- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

ஆழ்வார் தாத்தாவின் கல்விப்பணி.

alwar-03 [1]சென்னை மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் இறங்கி யாரிடம் கேட்டாலும் ஆழ்வார் பழைய புத்தககடையை கேட்டால் வழி சொல்லி விடுவார்கள். கடந்த கால் நூற்றாண்டு காலமாக ஒரு புத்தகவங்கி செய்ய வேண்டிய பணியை சப்தமின்றி தனி மனிதராக தமது தள்ளாத 78 வயதிலும் செய்து வருகின்றார் ஆழ்வார் தாத்தா. எனவே மயிலாப்பூரின் அடையாளங்களில் ஒருவராக அவர் மாறிப்போனதில் ஆச்சர்யமில்லை.

நான் அவரை சந்திக்கச் சென்ற போது லேசான மழை தூறல் தூரிக்¢ கொண்டிருந்தது. மழை தூறலில் புத்தகங்களை நனைந்து விடாமல் காக்க பிளாஸ்டிக் உரைகளால் புத்தகங்களை மூடிக் கொண்டிருந்தார் ஆழ்வாரின் துணைவியார் மேரி. புத்தகக் குவியலுக்கு நடுவே ஒரு நாற்காலியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் ஆழ்வார் தாத்தா.

தோலில் வெள்ளை நிற கோர்ட்டும், டேதஸ் கோப்புமாக புத்தங்களை வாங்க வந்த மருத்துவக் கல்லூரி மாணவர் சேவியர் “மருத்துவ புத்தகங்கள் குறைந்தது ரூ.1,000க்கு குறையாமல் கிடைப்பதில்லை. பொருளாதாரத்தில் பின் தங்கிய என்னைப் போன்ற மாணவர்களால் இவற்றை விலை கொடுத்து வாங்குவது என்பது முடியாத ஒன்று. நான் கடந்த மூன்று வருடங்களாக தாத்தாவிடம் தான் புத்தகங்களை மலிவான விலைக்கு வாங்கி வருகின்றேன்’’ என்றார்.

பத்து வருடங்களாக நான் ஆழ்வார் தாத்தாவிடம் புத்தகங்களை வாங்குகின்றேன் என்று பேசிய பள்ளி ஆசிரியர் முத்துக்குமார் “ஐஏஎஸ் படிப்பவர்களில் இருந்து ஐடிஐ பயிலும் மாணவர்கள் வரையிலும் தங்களின் கல்விக்காக அனைத்து புத்தகங்களையும் விலை கொடுத்து வாங்குவது என்பது இயலாத ஒன்று. இந்த மாணவர்களுக்கு எல்லாம் பழைய புத்தகங்களை தேடி அவற்றை குறைந்து விலைக்கு விற்று ஆழ்வார் தாத்தா ஆற்றி வரும் கல்விப்பணி மகத்தானது. ஆனால் யாரும் அவரை கண்டு கொள்ளாதது. மிகவும் அநியாயமானது’’ என்றார்.

தாத்தாவிற்கு உடல்நலம் சரியில்லாததால் அன்னாரின் மனைவி மேரி என்னிடம் பேசினார் “எங்களுக்கு திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள். மூன்று பெண் குழந்தைகளையும் இந்த புத்தக்கடையை நடத்தி தான் கரையேற்றினோம். முன்னமாதிரி இவரால் நடமாட முடியவில்லை. ஒரு வருடமாக ஆஸ்பத்திரி வீடு என்று அழைத்த வண்ணம் உள்ளோம். இதனால் கடையை நானும் எங்க புள்ளைகளும் தான் பார்த்து கொள்கின்றோம். போலீஸ்காரங்கள் தான் அடிக்கடி கடை நடைபாதையில் இருப்பதாகச் சொல்லி அடிக்கடி இடத்தை மாற்றக் கோருகின்றார்கள். மழைக்காலங்களில் புத்தகங்களை பாதுபாப்பதும் மிகச் சிரமமாக இருக்கின்றது’’ என்றவர் மேலும் எனது கணவரிடம் புத்தகங்களை வாங்கி இன்று எத்தனையோ பேர்கள் பெரிய பெரிய பதவிகளில் இருக்கின்றார்கள். அவர்களிடம் ஐயா இந்தப் புத்தகங்களை எல்லாம் பாதுகாக்க ஒரு கொட்டகை மட்டும் போடுவதற்கு அனுமதி பெற்றுத் தாங்கள். பெரிய புண்ணியமாகப் போகும் என்று, கண்ணீருடன் தங்கள் கதையை பகிர்ந்து கொண்டார்.

நான் ஆழ்வார் தாத்தாவை அணுகி தங்களை புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டேன். உடனே தalwar-01 [2]மது மனைவியை அருகில் அழைத்து ஒரு புத்தகத்தை எடுத்து வரச் சொன்னார். அந்த புத்தகம் என்ன தெரியுமா? நமது முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களின் சுயசரிதமான அக்னி சிறகுகள். இந்த புத்தகத்தோடு சேர்த்து என்னை புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். மாணவர்களையும், இளைஞர்ளுக்கும் இன்று கலங்கரை விளக்கமாக கனவு நாயகனாகவும் திகழும் அப்துல் கலாமின் சாதனைகளை ஒப்பிடும் போது, டாக்டர், இன்ஜினியர், கலெக்டர் என பலரது கனவுகளை நிறைவேற்றிருக்கும் ஆழ்வார் தாத்தாவின் சாதனையும் கிஞ்சிற்றும் குறையாதது. மேரி பாட்டி கூறியது போன்று புத்தகங்களை வைக்க ஒரு கொட்டகை வைக்க அரசாங்கத்திடம் கையேந்த தேவையில்லை. ஆழ்வார் தாத்தாவிடம் புத்தகங்களை வாங்கிய என்னைப் போன்றோர்கள் உதவினாலேப் போதும், இன்னும் பல கலாம்கள் கூட உருவாகுவார்கள்.

நன்றி: ராமேஷ்வரம் ரஃபி