- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

சாபமாகும் வரங்கள்!

mobile [1]தீயதை நல்லதாக்கிக் கொள்ளவும், நல்லதைத் தீயதாக்கிக் கொள்ளவும் முடிந்த விசேஷத் தன்மை மனிதனுக்கு மட்டுமே உண்டு. எத்தனையோ பிரச்சினைக்குரிய சூழ்நிலைகளையும், குறைபாடுகளையும் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு முன்னேறி சரித்திரம் படைத்த சாதனையாளர்களை நாம் கண்டிருக்கிறோம். அதே போல் எத்தனையோ சாதகமான சூழ்நிலைகளையும், அனுகூலமான அம்சங்களையும் அலட்சியப்படுத்தி வீணடித்து பாழாய்ப் போனவர்களையும் பார்த்திருக்கிறோம். ஆனால் தனிப்பட்ட மனிதர்களாய் அங்கொன்றும் இங்கொன்றுமாக பாழாய்ப் போவதைப் பார்க்கிற போது ஏற்படாத பெரும் வருத்தம், ஒரு தலைமுறையில் கணிசமான நபர்கள் சீரழிவதைப் பார்க்க நேர்கிற போது நம்மிடம் ஏற்பட்டுத் தங்கி விடுகிறது.

இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் இணையற்ற அற்புதங்கள் என்று இரண்டைச் சொல்லலாம். ஒன்று இண்டர்நெட் மற்றது செல்போன். இவற்றை வரப்பிரசாதங்கள் என்று கூடச் சொல்லலாம்.

ஒரு காலத்தில் எதைப் பற்றியாவது ஆழமாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அதைப் பற்றித் தெரிந்தவர்கள் என்று நாம் நினைக்கும் நபர்களிடம் போய் கேட்போம். அல்லது நூலகங்களிற்குப் போய் அது சம்பந்தமாய் எழுதப்பட்டிருக்கும் புத்தகங்களையும், அது பற்றி பத்திரிக்கைகளில் வந்திருந்தால் அவற்றையும் தேடிப் படிக்க வேண்டிய நிலை இருந்தது. அப்படிப் பெறும் அறிவும் சமீபத்திய தகவல்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை. நபர்களிடம் கேட்டும், புத்தகங்களில் படித்தும் நாம் அறியும் எத்தனையோ தகவல்கள் பழையனவாக இருக்கக் கூடும். அதற்குப் பின் எத்தனையோ மாற்றங்கள் சம்பந்தப்பட்ட துறையில் நிகழ்ந்திருக்கக் கூடும். எத்தனையோ முன்னேற்றங்கள் ஏற்பட்டு, நாம் கேட்டும் படித்தும் அறிந்து கொள்ளும் விஷயங்களின் உபயோகத்தன்மை காலாவதியாகி விட்டிருக்கவும் கூடும். சில சமயங்களில் சிலவற்றைக் கேட்டறிந்து கொள்ள சரியான ஆட்களும் கிடைக்க மாட்டார்கள், படித்துத் தெரிந்து கொள்ள சரியான புத்தகங்களும் கிடைக்காமல் போய் விடும். அது போன்ற சந்தர்ப்பங்களில் பழைய காலாவதியான அறிவைக் கூட நாம் பெற முடியாமல் போய் விடும்.

இன்று எதையும் அரைகுறையாக அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமானாலும் இண்டர்நெட்டில் முறையாகத் தேடினால் போதும். முழுவதுமாக ஒருவர் விரும்பியதை அறிந்து கொள்ள முடியும். நாம் அறிய விரும்பும் விஷயங்களை சமீபத்திய மாற்றங்கள் உட்படத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். மனிதனின் அறிவுதாகத்திற்கு இண்டர்நெட் ஒரு ஜீவ நதி என்பதில் சந்தேகம் இல்லை. அது மட்டுமல்லாமல் விரல்நுனியில் உலகத்தை இண்டர்நெட் கொண்டு வந்து தருகிறது. பயணித்து செய்து முடிக்கிற பல காரியங்களை இருந்த இடத்திலேயே முடித்துக் கொள்ளும் மிகப்பெரும் வசதியை மனிதனுக்கு இண்டர்நெட் செய்து தந்திருக்கிறது.

