- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

ஜில்ஸ்வெர்னி பெற்ற வெற்றி

ஜில்ஸ்வெர்னி ‘உலகத்தைச் சுற்றி எண்பது நாட்கள்’ என்கிற உலகப் பிரசித்தி பெற்ற நாவலை எழுதினார். அவருக்கு வேறு துறையில் சம்பாதிப்பதற்கு வாய்ப்பு இருந்தும், அவர் எழுத்துத் துறையை மட்டுமே ஏற்றுக் கொண்டார்.

‘ஒரு பலூனில் ஐந்து வாரஙகள்’ என்ற கற்பனை நாவலை எழுதினார். சுவையும் திருப்பமும் இருக்க வேண்டும் என்பதற்காக ஆப்பிரிக்காவை கதைக்குப் பின்னணியாக வைத்துக் கொண்டார்.

அற்புதமாக எழுதி முடித்தார்.

பல பதிப்பாளர்களைத் தேடிச் சென்று நாவலைத் தந்தார். ஒரு பதிப்பாளர் கூட இவர் எழுதிய புதிய முறையை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆனாலும் இவர் மனம் தளர்ந்து விடவில்லை. தன்னுடைய வேலையே பதிப்பாளரைத் தேடிப் பிடித்து நாவலை வெளியிட செய்வது தான் என்று முடிவு செய்தார்.

ஒவ்வொரு நாளும் நாவலை எடுத்துக் கொண்டு பதிப்பாளரைச் சந்தித்தார். எப்பொழுதும் போலவே எந்தப் பதிப்பாளரும் இவருடைய நாவலை ஏற்றுக் கொள்ளவில்லை.

விடாமல் முயன்றார்! பதினான்கு பதிப்பாளர்களைச் சந்தித்தார். பயனில்லை. இறுதியில் பதினைந்தாவது பதிப்பாளர் இவருடைய நாவலை ஏற்றுக் கொண்டார்.

புத்தகமாக வெளியிட்டார். அமோகமாக விற்பனை யாயிற்று. உலகில் அதிகமாக விற்பனையான புத்தகங்களில் இதுவும் ஒன்று என்கிற இடத்தைப் பிடித்தது.

உடனடியாக இருபது மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. யாருமே நினைத்துப் பார்க்க முடியாத அரிய விஷயங்களைக் கற்பனையாக எழுதினார்.

அண்டங்களையும் விண்மீன்களையும் பற்றி ஆச்சரியப் படத்தக்க வகையில் எழுதியிருந்தது இவருடைய தனிச்சிறப்பு.

இவர் எழுதியது பிற்காலத் தில் உண்மையாகவே நடந்தன. கடலுக்குள் மூழ்கி செல்லுகின்ற கப்பல்கள் பற்றி முதன் முதலாகக் கற்பனையில் எழுதினார் ஜில்ஸ் வெர்னி.

இவருடைய கற்பனை தான் பின்பு ‘சப்மரின்’ என்று சொல்லப்படும் நீர் மூழ்கி கப்பல் கண்டு பிடிப்பதற்குக் காரணமாக இருந்தது.

இவருக்கு வேறு வேலைகளைப் பார்க்க வாய்ப்பு இருந்தும், தனக்குப் பிடித்தது என்பதற்காக எழுத்துத் துறையில் ஈடுபட்டு வெற்றி பெற்றார்.

எழுத்துத் தொழிலில் மிகப் பெரிய போராட்டம் நடத்தி தன்னுடைய வேலையை தீர்மானித்து அதிலேயே சென்று பணமும் புகழும் பெற்றார்.

இவருடைய தந்தை பங்கு மார்க்கெட்டில் பெரிய பொறுப்பில் இருந்தார். இந்தத் துறைக்குத் தன்னுடைய மகனும் வர வேண்டும் என்று விரும்பினார் தந்தை.

ஆனால் ஜில்ஸ்வெர்னி எழுதுவதில் ஆசையும் கற்பனையும் பெற்று விஞ்ஞான விசித்திரங்களையும கற்பனையும் சேர்த்து எழுதுவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.

அதில் அவர் காட்டிய ஊக்கமும், வேலையில் விருப்பமும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

இம்மாதிரி பெரியவர்களின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள முடியும். வருமானம் தரக்கூடிய தொழிலையும் உதறித் தள்ளி விட்டு தனக்குப் பிடித்தமான வேலை யில் ஈடுபட மனத்திண்மை அவருக்கு இருந்தது.

இதைப் போன்ற மனத் துணிவு நமக்கும் இருக்க வேண்டும் அல்லவா! கிடைத்த வேலையை ஏற்றுக் கொண்டு அதில் திறமையாக உழைத்து முன்னேறும் மனப்பக்குவம் நமக்கு இருக்கிறதா?

வாழ்க்கையில் இந்த வேலையை தான் செய்ய வேண்டும் என்ற உறுதி உள்ளதா! ஏனோ தானோ என்று வேலையில் ஈடுபடுகிறோமே! இது சரியா?

ஈடுபாடு இல்லாமல் வேலை செய்யும் போது எப்படி உருப்பட முடியும். இதனைச் சற்றும் சிந்தித்து பார்க்காமல் நமக்கு நல்ல பயன் கிடைக்கவில்லையே என்று சோர்ந்து விடுவது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும்?

வேலை என்பது பிறரிடம் சென்று செய்வது மட்டுமல்ல. நமக்கு நாமே செய்து கொள்வதும் வேலைதான். நாமே புதுமையான முறையில் உருவாக்கிக் கொள்வதும் வேலைதான்.

திறமை, மூலதனம் இரண்டும் சேர்ந்தால் சொந்தமாகத் தொழில் தொடங்குவதற்கு உரிய அடிப்படை உருவாகி விடும்.

அதிலும் நாம் தொழில் துறையில் பயிற்சி பெற்றிருந்தால் இதைச் செய்வது சுலபமாக இருக்கும்.

ஏனென்றால் நமக்குத் தெரிந்த துறையிலே தொழிலை ஆரம்பித்து விடமுடியும். ஆரம்பத்தில் போராட்டம் இருந்தாலும் கடுமையாக வேலை செய்தால் சிறப்பான பலன் கிடைத்தே தீரும்.

வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டு மானால் நாம் நிச்சயமாக வேலையை செய்தே ஆக வேண்டும். கிடைத்த வேலையை ஒழுங்காகச் செய்கிறோமா என்று எண்ணிப்பார்ப்பது முன்னேற்றத்திற்கு வழிகாட்டும்.

அலட்சியம் எப்பொழுதும் இருக்கக் கூடாது. நம்முடைய வேலையைச் செய்வதற்கு நாட்டம் இல்லாமல் போனால் எப்படி வெற்றிப் பாதையில் நடைபோட முடியும்?

சும்மாவே உட்கார்ந்து கொண்டு இருப்பதனால் மட்டும் வெற்றி நம்மைத் தேடி வந்துவிடாது. நாம் அதனை நோக்கி நடந்தால் தான் அது நம்மை நோக்கி ஓடி வரும்.

நன்றி: மெர்வின்  – தன்னம்பிக்கை