவும் இருக்கிறது. உலகம் உன்னைப் போற்றிப் புகழ்ந்து என்னையும் எனது நூலையும் புறக்கணித்துவிடும்.”

தான் அழுததற்கான காரணத்தைச் சொன்ன ரகுநாத்ஜி மீண்டும் அழத் தொடங்கினார். அன்பின் வடிவமான சைதன்யர் தன் நண்பரிடம் ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்தினார். “எனதருமை நண்பனே! இதற்காகவா அழுகிறாய். புகழைவிட நண்பனின் மகிழ்ச்சியை நான் பெரிதாகக் கருதுகிறேன். உனது மகிழ்ச்சியைவிட எனக்கு வேறெதுவும் தேவை யில்லை. நான் எழுதிய நூல் இருந்தால்தானே அதை உனது நூலோடு ஒப்பிடுவார்கள்.”

இப்படிச் சொன்ன சைதன்யர், தான் எழுதிய நூலை அப்பொழுதே நதியில் வீசி எறிந்தார். தன் நண்பனின் இந்த செயலைக் கண்ட ரகுநாத்ஜி தன் நண்பன் தன்மீது வைத்துள்ள அன்பை எண்ணி மீண்டும் கதறி அழ ஆரம்பித் தார். அன்பைப் பெரிதாகக் கருதியதாலேயே சைதன்ய மகாபிரபு பெரும்புகழைப் பெற்று இன்றும் நம் நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

எந்த ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் தன்னை முழுமையாக நூற்றுக்கு நூறு ஈடுபடுத்திக் கொள்ளும் மனப்பக்குவத்தை மாணவ மாணவியர் வளர்த்துக் கொள்ள வேண்டும். படிக்கும் போது நூறு சதவிகித கவனம் படிப்பில் மட்டுமே இருக்க வேண்டும். விளையாடும் போது நூறு சதவிகிதம் கவனம் விளையாட்டில் மட்டுமே இருக்க வேண்டும். சாப்பிடும் போது நம் கவனம் முழுக்க முழுக்க சாப்பாட்டிலேயே இருக்கும்படி பழகிக் கொள்ள வேண்டும். பல மாணவர்கள் விளையாடும் போது நாளை நடக்க இருக்கும் தேர்வுகளைப் பற்றி சிந்தித்தபடியே விளையாடிக் கொண்டிருப்பார்கள். படிக்கும் போது விளையாட்டைப் பற்றி யோசித்துக் கொண்டே படிப்பார்கள். இதில் ஒரு சதவீகிதமாவது நன்மை இருக்கிறதா என்று ஐந்து நிமிடங்கள் யோசித்துப் பாருங்கள். இது மாணவ மாணவியருக்கு மட்டுமின்றி அனைவருக்குமே பொருந்தும்.

ஒரு மனிதர் ஜென் குருவைச் சந்தித்து தனது சந்தேகத்தைக் கேட்டார். “உங்களுடைய கொள்கைதான் என்ன?”

இக்கேள்விக்கு மிக எளிதாக பதிலளித்தார் ஜென் குரு. “பசி எடுத்தால் சாப்பிடுவதும் தூக்கம் வந்தால் தூங்குவதும்தான் என் கொள்கை”

கேள்வி கேட்டவர் இதை எதிர்பார்க்க வில்லை. வேறு எதையோ விரிவாகச் சொல்வார் என்று நினைத்தால் ஜென் குரு மிகச் சாதாரணமாய் இப்படிச் சொல்லிவிட்டாரே என்று அவருக்குத் தோன்றியது. “நீங்கள் சொல்வதை நான் உட்பட அனை வருமே தினமும் செய்து கொண்டிருக்கிறோம். நீங்கள் ஜென் குரு. நாங்கள் செய்யும் சாதா ரணமான இச்செயல்களை நீங்களும் செய்வ தாகக் கூறுகிறீர்களே?”

