- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

அகிலம் காணா அதிசய மனிதர்

நூற்றாண்டுகளில் சாதிக்க முடியாத அரும் பெரும் சாதனையை இருபத்து மூன்றே ஆண்டுகளில் சாதித்து உலகையே வியப்பிலாழ்த்திய அதிசய மனிதரை பற்றி அறிந்திருக்கிறீர்களா? இதோ வரலாறு காணாத அந்த மாமனிதரை தெறிந்துகொள்ளுங்கள்.

இவர் எழுத படிக்கத் தெரியாதவர். ஓர் ஏழை! அனாதை!! ஆதரவற்றவர்!!! உற்றார் உறவினரால் தூற்றப்பட்டவர்! துரத்தப்பட்டவர்!! கடைசியாக பிறந்தகத்தால் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டவர். ஆனால் எதிரிகளால் கூட நம்பிக்கையாளர் அல்-அமீன்-நேர்மையாளர், அஸ்-ஸாதிக்-உண்மையாளர் எனப்போற்றப்பட்டவர். உலகத்திலேயே தோன்றிய தீர்கதரிசிகள் மதபோதகர்கள் அனைவராலும், மகத்தான வெற்றி கண்டவர் என உலகே பெருமைபட்ட மாமனிதர். உலகம் இருன்டு கிடந்தது. மனித குலம் இருலிலே தத்தளித்தது. அழிவென்னும் அதல பாதாளத்தை நோக்கி அது வேகமாக சென்று கொண்டிருந்தது.

நீதி, நெறி, சுதந்திரம் அனைத்தம் எங்கோ மறைந்து விட்டன. மனித உரிமையும் கண்ணியமும், கட்டுப்பாடும் கொடுங்கோலர்களின் காலிலே மிதியுன்டன, பலவீனனை அடக்கியாண்டான் ஏழை பணக்காரனை வணங்கினான், சிறிய இனம் பெரிய இனதின் அடிமை.

தடிஎடுத்தவன் தம்பிரான்! சட்டம், ஒழுக்கம், குடும்ப வாழ்வு இவையனைத்தும் மறக்கப்பட்டுவிட்டன. பெண்ணினம் ஓடுக்கப்பட்டன. பிறக்கும் பெண் குழந்தைகள் உயிரோடு புதைக்கப்பட்டன. பங்கமா பாதகங்கள் தலைவிரித்தாடின. கொடுமைகளால் நசுக்குண்டு விழி பிதுங்கி போக்கிடமற்றுத் தடுமாறிய ஆயிரமாயிரம் மக்களின் ஓலங்கள் கேட்பதற்கு நாதியில்லை!

கி.பி. ஏழாம் நூற்றாண்டின் துவக்கத்தில் உலகமிருந்த இந்த பரிதாபகரமான நிலையிலேதான இறைதூதை ஏற்று ஹிரா மலைகுகையிலிருந்து வெளிவந்தார் அந்த அதிசய மனிதர். அவர் தான் முஹம்மது என்னும் இறைதூதர்! அவர்மனித குலத்துக்கு விடுத்த நற்செய்தி இதுதான்:-

இறைவன் ஒருவனே அவனை தவிர வேறு எவரையும் வணங்க கூடாது. மக்களனைவரும் சகோதரர்கள். நிறத்தாலம், மொழியாலும் ஏற்றத்தபழ்வு கிடையாது. அனைவரம் அந்த இறைவனுக்கே அடிபணி வேண்டும், அவனும் அவனத இறைதூதரும் காட்டிய வழியில் நடக்கவேண்டும்.

வரலாறு காணாத அளவில் அரபுநாடு முழுவதும் அணிதிரண்டு அவரை எதிர்த்தது. சரித்திரத்தில் எந்த மனிதரும் காணாத எதிர்ப்பையும் கொடுமைகளையும் பெருமானார்(ஸல்) எதிர் நோக்க வேண்டி வந்தது. இருபத்து மூன்றாண்டுகள் இடைவிடாத போராட்டம். கடைசியில் ஒரே சக்தியாக திரண்ட அரபுநாடு, அவர்களது சுட்டுவிரலிலே அசைந்தாடியது.

இந்த அற்புதம் எப்படி நிகழ்ந்தது? மிகப்பெரிய வல்லரசுகளால் பல்லாண்டுகளில் சாதிக்கமுடியாத ஓரு காரியத்தை அனதையும் ஏழையுமான ஓரு தன்னந்தனி மனிதரால் எப்படி சாதிக்க முடிந்தது? வரலாற்றாசிரியர் வில்லியம் மூர் சொல்லுகிறார்:-

சர்வசக்தியும் படைத்த இறைவன் தனக்கு துனையாக நிற்கிறான் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை அவருக்கு இல்லாதிருந்தால் இவ்வளவு பிரமாண்டமான சாதனைகளை அவர் சாதித்திருக்க முடியாது. இதுவே அவர் இறையருள் பெற்ற ஓர் இறைத்தூதர் என்பதற்கு சான்றாகும்.

