- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

நரேந்திர மோடி – பிரதம வேட்பாளர்?

பாஜக என்று ஒரு கட்சி, இதுவரை ஒருமுறை கூட தேர்தல்களில் அருதிப் பெரும்பான்மை பெற்றதில்லை, மற்ற கட்சிகளை நம்பியே ஆட்சி அமைக்கக்கூடிய அவலம், இது காங்கிரஸுக்கும் பொருந்தும் என்றாலும் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தவுடன் ஏதோ அவர் இப்போதே பிரதமர் ஆகிவிட்டது போன்ற ஒரு கருத்துருவாக்கத்தை ஊடகங்கள் கட்டமைக்கின்றன.

கருத்துருவாக்க அரசியல் பற்றி அமெரிக்க மொழியியலாளரும் தீவிர சிந்தனையுடையவருமான நோம் சாம்ஸ்கி ‘மேனுபேக்சரிங் கன்சென்ட்’ என்று ஒரு புத்தகமே எழுதியுள்ளார். அதாவது பரப்புரை அல்லது பிரச்சாரம் என்பது வெறும் ஒரு விஷயத்தை பற்றிய செய்தி மட்டுமல்ல. அது ஒரு கருத்தை தயாரித்து வினியோகித்து எதிர்காலத்தில் இதுவே நடைபெறவேன்டும் என்று மக்களின் கருத்தோட்டத்தையே முன் கூட்டியே கட்டமைக்கும் அரசியல் செயல்பாடாகும்.

இந்தியா ஒரு (போலி) ஜனநாயக நாடு. குறைந்தது தேர்தல்கள் நடைபெற்று வருகிறதுஅவ்வளவே!! முறையாக என்று கூற முடியாது. மோடி முதலில் தேர்தலில் நின்று மக்கள் வாக்கெடுப்பில் வெற்றி பெற்று அதன் பிறகே அவர் பிரதமராக முடியும். இதுதான் மக்களாட்சியின் புரோசஸ். ஆனால் பிரதமர் வேட்பாளராக, அதுவும் ஒரு கட்சியின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டவுடன் அவர் பிரதமர் ஆனது போல் ஊடகங்கள் சித்தரிப்பதும் அவரது முன்னேற்றம், வாழ்க்கையில் அவர் கடந்து வந்த பாதை என்றெல்லாம் பிம்பக் கட்டுமானம் (இமேஜ் ஸ்பின்னிங்) செய்வது ஜனநாயகத்திற்கு விரோதமானதே.

பாஜக-வின் மூத்த தலைவர் அத்வானியின் அதிருப்தியையும் மீறி இந்துத்த்வா ஆர்.எஸ்.எஸ்.-இன் வெளிப்படையான நெருக்கடி காரணமாக மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காரணம் மோடியின் சிறுவயது முதலான ஆர்.எஸ்.எஸ். சேவை!!

17, செப்டெம்பர் 1950ஆம் ஆண்டு பிறந்த நரேந்திர மோடி, ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர். தனது சகோதரனுடன் தேநீர் ஸ்டால் வைத்திருந்தவர் மோடி. அப்போது முதலே இந்துத்துவாவிற்காக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்.

அதன் பிறகு 2001ஆம் ஆண்டு குஜராத் முதல்வராகும் வரை வளர்ந்து தொடர்ந்து முதல்வாராகவே நீடித்து தற்போது பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவையெல்லாம் ஒரு கட்சியில் ஒரு தனி நபர் வளர்ச்சியடைந்த விதம். இதனாலெல்லாம் அவர் வந்தால் நாடு சுபிட்சமாகிவிடும், ஊழல் ஒழிந்து விடும் என்று நடுத்தர வர்க்க மனசுகள் கனவு காண்கிறதே எப்படி? காரணம் ஊடகங்கள், குஜராத்தில் அதைச் செய்தார், இதைச் செய்தார் என்றெல்லாம் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக இந்தியா முழுதும் பிம்பக் கட்டுமான பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

முழுப் பெரும்பான்மையுடன் ஒரு மாநிலத்தில் சில விஷயங்களை மேற்கொள்வதற்கும் இந்திய அளவில் அதுவும் அருதிப்பெரும்பான்மை பெற முடியாது மற்ற கட்சிகளின் தயவை நாடியிருக்கும் நிலையில் பிரதமராக திறமையாக செயல்படுவதற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உள்ளது.

மோடி குறித்த இதுபோனற மாயைக் கட்டமைப்பிற்கு காங்கிரஸும் தன் பங்கிற்கு பங்களிப்பு செய்துள்ளது. அவர் எது கூறினாலும் கடுமையாக அவர் மீது தாக்குதல் தொடுத்து அவர் எப்பவும் செய்திகளில் இடம்பெறுமாறு பார்த்துக் கொண்டது காங்கிரஸ்.

