- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

சுகமா. சுமையா.:சர்வதேச முதியோர் தினம்

இன்றைய சூழலில் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2050ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடுகளில், குழந்தைகளை விட முதியோர் அதிகம் இருப்பர். வளரும் நாடுகளிலும் முதியோரின் எண்ணிக்கை இருமடங்காக உயரும் என ஐ.நா., மதிப்பிட்டுள்ளது.

வயதான காலத்தில், இவர்களை நன்றாக கவனிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அக்., 1ம் தேதி, சர்வதேச முதியோர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள், முதியோரை மகிழ்விக்கும் விதமாக சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. இன்றைய விரைவான உலகில், குடும்ப உறவுகள் முன்பு இருந்ததை போல இல்லை. பெற்ற பிள்ளைகளால் கவனிக்கப்படமால் கைவிடப்பட்டு, பொருளாதாரத்தாலும் பாதிக்கப்பட்டு, அனாதைகளை போல வாழும் நிலைக்கு முதியோர் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களைப் பாதுகாக்க ஒவ்வொரு பிள்ளையும் முன்வர வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது.

முதியோர் சுமையா:

முதியோர், குழந்தைகளுக்கு சமம் எனக் கூறுவர். 50 வயதை கடந்தவர்கள், முதியோராக கருதப்படுகின்றனர். உடல் மற்றும் மனதளவில் அவர்களின் செயல்பாடுகள் மாறிவிடும். முதியோரின் அறிவு மற்றும் வழிகாட்டி, இன்றைய தலைமுறையினருக்கு அவசியம். அவர்களை சுமையாக கருதாமல், வரமாக கருதுங்கள். குடும்பத்தில் முதியோரை அரவணைத்து செல்லுங்கள்; நாமும் எதிர்காலத்தில் முதியோர் ஆவோம் என்பதை நினைவில் நிறுத்தி, அந்த சுயநலத்துக்காவது முதியோரை கவனிக்க முன்வர வேண்டும்.

குறையுமா முதியோர் இல்லம்:

பிள்ளைகள் நல்ல வசதியோடு இருந்தும், பெற்றோரை பார்த்துக்கொள்ளாமல் முதியோர் இல்லங்களில் சேர்க்கும் கொடுமையும் நம் நாட்டில் நடக்கிறது. யாருடைய பெற்றோராவது முதியோர் இல்லத்தில் இருந்தால், மீண்டும் வீட்டுக்கு அழைத்து வர இத்தினத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அரசும் முதியோருக்கு, பென்ஷன் உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும்.

உதிர்ந்து போன சருகுகளா…

முதியவர்கள்? கொடிது கொடிது… முதுமை கொடிது; அதனினும் கொடிது… முதுமையில் வறுமை. முதுமையின் வேதனையை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. மதுரை அரசு மருத்துவமனையின் அனைத்து வார்டுகளையும் அலசி ஆராய்ந்தால், அங்கே முதியவர்கள் மட்டும், ஆதரவின்றி தனியாய் நின்று சிகிச்சை பெறுவர். நீண்ட வரிசையில் தள்ளாடி தள்ளாடி நின்று மருந்து வாங்கிச் செல்வர். இன்னும் சொல்லப் போனால், சிகிச்சை பெற முடியாமல், எங்கோ ஒரு மூலையில் ஓய்ந்து உட்கார்ந்திருப்பர்.நீண்ட வரிசையில் நிற்கும் போது, சில முதியவர்கள் மயக்கமடைந்து, இறந்த சம்பவங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. முதுமையின் கொடுமையால், மாதம் 10 பேர் வரை, இங்கு இறக்கின்றனர். சட்டைப் பையில் முகவரியோ, மொபைல் போன் எண்ணோ இருந்தால், போலீசார் உறவினர்களிடம் தெரிவிக்கின்றனர். இல்லாவிட்டால், அனாதைப் பிணமாகிறது.

இளமையில் மனைவிக்காக… :

பிள்ளைகளுக்காக ஓடியாடி உழைத்த கால்கள்… முதுமையில் தள்ளாடும் போது, அரவணைக்க ஆளைத் தேடி தவிக்கும். மனைவி இழந்த முதியவருக்கோ, கணவனை இழந்த முதிய பெண்மணிக்கோ… உறவினர்களிடம் மதிப்பு குறைந்து விடும். அலட்சியம் கூடிவிடும். “நாம் தானே பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று, “சுடு சொல்லை மழையாய்’ பொழிவர். உடல் தளர்வோடு, உள்ளமும் தளர்ந்து, உழைத்த நாட்களை அசைபோட்டு உதவிக்கரம் தேடி தவிப்பர். பணமும், வசதியும் இருக்கும் இடத்தில் தங்குமிடத்திற்கு பிரச்னை இருக்காது. ஆனால் பேசுவதற்கு ஆளின்றி தனிமையின் பெரும் கொடுமையை அனுபவித்துக் கொண்டிருப்பர். வசதியற்ற மற்றும் நடுத்தர வீடுகளின் நிலைமையே வேறு. ஒண்டுவதற்கு இடமின்றி, உணவுக்கும் வழியின்றி… உருக்குலைந்து போய் விடுவர்.

ஏன்? முதுமை என்றால் இத்தனை பாராமுகம்? இன்றைய இளமை நாளைய முதுமையாய் மாறித் தானே ஆகவேண்டும்?

முதுமையின் கொடுமையை விவரித்த முதியவர்கள், தன் முகம் காட்ட மறுத்துவிட்டனர். “போட்டோ போட்டீங்கன்னா… பாவம் பிள்ளைங்க மனசு கஷ்டப்படும். நமக்கு வயசாகிப் போச்சு. அனுபவிச்சுத் தான் தீரணும்,’ என்று மறுத்துவிட்டனர்.

இதுதானே பெத்த மனசு. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டாமா?

நன்றி: தினமலர்