இவ்வளவு பெரிய மாமனிதரை இறைதூதராகவும், வாழ்வின் வழிகாட்டியாகவும் கொண்ட முஸ்லீம்கள் அவரை ஓரு மகானாகக் கொண்டாடுகிறார்களே தவிர அவரை சரியாக புரிந்து கொள்ளவுமில்லை, அவர்களை பின்னற்றுவதுமில்லை. அவர்கள் தன்னை பற்றி சொல்லாதவற்றை கூறி அவர்களுக்கு அளிக்கக்கூடாத அந்தஸ்துகளை அளித்து, அவர்கள் தடுத்த தெய்வீகத் தன்மைகளை வழங்கி, அவர்கள் பெயரால் பொய்களைப் புனைந்து மாசுபடுத்தி வரும் இஸ்லாமியர்களின் அவல நிலைகளைக்கான இதயம் வெடித்துவிடும்போலுள்ளது.

மௌலிது:

புகழைப் பாடுகிறோம் எனக்கூறி அவாகள் மீது மௌலிது என்னும் பெயரால் குர்ஆன், ஹதீஸுக்கு முரணான பல சக்திகளை வாரி இறைத்து, பெருமானாரின் போதனைக்கெதிராக ஷிர்க்கான – பித்அத்தான – நச்சுக்கருத்துகளை திணித்து இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளுக்கு இல்லாத அந்தஸ்தை வழங்கி ஒரு வணக்கமாகவே கருதி புனிதவிழாவாகக் கொண்டாடிவருகின்றனர். அதற்கென விசேச பந்தல்! மலர் தோரணங்கள்! பன்னீர் சந்தன வரவேற்புகள்! புத்தாடை புனைந்து ஊரே வியக்கும் விருந்து வைபவங்கள்! இனிப்பு நேர்ச்சைகள்! சினிமாமெட்டுகளில் வகைவகையாய் இசைக்கப்படும் அப்பாடல்களை ஓளுவுடன் தலையில் தொப்பியணிந்து பக்திப் பரவசத்தோடு ஓதும் கண்கொள்ளாக் காட்சிகள் வியப்பூட்டுட்டும் ஒரு வினோத வழிபாடாகவே தெரியும்.

மீலாது விழா:

மீலாதுவிழா கொண்டாடுகிறேம் எனப் பறைசாற்றி மாற்று மதத்தலைவர்களை மேடைக்கழைத்து அவர்களையே துதி பாடி, பொன்னாடை போத்தி, மலர் மாலை அணிவித்து, காலில் விழுந்து வணங்கி கடைசியில் பெருமானாரின் பெருவாழ்வை மறந்து நடக்கும் விழாவாகத்தான் காணமுடிகிறது. அந்த விழாக்களின் மூலம் அவர்களின் ஸுன்னத்துகளில் ஒன்றையேனும் பின்னற்றப்படவோ, அவர்களின் வாழ்க்கை நெறிகளை கடைப்பிடிக்கப்படவோ செய்யப்படுவதில்லை பெருமானாருக்குப் பிறந்தநாள் கொண்டாடுவதே அவர்களுக்கு மாறுசெய்வதாகும். அவர்களின் பிறந்தநாள் விழா அவர்களின் காலத்திலோ, அவாகளை பின்பற்றிய நெறிவழுவா ஸஹாபாக்கள், அவர்களையடுத்த தாபியீன்கள், அவர்களுக்கும் பின்னர் வந்த எந்த முஸ்லிம் ஆட்சியாளர்களாலும், தலைவர்களாலும் கொண்டாடியதாக வரலாறில்லை. இது சென்ற நூற்றாண்டில் அரங்கேற்றப்பட்ட நவீனச் சடங்காகும்

வரையறை மீறிப்புகழ்தல்!
அவர்களை போற்றிப்புகழ்கிறோம் எனக்கூறி புராணங்களையே மிஞ்சிவிடும் அளவிற்கு எங்கோ சென்றுவிட்டார்கள் நமது முஸ்லிம் பக்தர்கள். இதோ நம் கவனத்திற்கு சில:-