அதே போல் தகவல் தொடர்பு என்பது ஒரு காலத்தில் சுலபமானதாக இருக்கவில்லை. ஒருவர் இறந்து போனால் வெளியூர்களில் இருக்கும் அவருடைய உற்றாரும் உறவினரும் அறிந்து கொள்ள பல மணி நேரங்கள் அல்லது நாட்கள் ஆகி விடும். தந்தி மூலம் தகவல் போய் சேர்ந்து அவர்கள் வருவதற்கு முன் இறந்தவரின் அந்திமக் கிரியைகள் முடிந்து விட்டிருப்பதும் உண்டு. அதே போல் பயணம் போன ஆட்கள் எங்கிருக்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள் என்றெல்லாம் தெரிந்து கொள்ள முடியாது. தபாலில் தகவல் வந்தால் தான் உண்டு. அப்படி வருவதும் பழைய தகவலாக இருக்கும்.  இல்லா விட்டால் பயணம் போன நபரே வந்து சொன்னால் தான் உண்டு.

இன்று செல்போன் தயவால் யாரையும் எப்போதும் உடனடியாகத் தொடர்பு கொள்ளும் சௌகரியம் இருக்கிறது. ஒரு நாளில் இருபத்தி நான்கு மணி நேரங்களும் ஒருவரை நாம் உடனே தொடர்பு கொள்ள முடியும். தகவல் தெரிவிப்பதும், பெற்றுக் கொள்வதும் மிக மிக எளிதான விஷயங்களாக மாறி விட்டன. இதனால் எத்தனை டென்ஷன் குறைகிறது, எத்தனை வேகமாகவும், சுலபமாகவும் பல வேலைகள் நடக்கின்றன என்பதைப் பார்க்கும் போது செல்போனும் இன்றைய விஞ்ஞானம் தந்த மிகப் பெரிய வரப் பிரசாதமே.

ஆனால் இத்தனை அருமையான வரப்பிரசாதங்கள் சாபங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன என்பதை நம்மால் மறுக்க முடியாது. இண்டர்நெட்டை தகவல் அறியும் சாதனமாய், அறிவூட்டும் நண்பனாய், தங்கள் வேலைகளை சுலபமாக்கிக் கொள்ளும் ஒரு நல்ல ஊடகமாக மட்டும் எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள்? எத்தனை பேர் அதனைத் தங்கள் முன்னேற்றத்திற்கு மட்டும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்? நல்ல விஷயங்களை விட அதிகமாய் கலாச்சாரச் சீரழிவுக்கான விஷயங்களே இண்டர்நெட் மூலம் அதிகம் பார்க்கப்படுவதாகவும், இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் இண்டர்நெட் உபயோகத்திற்கு அடிமையாகிக் கொண்டிருப்பதாகவும் ஆய்வுகள் சொல்கின்றன. இன்றைய இளைஞர்களிடம் கண் முன் உள்ள யதார்த்த உலகத்தில் பங்கு கொள்வது குறைந்து கொண்டு வருகிறது என்பதையும், இண்டர்நெட் மூலமாக மட்டும் உலகைக் காண ஆரம்பிக்கும் போக்கு வளர ஆரம்பித்துள்ளது என்பதையும் பார்க்கும் போது கவலை எழுகிறது.

இது ஒரு நோயாகவே மாறி விட்டிருக்கிறது என்று கூறும் அமெரிக்க உளவியல் கழகம் (American Psychiatric Association)  அந்த நோயிற்கு இண்டர்நெட் உபயோக சீர்குலைவு  (Internet Use Disorder or IUD) என்று பெயரிட்டிருக்கிறது. இண்டர்நெட் பயன்படுத்தும் நேரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போவது, இண்டர்நெட் இணைப்பு இல்லாத நேரங்களில் எதையோ இழந்தது போலத் தோன்றுவது, இண்டர்நெட் தடைப்படும் போது மற்றவர்களிடம் கோபித்துக் கொள்வது, ஒழுங்காக மற்ற வேலைகளைப் பார்க்க முடியாமல் அந்த வேலை நேரத்தையும் இண்டர்நெட்டிலேயே செலவழிப்பது, நிஜ மனிதர்களிடம் பழகும் நேரத்தையும், உறங்கும் நேரத்தையும் கூடப் படிப்படியாகக் குறைத்துக் கொண்டு இண்டர்நெட்டில் அரட்டை(chatting), விளையாட்டுகளில் அதிக நேரம் செலவிடுவது போன்றவை எல்லாம் அந்த நோய் உள்ளவர்களின் தன்மைகள் என்று அவர்கள் சொல்கிறார்கள்.