மேலும் மன்மோகன் சிங்கே பிரதமராக இருக்கும்போது நாம் ஏன் இருக்கக்கூடாது என்று அனைவருக்குமே ஆசை ஏற்படுகிறது. நிச்சயம் அதுபோன்று போஸ்டர் அடித்துக் கொள்ளும் பிற பிராந்திய தலைவர்களைக் காட்டிலும் மோடி தகுதியானவர்தான் என்பதில் ஐயமில்லை.

ஆனாலும் மோடி வந்தால் இது நடந்து விடும் அது நடந்து விடும், ஊழலை ஒழிப்பார் என்பது போன்ற சமூக கற்பனை வெளி அவரது ஆட்சி பற்றிய ஒரு முன் கூட்டிய கற்பனைக்கு மக்களின் மனதை தயார்படுத்தியுள்ளது. இதுதான் அபாயகரமான விஷயமாகும். ஏனெனில் நாளை அவர் பிரதமராகி அவரால் ஒன்றுமே செய்ய முடியாமல் போனாலும் அவர் ஏதோ பெரிதாக சாதித்து விட்டது போல் நாமே பேசத் தொடங்கிவிடுவோம். அல்லது மோடி பிரதமராகிவிட்டால் ஊடகங்கள் அதனை தங்களது வெற்றியாக கொண்டாடும் சூழலில் அவர் எது செய்தாலும் ஏதோ சாதனையே என்று மேலும் ஊதிப்பெருக்கம் செய்யும் அபாயமும் உள்ளது.

மோடி பற்றி குஜராத் முஸ்லிம்களுக்கு ஒன்றும் வெறுப்பு இல்லை. அவர் முஸ்லிம்களின் நண்பர் என்று கூறப்பட்டு வருகிறது. அப்படிக் கூறுபவர்கள் யார் என்றால் ஜில்லா பரிஷத், முனிசிபல் கார்ப்பரேஷன், கிராமப் பஞ்சாயத்து ஆகிய உள்ளாட்சி தேர்தல்களில் பாஜகவிடம் டிக்கெட் பெற்ற முஸ்லிம்களே.

முஸ்லிம்களில் சிலர், தாழ்த்தப்பட்ட முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர்கள் உட்பட பாஜகவில் சில பல சீப் பதவிகளை பெற்றுவிட்டதால் முஸ்லிம் பெருமக்களுக்கு அவர் நல்லது செய்துவிட்டாதாகாது.

நம் நாட்டில் எந்த சாதியை சேர்ந்தவர் அரசியல் பதவி பெற்றாலும் பதவி கிடைத்தவுடன் சமூகப் பொறுப்பின்றி மகாராஜாக்கள் போல் வாழ்பவர்கள்தான்! அந்த வகையில் குஜராத் பாஜகவில் வெற்றி பெற்ற முஸ்லிம்களால் முஸ்லிம்களுக்கே ஏதாவது நன்மை ஏற்பட்டிருக்கிறதா என்பது ஆய்வுக்குறிய விஷயம்.

பொருளாதார விஷயங்களில் தன்னை அவரே அல்லது பிறரோ ‘வளர்ச்சிக் கொள்கையுடயவர் ோடி’ என்று கூறி வருகின்றனர்

தனிநபர் வருமானத்தில் குஜராத் மாநிலம் 11-வது இடத்திலேயே உள்ளது. ஹரியானா, மகாராஷ்ட்ரா மாநிலங்களே இதில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.GDSP வளர்ச்சியில் தமிழகத்துடன் குஜராட் 9வது இடத்தில் உள்ளது. மாநிலங்கள் அளவில் வளர்ச்சி என்று பார்த்தால் காங்கிரஸ் கட்சி ஆளும் ஹரியானா, ராஜஸ்தான், கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு பின்னால்தான் உள்ளது மோடியின் குஜராத்.

சரி மற்ற மாநிலங்களை விடுவோம், குஜராத் முதல்வர்களில் மோடிக்கு முந்தைய காங்கிரஸ் முதல்வர் காலக்கட்டங்களை ஒப்பிட்டுப்பார்ப்போம்:

1990- 94 ஆம் ஆண்டு வரை ஆண்ட காங்கிரஸ் முதல்வர் சிமன் பாய் படேல் காலக்கட்டத்தில் குஜராஜ் 16.75% வளர்ச்சியடைந்துள்ளது. மாறாக மோடியின் குஜராத் வளர்ச்சி 6.1 % என்பது குறிப்பிடத்தக்கது. (கடந்த 9 ஆண்டுகளில் சராசரி வளர்ச்சி இது). அதுவும் மத்தியில் புதிய பொருளாதார கொள்கையினால் ஏற்பட்ட வளர்ச்சி! (இங்கு நாம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும், மத்தியில் கொண்டு வந்த பொருளாதாரக் கொள்கை உண்மையில் முன்னேற்றத்தை சாதித்துள்ளதா என்பதே அந்த எச்சரிக்கை).

