- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

ஒரு நாளைக்குப் பிச்சை எடுக்கும் தொகை ரூ 10,000/-

ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பிச்சையெடுப்பவர்களை பின் எப்படி அழைப்பதாம்?

beggar [1]இங்கல்ல, பிரிட்டனில்  நாட்டிங்ஹாம் நகரில் பிச்சையெடுப்பவர்களுக்கு ஒரு வாரத்துக்கு 700 பிரிட்டிஷ் பவுண்டு ஸ்டெர்லிங் கிடைக்கிறதாம். அது 70,550 ரூபாய்க்குச் சமம். ஒரு நாளைக்கு சுமார் 10 ஆயிரம் ரூபாய் என்றால் ஆண்டுக்கு 36 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்.

அதிக சம்பளம் கிடைப்பதாகச் சொல்லப்பட்டு பலரின் வயிற்றெரிச்சலுக்கு உள்ளாகிக் கிடக்கும் நமது ஐடி துறையினருக்குக் கூட இந்த அளவுக்குச் சம்பளம் இல்லை!

பிச்சையெடுக்கிறார்களே… பாவம்… தெருவோரத்தில் குடியிருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? தவறு. அங்கே வீடில்லாத பிச்சைக்காரர்கள் மிகக் குறைவு.

அவர்கள் தங்குவது உயர்தர ஹோட்டல்களில். பறப்பது டாக்ஸியில்.

“பிச்சையெடுக்கிறார்களே… பாவம்’ என்று யாராவது இரக்கப்பட்டு உணவு வாங்கிக் கொடுத்தால், நம்நாட்டைப் போல அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு அரக்கப் பரக்க அவர்கள் சாப்பிடுவதில்லை. தூக்கியெறிந்துவிடுகிறார்கள். அதுபோல எந்த குளிர்பானங்களை யார் வாங்கிக் கொடுத்தாலும் குடிப்பதில்லை. பணம் கொடுத்தால் மட்டுமே வாங்கிக் கொள்கிறார்கள்.

பிரிட்டனில் “பிக் இஸ்யூ’ என்ற இதழ் ஒன்று உள்ளது.

“”நீங்கள் ஏன் பிச்சையெடுக்க வேண்டும்? எங்களுடைய இதழை விற்று நீங்கள் சம்பாதிக்கலாமே?” என்று ஒரு பிச்சைக்காரரிடம் கேட்டதற்கு, “”அதெல்லாம் எனக்குக் கட்டுப்படியாகாது. நான் பிச்சையெடுத்தால் எனக்கு ஒரு மணி நேரத்துக்கு 20 பவுண்ட் ஸ்டெர்லிங் (ரூ.2000) கிடைக்கும். உங்கள் பத்திரிகையை விற்றால் கிடைக்குமா?” என்று திருப்பிக் கேட்டாராம்.

இப்படிப்பட்ட பிச்சைக்காரர்களுக்கு மக்கள் இரக்கப்பட்டு பணம் கொடுக்க வேண்டாம் என்ற குரல் அங்கே எழும்பியிருக்கிறது.

“பிக் இஸ்யூ’  பவுண்டேஷனும், சில தன்னார்வ அமைப்புகளும், காவல்துறையும் சேர்ந்து இந்தப் பணக்காரப் பிச்சைக்காரர்களுக்கு எதிராகக் களம் இறங்கியிருக்கிறார்கள்!

“”உண்மையிலேயே உதவி தேவைப்படுகிறவர்கள் இருக்கிறார்கள். வீடற்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இம்மாதிரியான பணக்காரப் பிச்சைக்காரர்களால் உண்மையிலேயே உதவி தேவைப்படுகிறவர்களுக்கு உதவி கிடைக்காமற் போகிறது” என்கிறார்கள்.

“”பிறருக்கு உதவ வேண்டும் என்ற இரக்க குணம் உங்களுக்கு இருக்கிறதா? உண்மையிலே தொண்டுள்ளத்துடன் செயல்படும் எவ்வளவோ தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு உதவுங்கள்” என்கிறார்கள்.

“”பிச்சைக்காரர்களுக்குப் பணம் தருவதன் மூலம் அவர்களுக்கு உதவுவதாக பலர் நினைக்கிறார்கள். ஆனால்  உழைத்து நல்ல மனிதனாக வாழ வேண்டிய ஒருவரை தங்களுடைய இரக்க குணத்தால் கொன்றுவிடுகிறார்கள். சோம்பேறிகளும், தீயவர்களும் உருவாகக் காரணமாகிவிடுகிறார்கள்” என்று பிச்சையிடுபவர்களைச் சாடுகிறார்கள்.

பணக்காரப் பிச்சைக்காரர்களுக்கு எதிராகக் கிளம்பியிருக்கும் இவர்கள், உண்மையிலேயே  தெருவோரத்தில்  வாழ்பவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

செய்தி : தினமணி கதிர்