- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

காஸ் மானியம் – அதார் கார்ட் இனி அவசியம் இல்லை

athaar [1]சமையல் காஸ், சிலிண்டருக்கான மானியத்தை பெற, ‘ஆதார்’ அட்டை இனி கட்டாயமில்லை; வங்கி கணக்கில், மானியத்தை நேரடியாக வரவு வைக்கும் திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், 402 ரூபாய் செலுத்தி, வழக்கம் போல், சமையல் காஸ் சிலிண்டரை பெறலாம்.
சமையல் காஸ் சிலிண்டருக்கான, மானியத்தை நேரடியாக பயனாளிகளுக்கு, வழங்கும் திட்டத்தை, பல்வேறு கட்டங்களாக அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. இதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கில், சுப்ரீம் கோர்ட், ‘ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தக் கூடாது’ என, உத்தரவிட்டது. இதற்கிடையே, ‘ஆதார் எண்ணை, வங்கிக் கணக்குடன் இணைக்காவிட்டால் மானியத்தை பெற முடியாது’ என, பெட்ரோலிய அமைச்சக அறிவிப்பால் குழப்பம் ஏற்பட்டது. இது ஒரு பக்கம் இருக்க, மானிய விலையில் வழங்கப்படும் சமையல் காஸ் சிலிண்டர், ஆண்டுக்கு, ஒன்பது தான் என்ற கட்டுப்பாடு, குழப்பத்தை அதிகரித்தது.
இந்நிலையில், டில்லியில் நடைபெற்ற, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பேசிய, காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுல், ‘மானிய விலையிலான, காஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை, 12 ஆக அதிகரிக்க வேண்டும்’ என, பிரதமர், மன்மோகன் சிங்குக்கு கோரிக்கை விடுத்தார். அது வரை, அவ்வாறு வழங்க முடியாது என, மறுத்து வந்த, பெட்ரோலியத்துறை அமைச்சர், வீரப்ப மொய்லியின் தொனி, அதற்குப் பின் மாறியது. ‘மானிய விலை காஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கை, ஆண்டுக்கு, 9ல் இருந்து, 12 ஆக அதிகரிப்பது குறித்து, மத்திய அமைச்சரவை முடிவு செய்யும்’ என்றார். இந்நிலையில், இது தொடர்பான திட்டக் குறிப்பை, பிரதமர்

தலைமையில் கூடிய, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை நேற்று ஆலோசித்தது. அதில், மானிய சிலிண்டர்களின் எண்ணிக்கையை, மாதம் ஒன்று வீதம், 12 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. மேலும், கூட்டத்தில், மானியம் பெற, ஆதார் அட்டை அவசியம் என, இருப்பதை மாற்ற வேண்டும்; இதனால் பெரும் குழப்பம் இருப்பதாக கருத்து தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சமையல் காஸ், சிலிண்டருக்கான மானியத்தை பெற, ஆதார் அட்டையை கட்டாயபடுத்த தேவையில்லை என்றும், வங்கி கணக்கில் மானியத்தை, வரவு வைக்கும் திட்டத்தை நிறுத்தி வைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

அமைச்சரவை கூட்டத்திற்கு பின், நிருபர்களிடம் பேசிய, மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியதாவது: மானிய காஸ் சிலிண்டர்கள், தற்போது குடும்பம் ஒன்றுக்கு, ஒன்பது வழங்கப்படுகிறது; இது, 12 ஆக உயர்த்தப்படுகிறது. இதனால், அரசுக்கு, 5,000 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். மானிய விலையில், சமையல் காஸ் சிலிண்டர் பெற, ஆதார் அட்டை அவசியம் என்ற முடிவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆதார் திட்டம் மூலமான, நேரடி மானியம் வழங்குவது, திறம்பட அமலாக்கப்படவில்லை. ஆதார் திட்டம் மூலம், மானியம் பெறுவது குறித்து ஆய்வு செய்ய ஒரு கமிட்டி அமைக்கப்படும். இவ்வாறு, மொய்லி கூறினார். மத்திய அரசின் இந்த முடிவால், இனி மேல் மானியத்தை, எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசே செலுத்தும். நேரடி மானிய திட்டம், மாற்றத்திற்கு வழி கோலும் என, மத்திய அரசு தரப்பில் பிரச்சாரம் செய்யப்பட்டது. இப்போது, இத்திட்டத்தையே மத்திய அரசு நிறுத்தியுள்ளது.

நன்றி: தினமலர்