சிமன் பாய் படேல் முதல்வராக ஆவதற்கு முன்பாக 1980- 81 – 90 வரை ஆண்ட காங்கிரஸ் முதல்வர்கள் காலக்கட்டத்தில் குஜராத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 14.8%.! இந்த வளர்ச்சி புதிய பொருளாதார தராளமய கொள்கைகள் வருவதற்கு முன்பு என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

மோடியின் ஆட்சிக் காலத்தில் கடன் அதிகரித்துள்ளது. 2001ஆம் ஆண்டு 42,780 கோடியாக இருந்த கடன் 2013ஆம் ஆண்டு 1,76,490 கோடியாக அதிகரித்துள்ளது.

தனி நபர் கடன் சுமை குஜராத்தில் மற்ற மாநிலங்களை விட அதிகம். இது மேலும் அடுத்த 3 ஆண்டுகளில் 46% அதிகரிக்கும் என்றே பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

என்ன வளர்ச்சி கண்டுள்ளது குஜராஜ்? துக்ளக் சோ போன்றவர்கள் இன்னும் விரிவாக ஆழமாக சிந்திக்கவேண்டும்.

மேலும் அவரது ஆட்சியில் நீதி தேவதை நடனமாடுகிறாள் என்று அவரது ஆட்சிக்கு ஒரு அறவியல் அந்தஸ்துகொடுக்கப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது. 2002 குஜராத் மதக் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை சமீப நேர்காணலில் கூட ‘குத்தே கா பச்சா’ (நாய்களுக்கு பிறந்தவர்கள்) என்று வர்ணித்துள்ளார்.

அனைவருக்கும் நீதி – அவரது ஆட்சியின் ஸ்லோகனாம்! குஜராத் கலவர வழக்குகள் அந்த மாநிலத்த்லிருந்து மாற்றப்பட்டது ஏன்? நீதி தேவதையை தடுத்ததினால்தானே? 10 ஆண்டுகள் ஆகியும் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இன்னும் அகதி முகாம்களில் வசித்து வரும் மர்மம் என்ன?

மேலும் அந்த வழக்கில் மோடிக்கு கிளீன் சிட் கிடைத்து விட்டது என்ற பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. ஆனால் அதுபோன்ற கிளீன் சிட்கள் வழங்கப்படவில்லை. நவீன நீரோ என்றே மோடி வர்ணைக்கப்பட்டார்.

போலி என்கவுண்டர்களுக்கு பேர் போன் மாநிலமாக ஆகியுள்ளது குஜராத். இந்தியாவிலேயே அதிக அளவில் ஐபிஎஸ். ஆபீசர்கள் ஜெயிலில் இருப்பது அந்த மானிலத்தில்தான்!

சும்மா இன்டெர்னெட்டிலும், சமூக வலைத்தளங்களிலும் மோடி பிரபலமானவராக இருக்கிறார். இது வாக்குகளாக மாறும் அவ்வளவே. இதற்கும் வாக்களிக்கும் மக்களுக்கான மனோ நிலைக்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம் உள்ளது.

இன்னும் கொஞ்ச நாளில் குஜராத்தில் பிறந்த, வன்முறைக்கு குழி தோண்டிய மகா மனிதர், மகாத்மா காந்தியை நாம் மறந்தே போய்விடுவோம் என்றே தோன்றுகிறது.

குஜராத் கவிஞர் ஒருவர் சமீபத்தில் எழுதிய கவிதையில், “வீடுகளின் கூரைகளும் இந்து முஸ்லிம்களாக பிளவுண்டு கிடப்பது கண்டு மேலே பறக்கும் காற்றாடிகளும் அதிர்ச்சியடைந்தன” என்றார்.

இதுதான் உண்மை நிலவரம், இதுதான் மோடியின் குஜராத்! எனவே மத்தியதர வர்க்க, மேட்டுக்குடி பார்ப்பணர்களும், அவாள் வாசிக்கும் ஊடகங்களும் மோடியை ஒரு மிகப்பெரும் பிம்பமாகக் கட்டமைப்பது கண்டு மக்கள் ஏமாறக்கூடாது.

நடப்பு ஆட்சியின் கொடூரங்கள் மீது மக்களுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்பது உண்மைதான் அதனை பயன்படுத்திக்கொண்டு வாக்குகளாக மாற்றும் முயற்சியில் பாஜக் இறங்கியுள்ளது. அதில் ஒரு உத்திதான் நரேந்திர மோடி என்ற பெயரே தவிர இதனானெல்லாம் ஏதோ நாடு சுபிட்சமாகிவிடும் என்று நம்புவதைப் போன்ற அசட்டுத் தனம் வேறு எதுவும் இல்லை.

சில பொருளாதார நிலைமகளை ாற்ற எந்த மோடி வந்தாலும் ஒன்றும் செய்யமுடியாது என்பதே இன்றைய நிலவரம்