அதே போல் செல்போன் தகவல் தெரிவிக்கும் சாதனமாய் பயன்படுவது சிலருக்கு மட்டுமே. இன்றைய இளைஞர்களில் மிக அதிகமானோர் வெட்டிப் பேச்சுக்குத் தான் அதை அதிகம் பயன்படுத்துகிறார்கள். ஒரு காலத்தில் கிராமத்தில் மரத்தடியில் அமர்ந்தும் டீக்கடையில் அமர்ந்தும் வெட்டிப் பேச்சு பேசிப் பொழுதைக் கழிக்கும் ’பெரிசு’களைப் பலரும் கிண்டல்  செய்வதுண்டு. ஆனால் இன்று செல்போனில் அதையே இன்றைய இளைய தலைமுறையினரில் கணிசமான பகுதியினர் செய்வது அவர்களுடைய எதிர்காலம் மட்டுமல்லாமல் அவர்களால் உருவாக்கப் போகும் சமூக எதிர்காலம் குறித்த அச்சத்தையும் அதிகப்படுத்தி வருகிறது.

எந்த அளவில் செல்போன் இளைஞர்களை ஆபத்தில் உள்ளாக்கும் நிலைக்குத் தள்ளி இருக்கிறது என்பதை சமீபத்தில் நேரிலேயே பார்க்கும் அனுபவம் எனக்கு ஏற்பட்டது. ஒரு கல்லூரி மாணவி செல்போனில் பேசிக் கொண்டே நடந்து கொண்டிருக்கிறார். இடையே ஒரு சாலையை அவர் கடக்க வேண்டி இருந்த போதும் கூட அவர் சாலையின் இருபக்கமும் பார்க்கும் சிரமத்தைக் கூட மேற்கொள்ளவில்லை. வேகமாய் வந்த ஒரு கால் டாக்ஸிக்காரர் அந்தப் பெண்ணை இடிக்கிற அளவு வந்து வண்டியை நிறுத்தி வசை பாடினார். அதைக் கூட அந்தப் பெண் கவனிக்கவில்லை. தொடர்ந்து பேசிக் கொண்டே நடந்து போய்க் கொண்டிருந்தார். ஒருவேளை அவர் டாக்ஸி அந்தப் பெண்ணை இடித்திருந்தால் என்ன ஆகி இருக்கும்? யோசித்துப் பாருங்கள். கைகால் முறியவோ, உயிருக்கே ஆபத்தாகவோ கூட வாய்ப்பிருக்கும் ஒரு நிலைக்கு ஆளாகி, அதிலிருந்து தப்பித்து இருக்கிறோம் என்ற அறிவும் கூட இல்லாமல் செல்போனில் பேச்சை நிறுத்த முடியாமல் போய்க் கொண்டே இருந்த அந்த இளம் பெண் போல எத்தனையோ பேர் இருக்கிறார்கள். வாகனத்தை ஓட்டும் போது கூட பலரால் செல்போனில் பேசாமல் இருக்க முடிவதில்லை. எத்தனையோ விபத்துகள் இதன் காரணமாக தினந்தோறும் நடந்து எத்தனையோ அப்பாவிகள் அநியாயமாக அதில் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தும் அலட்சியமாய் நடந்து கொள்வது சிறுமையே அல்லவா?

அறிய வேண்டியவையும் செய்ய வேண்டியவையும் எத்தனையோ இருக்க சதாசர்வ காலம் செல்போனில் பேசிக் கொண்டும், SMS அனுப்பிக்கொண்டும் தங்கள் பொன்னான நேரத்தை இளைய சமுதாயம் இழந்து கொண்டிருப்பது முட்டாள்தனத்தில் முதலிடம் பெறும் தன்மை அல்லவா? நேரடி வெட்டிப் பேச்சுகளில் கூட அந்தப் பேச்சு ஒரு நாளில் ஒரு குறிப்பிட்ட நேரம் முடிவடைவது உண்டு. அவரவர் வீட்டுக்கு சாப்பிடவோ, உறங்கவோ போகும் நேரம் உண்டு. ஆனால் செல்போனில் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே பேசும் வசதி இருப்பதால் இது முடிவிற்கு வருவதும் இல்லை.

இளைஞர்களே இளமைக்காலம் இனிமையானது. இது பொன்னான காலமும் கூட. உங்கள் எதிர்காலத்தை நீங்கள் விதைக்கும் காலமும் அது தான். இந்தக்காலத்தை திருடிக் கொண்டு வீணடிக்க எதையுமே, யாரையுமே நீங்கள் அனுமதிக்காதீர்கள். இண்டர்நெட், செல்போன் வசதிகளைக் கண்டிப்பாகப் பயன்படுத்துங்கள். ஆனால் அதன் பயன்பாட்டில் உங்கள் கட்டுப்பாடு இருக்கட்டும். தேவைப்படும் போது வேண்டியதற்கு மட்டும் பயன்படுத்த வேண்டிய கருவிகளாக அவற்றை வைத்திருங்கள். மாறாக அவற்றின் கருவிகளாக மாறி, அடிமைப்பட்டு அழிந்து போகாதீர்கள்!

நன்றி: -என்.கணேசன் -தி இந்து