இதற்கு ஜென் குரு சிரித்தபடியே பதிலளித்தார். “நீங்கள் செய்வதற்கும் நான் செய்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. நீங்கள் சாப்பிடும் வேலைகளில் உங்களுடைய மனம் சாப்பாட்டில் நிலைத்திருக்காது. வேறு எதை எதையோ நினைத்தபடியே நீங்கள் சாப்பிட்டுக் கொண்டிருப்பீர்கள். ஆனால் நான் சாப்பிடும் போது முழுக்க முழுக்க சாப்பாட்டைப் பற்றி மட்டுமே சிந்திப்பேன். நீங்கள் தூங்கும் போது உங்கள் மனதில் இருக்கும் குழப்பம் கவலை காரணமாக கனவு உலகத்தில் அலைகிறீர்கள். ஆனால் நான் தூங்கும் போது எனக்கு நிகழ்வது தூக்கம் மட்டுமே. சுருக்கமாகச் சொன்னால் எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும் அந்த காரியமாக மாறிவிடுவது என் இயல்பு.”

குரு சொன்னதின் உள்ளர்த்தம் கேள்வி கேட்டவருக்கு இப்போது விளங்கியது. குருவின் பெருமையும் அவருக்குப் புரிந்தது.

முன்பெல்லாம் பள்ளிகளில் போதனை வகுப்பு என்றொரு வகுப்பு இருந்தது. அவ்வகுப்பில் ஆசிரியர்கள் மாணவர்களின் எதிர் காலத்தை செம்மையாக அமைத்துக் கொள்ள வழிவகை செய்யும் சிறந்த கதைகள், பெரியோர் களின் வாழ்வில் நடந்த தன்னம்பிக்கை யூட்டும் சம்பங்கள், நாட்டுப்பற்றைவளர்க்கும் வீரக்கதைகள் போன்றவற்றை எடுத்துச் சொல்லி பண்பையும் நாட்டுப்பற்றையும் மாணவர்களின் மனதில் பதிய வைப்பார்கள். இதன் காரண மாகவே அக்கால மாணவர்களின் மனதில் நாட்டுப்பற்றோடு கருணையும் நிரம்பி வழிந்தது. தாய் தந்தையரை தெய்வம் போல மதித்து பாதுகாத்தார்கள். தற்காலத்தில் ஒரு மாணவன் பெறும் அதிக மதிப்பெண்கள் மட்டுமே சிறப்பான வாழ்க்கையினை நிர்ணயிக்கும் என்று பெற்றோர்களும் கல்வி நிறுவனங்களும் இன்றைய இளம் சமுதாயத்தினருக்கு போதித்ததன் விளைவாக ஆடம்பர வாழ்க்கை ஏராளமான பணம் இவை மட்டுமே வாழ்வின் ஆதாரம் என்ற கருத்து அவர்களின் மனதில் பதியத் தொடங்கி விட்டது. இதன் விளைவாக புதிய புதிய வாழ்க்கைச் சிக்கல்களும் முதியோர் இல்லங்களும் பெருகத் தொடங்கிவிட்டன.

பெரிய படிப்பு, அதிக சம்பளம், ஆடம்பர மான வாழ்க்கை இதுவே அனைவரும் விரும்பும் மந்திரச் சொற்களாக அமைந்துவிட்டன. இன்றைய சூழலில் இது தவறில்லைதான். ஆனால் கூடவே அன்பு, கருணை, மகிழ்ச்சி இவற்றை நம் வாழ்க்கையின் முக்கியமான அங்கங்களாக ஏற்றுக்கொண்டு வாழப் பழகு வோம். எவனொருவன் இவை அனைத்தையும் ஒரு சேரப் பெற்று வாழ்கிறானோ அவனே வாழ்க்கையில் நூற்றுக்கு நூறு பெற்ற சிறந்த மனிதனாகப் போற்றி மதிக்கப்படுவான்.

நன்றி: ஆர். வி. பதி – தன்னம்பிக்கை