1. நபி(ஸல்) ஒளியினால் படைக்கப்பட்டவர்கள். முதல் மனிதன் ஆதத்தை இறைவன் களிமண்ணால் படைத்தான் என்பதற்கு 32:7, 35:11 போன்ற ஏராளமான குர்ஆன் வசனங்கள் உள்ளன. இந்த வசனங்களை ஆராய்ந்தால் மனிதனின் துவக்கமே களிமண்தான் என தெளிவாகிறது. இவ்வாறிருக்க முதலில் அல்லாஹ் முஹம்மதின் ஒளியை படைத்தான். அதிலிருந்தே எல்லாப்படைப்புகளையும் படைத்தான் என்பது குர்ஆனுக்கு மாற்றமாகும். அவர்கள் ஒளியினால் படைக்கப்பட்டார்கள் என்பதற்கு குர்ஆனிலோ ஹதீஸிலோ ஆதாரமில்லை. முஸ்னது அப்துர் ரஸ்ஸாக் என்ற நூலில் குறிப்பிடப்பட்டதாக பரலேவி ஆலிம்கள் கூறுவது ஆதாரமற்ற பொய்யாகும்.
2. நபி(ஸல்) அவர்கள் இருட்டில் நடந்தால் ஒளி வீசும்
3. நபி(ஸல்) அவர்கள் பிறக்கும் போதே கத்னா செய்யப்பட்டே பிறந்தார்கள்.
4. நபி(ஸல்) அவர்கள் வெயிலில் நடந்தால் நிழல் விழாது.
5. நபி(ஸல்) அவர்கள் வாழ்க்கையில் ஒருபோதும் கொட்டாவி விட்டதே இல்லை.
6. நபி(ஸல்) அவர்களின் உடம்பில் ஒரு ஈ கூட உட்கார்ந்தது இல்லை.
7. நபி(ஸல்) அவர்கள் நடந்தால் அவர்களின் பாதம் தரையில் பட்டதில்லை.
8. நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொன்னால் கப்ரிலிருந்து பதில் வரும்.
9. நபி(ஸல்) அவர்களின் புகழ் பாடினால் அவர்கள் அங்கே ஆஜராவார்கள்.
10. நபி(ஸல்) அவர்களின் மலஜலம் சுத்தமானது. (அசுத்தம் – நஜீஸ் – அல்ல)
11. நபி(ஸல்) அவர்கள் பிறப்பு உறுப்பு வழியாக பிறக்கவில்லை.
12. நபி(ஸல்) அவர்களை கருவற்றபோது அவர்களின் தாயின் வயிறு பெருக்கவில்லை.
13. நபி(ஸல்) அவர்களின் தாய் யாருக்கும் தெரியாமல் இரகசியமாகப் பெற்றார்கள்.
14. நபி(ஸல்) அவர்கள் ஸுஜுது செய்தவாறே பிறந்தார்கள்
15. நபி(ஸல்) அவர்களிடமே நம் தேவைகளை (துஆ) கேட்பது.

இவ்வாறு வரம்பு மீறிப்புகழ்வதற்கோ, அபரிமிதமான அந்தஸ்த்தை கொடுத்துப் போற்றுவதற்கோ குர்ஆனிலோ ஹதீஸிலோ எவ்வித ஆதாரமுமில்லை

நபிகள் நாயகத்தின் வரலாறு அவர்கள் நபியாக வாழ்ந்த (40 முதல் 63 வரை) 23 ஆண்டுகள் தான் தெளிவாகப் பதியப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் தான் அவர்களை ஒரு இறை தூதர் என உலகம் உற்று நோக்கத் தொடங்கியது. அதற்கு முன் அவர்கள் ஒரு நபியாக வருவார்கள் என யாரும் கூர்ந்து கவனிக்கவோ வரலாற்றை பதிவுசெய்யவோ இல்லை. அவர்களின் வரலாற்றை பதிவு செய்தோர் யாவரும் அவர்களின் காலத்திற்க்குப் பல்லாண்டுகளுக்குப்பின் வாழ்ந்தோரேயாவர். எனவே நுபுவ்வத்திற்கு முந்தைய கால வரலாற்றை மிகவும் துல்லியமாக கொள்வதற்கில்லை. எனினும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் வாயிலாக பதிவு செய்யப்பட்டுள்ள செய்திகளையே நம்பத்தக்கவை-களாகக் கொள்ளவேண்டும்.

அடுத்து, நபி பெருமானார்(ஸல்) அவர்களின் வாழ்வில் நாம் பெறவேண்டிய பாடங்களும் படிப்பினைகளும் ஏராளம் உள்ளன. அவற்றை யாரும் ஊன்றிக்கவனிப்பதில்லை. மேலெழுந்தவாரியாகத் தெரிந்த கொண்டு அவர்களைப் புரிந்து கொண்டதாகவோ, பின்பற்றுவதாகவொ கூறுவதில் அர்த்தமில்லை. அது ஒரு உண்மை முஸ்லிமின் இலக்கணமுமல்ல.

இன்றைய உலக தலைவர்களை வைத்து ஒப்பிடும்போது தான் அவர்களின் அருமையும் பெருமையும் நமக்கு புரியவரும். அவர்களது வாழ்வின் எந்தபகுதியை புரட்டினாலும் எந்தவொரு மாசுவும் மறுவும் காண முடியாது.

