- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

ரகுராம் ராஜன் ‘எபெக்ட்’.. ரூபாயின் மதிப்பு கூடியது!

ரகுராம் ராஜன் ‘எபெக்ட்’.. ரூபாய் மதிப்பு 65.54 ஆக உயர்ந்தது!: பங்குச் சந்தைகளிலும் உற்சாகம்!!
ரிசர்வ் வங்கி கவர்னராக ரகுராம் ராஜன் நேற்று பதவிக்கு வந்தவுடன் அவர் எடுத்த சில முடிவுகளும், அவர் மீதான நம்பிக்கை காரணமாகவும் இன்று பங்குச் சந்தைகளில் புதிய உத்வேகம் ஏற்பட்டது.

05-raghuram-rajan111-600-jpg [1]

இதைத் தொடர்ந்து டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் 65.54 என்ற நிலைக்கு குறைந்தது. நேற்று முன்தினம் 68 ரூபாயாக சரிந்த ரூபாயின் மதிப்பு 65.54 என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது பெரும் மகிழ்ச்சியை பரப்பியுள்ளது.

தமிழரான ராஜன் டெல்லி ஐஐடி, அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம் ஆகிய இடங்களில் படித்துவிட்டு அமெரிக்காவில் உள்ள மசாசுசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பிஹெச்டி பட்டம் பெற்றவர். சர்வதேச நிதியத்தின் ஆலோசகராக இருந்த இவரை கடந்த ஆண்டு அவரை தனது ஆலோசகராக நியமித்தார் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

முன்னதாக பணவீக்கத்தை கட்டுப்படுத்த அவர் அளித்த பரிந்துரைகளை மத்திய ரிசர்வ் வங்கி ஏற்று அமல்படுத்தியது. இதனால் பணவீக்கம் கட்டுக்குள் வந்தது. இந் நிலையில் ‘ஓவர் பேச்சு’ சுப்பா ராவை தூக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி ஆளுநராக்கப்பட்டுள்ளார்.

பதவியை ஏற்றவுடன் சில முக்கிய அறிவிப்புகளை ராஜன் வெளியிட்டார். நிதியமைச்சகம் ஒரு பக்கம் போனால் அதன் எதிர்திசையில் ரிசர்வ் வங்கியை இயக்குவது சுப்பா ராவின் இயல்பு. மேலும் மத்திய அரசுடன் ஆலோசிக்காமலேயே திடீர் திடீரென வட்டி விகிதங்களை மாற்றுவார் ராவ். அவர் எந்த நேரத்தில் எதைச் செய்வார் என்று தெரியாது. இந் நிலையில் நிதியமைச்சகத்தில் இருந்தே வந்துள்ள ரகுராம், அந்த தடாலடி வேலைகளை உடனடியாக நிறுத்துவார் என்று தெரிகிறது.

பதவியேற்றவுடன் ரகுராம் ராஜன் கூறுகையில், பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது முக்கியம் தான். அதற்காக நாட்டின் வளர்ச்சியையே அது முடக்கிவிடக் கூடாது. (இதை தான் சுப்பா ராவ் செய்தார்). இதனால் இதில் மாறுபட்ட அணுகுமுறை தேவை. என்னைப் பொறுத்தவரை நாட்டின் வளர்ச்சி, பணவீக்கத்தை கட்டுக்குள் வைப்பது, ரூபாய் மதிப்பை உயர்த்துதல் ஆகியவையே உடனடியான பணிகள். இதற்காக நான் எடுக்கும் சில நடவடிக்கைகள் கடுமையானதாக இருக்காலம். ஆனால், பேஸ்புக்கில் எத்தனை பேர் எனது செயல்களை ஆதரித்து ‘லைக்’ செய்கின்றனர், எதிர்க்கின்றனர் என்றெல்லாம் கவலைப்பட முடியாது.

நமது உடனடி தேவை அதிகமான வெளிநாட்டு முதலீடுகள். முதலீட்டாளர்கள் விரும்பும் வகையில் சில நடவடிக்கைகள் எடுக்கப்படும். பணவீக்கம் ஏற்பட்டாலும் முதலீட்டுக்கு உரிய லாபம் கிடைக்கும் வகையில் பார்த்துக் கொள்ளப்படும்.

* பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில், வங்கிகளுக்கு வழங்கப்படும் நிதியின் வட்டியை குறைத்தல். இந்திய வங்கிகள், வெளிநாடுகளில் நிதியை திரட்டுவதில் இருக்கும் தடைகளை நீக்குதல்.

* கிராமப் பகுதிகளில் அதிகமான வங்கிகளை துவக்கும் நோக்கில், புதிய வங்கிகளுக்கு எளிதாக அங்கீகாரம் வழங்க நடவடிக்கை.

* இந்திய நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களை வாங்கவும், முதலீடு செய்யவும் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துதல். வெளிநாட்டு இந்தியர்களின் முதலீட்டை, இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை.

* உடனடி தேவையாக வெளிநாட்டு முதலீடுகளை அதிகரித்தல். இதனால், பணவீக்கம் சிறிதளவு ஏற்பட்டாலும், முதலீட்டுக்கு உரிய லாபம் கிடைக்கும். சந்தையில் பணப் புழக்கம் அதிகரிக்கும்.

* வங்கியின் வராக்கடன்களை வசூலிக்க, புதிய குழு அமைத்து, அதன் பரிந்துரைகளை அமலுக்கு கொண்டு வருதல்.

* ரூபாயின் மதிப்பை உயர்த்துதல், பணவீக்கத்தை கட்டுக்குள் வைக்க தேவையான கடுமையான நடவடிக்கைகளை உடனே எடுத்தல்.

* டாலரை நம்பி இருக்காமல், ரூபாயை அடிப்படையாக வைத்து, வர்த்தகம் நடத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்தல். “”இந்நடவடிக்கைகளை, முடிந்தளவு சில வாரங்களிலேயே நடைமுறைக்கு கொண்டு வர, முயற்சி மேற்கொள்ளப்படும்,” என, ரகுராம்ராஜன் தெரிவித்துள்ளார். என்ன நடக்கிறது? என, பொறுத்திருந்து பார்ப்போம்

ராஜனின் இந்த நடவடிக்கைகள் முதலீட்டாளர்கள் மத்தியில் இன்று பெரும் வரவேற்பைப் பெற்றன. இதன் காரணமாக பங்குச் சந்தைகளில் உற்சாகம் பரவி சென்செக்ஸ் 550 புள்ளிகள் அளவுக்குப் பரவியது. ரூபாயின் மதிப்பும் உயர்ந்து 65.54 என்ற நிலையை அடைந்தது. வெல்டன் ராஜன்! ஆனால், பங்குச் சந்தை யூக வியாபாரிகளின் இந்த நம்பிக்கை ஒரு நாள் கூத்தா.. அல்லது இந்த உற்சாகம் தொடருமா என்பது அடுத்த சில தினங்களிலேயே தெரிந்துவிடும். இந் நிலையில் ரகுராம் ராஜனின் மேஜிக் ரொம்ப நாள் ஓடாது என்று இன்றே எழுதிவிட்டது நியூயார்க் டைம்ஸ்!
நன்றி: ஒன்இந்தியா