புகழ்:

புகழின் உச்சியிலிருந்த போதும் பெயரிலேயே புகழுக்குறியவர் என சுட்டப்பட்டபோதும் அவர்கள் தமக்குச் சூட்டப்படும் எந்த புகழையும் விரும்பவில்லை. இத்தனைக்கும் அவர்கள் ஒரு நாட்டின் மாமன்னர். அரசியலிலும் ஆன்மீகத்திலும் மிகப்பெரிய அந்தஸ்த்தைப் பெற்றவர். பாரசீக பேரரசும் ரோமானிய வல்லரசும் அவர்களின் பெயரைகேட்ட மாத்திரத்திலேயே நடுநடுங்கியது. முஹம்மதின் படைகளை எதிர் நோக்க திராணியற்றோராய் தொடை நடுங்கிநின்றனர். ஏனெனில் அவாகள் கொல்வதற்கும், கொல்லப்படுவதற்கும் எப்பொதும் தயார் நிவையிலே இருந்தனர். உயிரைத் துச்சமாக மதித்தனர்.

இன்றைய அரசியல்வாதிகளின் கால்களில் விழுந்த வணங்கி வழிபட்டதைப்போன்றே அன்றைய மாமன்னர்களின் காலடியிலே தொழுதுவணங்கினர். எமன் நாட்டு தூதுவராகச்சென்று திரும்பிய முஆது இப்னு ஜபல்(ரலி) அவர்கள் தாம் பல நாட்டு மக்கள் மன்னர்களின் காலடியில் வணங்கி வழிபட்டதை கண்டதாகவும் அவர்களைவிட எத்தனையொ மடங்கு மேலான உங்களின் கால்களில் விழுந்த மரியாதை செய்வதை விரும்புவதாகவும் நபிகள் நாயகத்திடம் தெரிவித்த போது அவ்வாறு செய்ய வேண்டாம் என தடுத்துவிட்டு கூறினார்கள். ஒருமனிதன் இன்னொரு மனிதனுக்கு சுஜுது செய்யவே கூடாது. அப்படி ஒரு அனுமதி இருக்குமாயின் ஒரு மனைவி தன் கணவனுக்கு சுஜுது செய்ய வேண்டுமென பணிந்திருப்பென்.

கிறித்தவர்கள் மரியமுடைய மகனை (ஈஸா நபியை) அளவுக்கதிகமாகப் புகழ்ந்து மரியாதை செய்தது போல் எனக்கும் செய்ய வேண்டாம். நான் அல்லாஹ்வின் அடிமைதான். எனவே என்னை அவனின் அடிமை என்றும் அவனது தூதரென்றும் மட்டுமே அழையுங்கள் என்று கூறி காலில் விழும் கலாச்சாரத்திற்கு அன்றே சாவு மணி அடித்தார்கள். அதுமட்டுமல்லாது ஏதேனும் சபைகளிலே யாரேனும் எழுந்து நின்று மரியாதை செய்வதைகூட அவர்கள் விரும்புவதில்லை. அவ்வாறு செய்யக்கண்டால் வேண்டாம் என கடுமையாக எச்சரித்துமுள்ளார்கள்.

ஒருமுறை திருமணமொன்றில் கவிதைகளைப்பாடிக் கொண்டிருந்த சிறுமிகள் பெருமானார்(ஸல்) அவர்களைக் கண்டதும் “ஃபீனா நபிய்யுன் யஃலமு மாஃபீ கதின்” – நாளைய நிகழ்ச்சிகளை அறியும் இறைதூதர் எங்களிலே உள்ளார் எனப்புகழ்ந்து பாடத்தொடங்கியதும், நிறுத்துங்கள்! அவ்வாரு பாட வேண்டாம். முதலில் பாடிய அடிகளையே பாடுங்கள் எனக் கடித்து கொண்டார்கள். ஆண்டவன் அறிவித்தால் அன்றி தமக்கு எதுவும் தெரியாது எனவும் தெரிவித்தார்கள்.

தமது மகனார் இப்றாஹீம் மறைந்தபோத சூரிய கிரகணம் ஏற்பட்டது. அவர்களின் இறப்பிற்காகத்தான் கிரகணமே நிகழ்ந்தது எனப் பொய்யான புகழுரைகளை கற்பித்தபோது யாருடைய இறப்பிற்காகவும் இவ்வாறு நிகழ்வதில்லை என சோகத்தின் விழிம்பிற்குச் சென்ற போதும் பெருமானார்(ஸல்) மக்களை கண்டிக்கத்தவறவில்லை. மதவாதிகள் இது போன்றவற்றை தமக்கு சாதகமாக பயனபடுத்திவருவதை எங்கும் காண முடிகிறது. இவ்வாரு சிறு புகழைக்கூட விரும்பாத அதிசய மனிதர் அவர்.

பதவி:

உலகிலே ஆன்மிகத்திலும் அரசியலிலும் செல்வத்திலும் செல்வாக்கிலும் உயர்ந்து நினற போதும் தனக்கென பெருமையோ, வசதி வாய்ப்புகளையோ தனித்தன்மையையோ விரும்பாதவர். அவர் மாளிகையில் வாழவில்லை. மண்குடிசையில் வாழ்ந்தனர்.

இன்று ஆன்மீகத்திலும், அரசியலிலும், செல்வத்திலும் உயர் பதவி வகிப்போர் சிவப்பு விரிப்பில் வலம் வருவதையும் பூமாலைகள், பொன்னாடைகள் போர்த்தப்பட்டு முடிசூடா மன்னர்களைப் போல் பவனிவருவதையும், பதவி வகிக்கத் தொடங்கிய சில நாட்களிலேயே கோடிக்கு அதிபதியாகி தலைநிமிர்ந்து உலா வருவதையும் காண முடிகிறதென்றால் நாட்டின் உயர் பதவி வகிக்கும் மானில மத்திய அமைச்சர்களையும், பிரதமரையும் என்னென்பது? நாற்பதாவது வயது வரை கோடீசுவரராக வாழ்ந்துவிட்டு தன்னை நபி நபியாக அறிவித்தது முதல் நாட்டின் அதிபதியாக ஆட்சி நடத்தியதுவரை உலகிலெ யாருமே வாழ்ந்து விடாத அளவுக்கு ஏழையாக வாழ்ந்தார் அவர்களின் பேரும் செல்வம் இன்றைய அரசியல்வாதிகள் போல் பொது வாழ்வில் சம்பாதித்தவை அல்ல. கடின உழைப்பால் வாணிபத்தில் சம்பாதித்தவை. உயர்குலத்தில் பிறந்து வசதியான குடும்பத்தில் வாழ்ந்தும், அணிந்த ஆடையுடன் நாடுறந்தார். அத்தனையும் துறந்துவிட்டு அகதியாக மதீனா மதினா வந்து சேர்ந்தார்.

எளிமை:

பெருமானார்(ஸல்) அவாகள் மிகவும் எளிமையாக வாழ்ந்தார்கள். தம் ஆடைகளைத் தாமே துவைத்தார்கள். கிழிந்த ஆடைகளை தைத்தார்கள். வீட்டை பெருக்குவதை, காலனிகளைப் பழுதுபார்ப்பது, ஒட்டகத்திற்கு தீனி போடுவது, பால்கறப்பது, வீட்டு மராமத்து வேலைகளைப் பார்ப்பது, சமையலில் மனைவிமார்களுக்கு உதவுவது போன்ற அனைத்து வேலைகளையும் தாமே முன் வந்த செய்தார்கள்.

குபா பள்ளிவாசல், மஸ்ஜிதுந்நபவீ கட்டிடப்பணிகளில் தம் தோழர்களுடன் கல், மண் முதலியவற்றை தம் தோழ்களில் சுமந்து வந்தார்கள். அகழ்போரில் அகழும் வெட்டினார்கள். ஒருசமயம் காட்டில் தோழர்கள் சமையல் வேலைகளில் ஈடுபட்டபோது இவர்கள் தம் பங்கிற்காக விறகு சேகரித்து வந்தார்கள்

ஒரு சமயம் அடிமைப் பெண்ணொருத்திக்கு இயலாதபோது மாவரைத்துக் கொடுக்கவும், அடிமைக்கிழவர் ஒருவர் கைநடுங்க தண்ணீர் இறைப்பதைக் கண்டு அவருக்கு உதவிடவும் அவரது தோட்ட வேலைகளை செய்து கொடுக்கவும் செய்தார்கள். சிறுவன் ஒருவன் கழுத்தை முறிக்கும் பெரும் சுமையை தாங்காது துடித்தபோது அதை தம் தோளிலே சுமந்த அவனது இடம்வரை கொண்ட சென்று கொடுத்து உதவினார்கள். மக்களின் தலைவர் மக்களின் தொண்டர் என்பதை உலகுக்கு உணர்த்தினார்கள்.

அடக்கம்:

ஒருநாள் அவர்கள் முன் ஒருவர் அழைத்தவரப்பட்டார். அவர் தம்மை பார்த்து ஒதுங்குவதையும் நடுங்குவதையும் கண்ட நபி அவர்கள், அஞ்ச வேண்டியதில்லையென்றும் தாம் அரசர் அல்ல என்றும் தாம் காய்ந்த ரொட்டியை உண்ணும் ஒரு ஏழைப்பெண்ணின் மகன் என்றும் நானும் உங்களை போன்ற சாதாரண மனிதன் தாம் என்றும் கூறி அரவணைத்து நின்றார்கள்

வறுமை:

சகல வசதிகளைப் பெற்றும் வருமையின் உச்சியில் செம்மை கண்டார்கள். அவர்களுக்கு பசியும் பட்டினியும் பழக்கமானது தான். அல்லாஹ்வின் தூதராகி மன்னர் மன்னராய் மாறியபோதும் கூட ஒருநாளும் வயிறார உண்டது கிடையாது. சில வேலைகளில் அவர்கள் பசித்திருப்பதைப் பார்த்து நான் அழுதுவிடுவேன் என்கிறார்கள் அன்னை ஆயிஷா அவர்கள்.

ஒருநாள் அருமை மகளார் பாத்திமா(ரலி) அவர்கள் ஒரு ரொட்டி துண்டை தந்தையாரிடம் கொடுத்து நான் செய்த ஒரே ரொட்டியில் உங்களுக்கும் ஒரு துண்டு கொண்டு வந்தேன் என்று கூறினார்கள். அதனை உண்டு கொண்டெ அண்ணல் நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். “மூன்று நாட்களுக்குப் பிறகு உம் தந்தையின் வாய்க்குள் செல்லும் முதல் உணவு இதுதானம்மா” என்று.

நபியாகிய பின் தொடர்ந்து மூன்று நாட்கள் கோதுமை ரொட்டி உண்டது கிடையாது. ஒரு நாள் உண்டால் மறுநாள் பட்டினி. இப்படித்தான் அவர்களின் இறுதிவரை அமைந்திருந்தது. காலையில் உண்டால் மாலையில் சாப்பிடுவது கிடையாது. நோன்பு வைக்கும் போதுதான் ஏதாவது உணவு அருந்துவார்கள். நோன்பு திறக்கும்போது வெறும் தண்ணீர் மட்டுமே குடிப்பார்கள்.

பொழுது விடிந்ததும் அவர்கள் அருந்துவதற்கு ஏதாவது உணவு இருக்கிறதா? என்று கேட்பார்கள். உணவு ஒன்றும் இல்லை என்று கூறப்பட்டால் அப்படியே நோன்பு வைத்தக் கொண்டு விடுவார்கள்.

ஆயிஷா(ரலி) கூறினார்கள் நாற்பது நாட்கள் வரை எங்களது வீட்டில் அடுப்பு எரியாமலும் விளக்கு எரியாமலும் இருந்ததுண்டு என்று. அப்படியானால் என்னதான் சாப்பிட்டீர்கள? என்று கேட்டபோது பேரீத்தப்பழமும் தண்ணீரும் தான் என்று அவாகள் பதில் கூறினார்கள்.

பெருமானார்(ஸல்) அவர்கள் மரணித்த இரவு ஆயிஷா நாயகியின் வீட்டில் விளக்கில்லை. இருட்டாகவே இருந்தது. விளக்கெரிப்பதற்கு அங்கு எண்ணெயில்லை. மற்ற மனைவியரின் வீடுகளில் கேட்டனுப்பியபோதும் அங்கும் இல்லையென்றே பதில் வந்தது. காரணம் கேட்டபோது எண்ணெய் இருந்திருந்தால் அதை சமயலுக்கு பயன்படுத்தியிருப்போமே என்று பதில் சொன்னார்கள் அன்னையர் அனைவரும். மாமன்னரின் மரணத்தில் கூட விளக்கில்லையென்றால் எப்படிப்பட்ட வாழ்வு வாழ்ந்துள்ளார்கள்?

வீடு:

களி மண்ணாலும் பேரீத்த ஓலைகளாலும் வேயப்பட்ட சிறிய அறையே அவர்களின் வீடு. ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள். இரவு வேளையில் நான் ஜனாஸாவைப் போல குறுக்கே படுத்துக்கிடப்பேன். பெருமானார்(ஸல்) தொழுகையில் ஸஜ்தா செய்யும் போது கையினால் குத்துவார்கள். நான் காலை மடக்கிக் கொள்வேன். அவர்கள் ஸுஜுதுக்கு வரும் போதே நீங்கள் காலை மடக்கிக் கொள்ளலாமே எனக்கேட்டபோது, அவர்கள் சொன்னார்கள்:-

‘வல்புயூத்து யவ்மயிதின் லைஸ ஃபீஹா மிஸ்பாஹுன்’ அந்நாளில் வீடுகளில் விளக்குகளே இருந்ததில்லையே என்று.

வீட்டின் அளவே நான்கிற்கு இரண்டடி என்ற அளவில் தான் அமைந்திருக்கும் அவ்வளவு சிறியது!.

படுக்கை, தலையணை:

ஒரு பாயும் ஒரு தலையணையும் பேரீத்தம் பழ நாரினால் வேயப்பட்ட ஒரு கட்டிலும் தான் வீட்டுத் தளவாடங்கள். தலையணையோ பேரீத்தமர இலைதழைகளால் திணிக்கப்பட்டது. அவர்கள் கட்டிலில் உறங்கி எழுந்தால் சிவந்த மேனியில் கயிறுகளின் தடயங்களைக் காணலாம். ஒருமுறை உமர் ஃபாரூக்(ரலி) அவர்கள் பெருமானாரின் இல்லம் சென்றபோது அழுதுவிட்டார்கள். அதைபார்த்த பெருமானார்(ஸல்) அவர்கள் ஏன் அழுகிறீர்கள்? எனக்கேட்டபோது பெருமானாரின் பசுமேனியில் தடம்பதித்த பரும் கயிற்றுக் கட்டிலை சுட்டிக் காட்டி இதுவே என்றார்கள். நான் சிறிதுகாலம் மர நிழலில் ஓய்வெடுத்துச் செல்லும் பயணி எனக்கெதற்கு கொகுசான வாழ்வு என்றார்கள். மற்றொருமுறை இப்னு உமர்(ரலி) அவர்கள் தங்களுக்கு நாங்கள் மென்மையான படுக்கையோன்று தயார் செய்து கொண்டு வரட்டுமா? எனக்கெட்டபோது இந்த உலகத்திற்கும் எனக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? மறுமையை நோக்கிப் பயணம் செய்யும் பயணி என்றார்கள்.

ஆடை:

பெரும்பாலான நேரங்களில் தோள் புஜம் திறந்திருக்குமளவுக்கு அவர்கள் ஆடையணிந்திருந்தார்கள். ஒரே ஒரு போர்வை தான் அவர்களின் ஆடை. ஒரே ஒரு ஜுப்பா தான் அவர்களின் விசேச ஆடை. அது தான் ஜும்மாவுக்கும், பெருநாளைக்கும், வெளிநாட்டுக்காரர்களை வரவேற்பதற்கும் பயன் படுத்துவார்கள். ஸஜ்தா செய்யும் போது அவர்களின் அக்குள் தெரியுமளவுக்கு தொளதொளப்பானது.

பெரும்பாலும் நாயகத் தோழர்கள் ஒரே ஒரு ஆடையைத்தான் பயன் படுத்தியுள்ளார்கள். ஒரு நாயகத்தோழர் என்னிடம் ஒரே ஒரு ஆடைதான் உள்ளது அதை இடுப்பில் கட்டடிக்கொள்ளவா? தோளில் போட்டுக் கொள்ளவா? என வினவிய போது, பெரிதாக இருந்தால் தோளில் போட்டுக் கொள்ளுங்கள், சிறிதாக இருந்தால் இடுப்பில் கட்டிக்கொள்ளுங்கள் எனச்சொல்லிவிட்டு யாரிடம்தான் இரண்டு ஆடைகள் உள்ளன? எனக் கேட்டார்கள்.

உலகில் தோன்றிய அத்தனை தலைவர்களும் மாவாதிகளும் தங்களை பின்பற்றியவர்களை தொண்டர்கள், சீடர்கள் என அழைத்தார்கள். ஆனால் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மட்டுமே அவர்களை தோழர்கள் என அழைத்தார்கள். ஆண்டான், அடிமை என்ற பேதம் நம்மில் கிடையாது என முழங்கினார்கள்.

கடைசி நாட்கள்:

ஒவ்வொரு கொள்கைகளையும் தத்துவங்களையும் சொன்னவர் பெயராலே அவை அழிக்கப்பட்டன. அவர்களையே சமாதிகளாக்கி வழிபடத்தொடங்கினர். அவர்களுக்கு உருவப்படங்கள் சிலைகள் மலர் வளையங்கள் என எத்தனையோ வழிபாடுகள்.

உருவப்படங்களோ நாயோ இருக்கும் வீட்டில் அல்லாஹ்வின் அமரர்கள் வரமாட்டார்கள் எனக் கூறி தனக்கு படம்கூட வரையக்கூடாது என மிகுந்த எச்சரிக்கை செய்துள்ளார்கள். இறப்பதற்க்கு ஐந்து நாட்களுக்கு முன், இறைவா! எனது சமாதியை வணங்கி வழிபடக்கூடிய வணக்கஸ்தலமாக ஆக்கிவிடாதே என துஆ செய்தார்கள். பின்னர் தம்மை சுற்றியுள்ள மக்களிடம், என் சமாதியை வணக்கஸ்தலமாக ஆக்கிவிடாதீர்கள்! தங்களின் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணங்கி வழிபடும் இடங்களாக மாற்றிய யூத கிறித்தவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக! எனக்கூறி எச்சரித்தார்கள்.

அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள்:

கடைசி வேளையில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அவ்வாறு மட்டும் எச்சரிக்கை செய்யவில்லையெனில் அவர்களின் சமாதிக்கும் முந்தைய நபிமார்களின் கதியே ஏற்பட்டிருக்கும் என்று.

எந்த ஆன்மீகவாதியும் கூறாத இன்னொரு செய்தியையும் கூறி மறைந்தார்:
என் மீது ஸலவாத்துச் சொல்லுங்கள் என்று. அதாவது என்னிடம் கேட்காதீர்கள்! எனக்காக அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்! (அதாவது: அல்லாஹ்விடமே கேளுங்கள்).

ஸலவாத்து என்றால் நாம் செல்லுவது போல மந்திரமாகச் சொல்லதல்ல.
‘அல்லாஹும் ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்றாஹீம வஅலா ஆலி இப்றாஹீம இன்னக்க ஹமீதுன் மஜீது’ என்று ஸலவாத்து இப்றாஹீமையே நபிகள்(ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுக்கு கற்றுக் கொடுத்தார்கள்.

யா அல்லாஹ்! இப்றாஹீம்(அலை) அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்தது போல முஹம்மது(ஸல்) அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் அருள் புரிவாயாக. யா அல்லாஹ்! இப்றாஹீம்(அலை) அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ பரக்கத் செய்தது போல முஹம்மது(ஸல்) அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ பரக்கத் செய்வாயாக. என நபிகள்(ஸல்) அவர்கள் மீது அருள் புரியுமாறு அல்லாஹ்விடம் துஆ செய்வதாகும்.

உயிரோடிருக்கும்போது நான் உங்களுக்காக பிராத்தனை புரிந்தேன். நான் இறந்த பிறகு நீங்கள் எனக்காக துஆ செய்யுங்கள் என்பதே பொருளாகும். ஸலவாத்தின் மாண்பினைப் புரியாது ஸலவாத்துல் முன்ஜியா, ஸலவாத்துல் ஹிஜ்ரியா, ஸலவாத்துந் நூரித் தாத்திய்யி, ஸலவாத்துல் ஹஸாரி தாஜுஸ் ஸலவாத், ஸலவாத்துந் நூரானிய்யா, ஸலவாத்துந்நாரியா போன்ற பல்வேறு புதுமையான ஸலவாத்துக்களை புனைந்து, நாடியது நடக்கவும், துன்பம் துயரம் போக்கவும் செல்வவளம் பெருகவும் பெருமானாரைக் களவில் காணவும், விழிப்பு நிலையில் காணவும் இறைவனைத் தரிசிக்கவும் நாள் தோறும் 500 முதல் 4444 வரை ஓதிவரவும், எனக்கூறி அதற்காக மத்ரஸா மாணவர்களை கூலிக்கமர்த்தி, விருந்து படைத்து வியாபாராக்கியுள்ள அவல நிலைகளையும் இன்று நாம் காண முடிகிறது.

பெருமானார்(ஸல்) அவாகளின் பெருவாழ்வைப் பின்பற்றாது அவர்கள் காட்டிய சீரிய வாழ்வு நெறிகளின்படி வாழாது, அவர்களின் சொல், செயல், அங்கீகாரமில்லாது பெரியார், நாதாக்கள் வழி வாழ்வோம் என வாழும் எந்த வாழ்வும் நபி(ஸல்) காட்டிய தூய இஸ்லாமிய வாழ்வாகாது என நமது முஸ்லிம்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

புறச்சடங்குகளால் பெருமானார்(ஸல்) அவர்களின் அன்பை பெற முடியுமா?
ஆண்டுக்கொரு முறை மௌலிது ஓதிவிடுவதாலோ, மீலாது விழா நடத்திவிடுவதாலோ, வாழ்க்கையில் கடைபிடிக்காது வாய்கிழியப்பேசி பெருமானார்(ஸல்) அவர்களின் உம்மத்தார் என பறை சாற்றுவதாலோ, சம்பிரதாயமாகவோ, சடங்குகளாகவோ சில காரியங்களை ஆற்றிவிடுவதாலோ, அவர்களின் அடக்கவிடத்திலுள்ள மண், கற்களை சேகரித்துப் பாதுகாப்பதாலோ, அவர்களின் பெயரைச் சொன்னதும் இரு கைகளையும் முத்தி கண்களிலே ஒற்றிக் கொள்வதாலோ நாம் அவர்களின் மீது அன்பு காட்டியவர்களாக ஆக முடியாது.

நாம் நபி(ஸல்) அவர்களை எவ்வாறு நேசிப்பது?

வல்லான் அல்லாஹ் வான்மறை மூலம் மிகத்தெளிவாகக் கூறுகிறான்:-
(நபியே! நீர் மக்களிடம்) கூறுவீராக! நீங்கள்(உங்களைப் படைத்த) அல்லாஹ்வை நேசிப்பதாக இருந்தால் என்னை (முழுமையாகப்) பின்பற்றுங்கள். (அப்பொது தான்) உங்களை அல்லாஹ் நேசிப்பான். (3:31).

அவர்களை உயிரினும் மேலாக மதித்து, இதயபூர்வமாய் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் வழுவாது பின்பற்றுவதில் தான் உண்மை முஸ்லிமாக, சரியான உம்மத்தாக நாம் ஆக முடியும் அவர்களை உண்மையாக நேசித்தவர்களாவோம். எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் ஹிதாயத் – நேர் வழி – பெற்ற நன்மக்களாகவும், பெருமானார்(ஸல்) அவர்கள் காட்டிய பெரு நெறியில் இறுதி மூச்சுவரை தூய வாழ்வு வாழும் பெருமக்களாகவும் ஆக்கி அருள்வானாக. ஆமீன்.