- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

ஒளிமயமான எதிர்காலம்!

எது? எது? எப்ப? எப்ப?

பதினாறாம் லூயி மன்னர் மட்டும் ஒரு சின்ன ஆபரேஷன் செய்து கொண்டிருந்தால் பிரெஞ்சுப் புரட்சியே நடந்திருக்காது என்று யாராவது சொன்னால் நம்புவீர்களா? நம்பத்தான் வேண்டும். ஓரளவு உண்மைதான் இந்தச் செய்தி.

பதினாறாம் லூயி மன்னரின் பிறப்புறுப்பில் ஒரு சின்ன குறைபாடு. இறுக்கமாகத் தோல்மூடியிருந்தது. அதைச் சரிசெய்ய சின்ன அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அந்த அறுவை சிகிச்சை உலக முழுவதும் இன்று ஒரு மதச் சடங்காகக் கூட ஆகிவிட்டது. ஆனால், அவ்வளவு சாதாரணமான அறுவை சிசிச்சைக்கு மன்னர் உடன்படவில்லை. தயங்கினார், குழம்பினார், ஒத்திப் போட்டார். முடிவில் அவரது தலையே கில்லட்டின் மூலம் துண்டிக்கப்பட்டது.

ஆம். அவரது இந்தப் பிறவிக் குறைபாடு காரணமாக மன்னர் பதினாறாம் லூயி தம் மனைவியுடன் தாம்பத்ய உறவு மேற்கொள்ள முடியவில்லை. உடல் உறவுக்குத் தகுதியில்லை என்று அவள் தன்னை விவகரத்துச் செய்து அவமானப்படுத்திவிடக் கூடாதே என்பதற்காகவே அரசியின் எல்லா அநியாயங்களையும் மன்னர் சகித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. அவளது ஒழுக்கப் கேடுகள், முறையற்ற தொடர்புகள், அகங்காரமான நடவடிக்கைகள், நியாயமற்ற அரசியல் தலையீடுகள் குறித்து மன்னருக்கு அதிருப்தி இருந்தாலும் இந்த ஒரே காரணத்துக்காகவே அவளிடம் மன்னர் பணிந்து போனார். விளைவு… அரசியின் அராஜக நடவடிக்கைகள் மீது ஏற்பட்ட கோபமே பின்னர் பிரெஞ்சப் புரட்சியாகப் வெடித்தது. மன்னர் மீது மக்களுக்கு அவ்வளவு வெறுப்பில்லை… மாறாகப் பாசம் இருந்தது என்பது ஓர் ஆச்சர்யமான உண்மை.

நாடே கொந்தளித்த நிலையில் மன்னருக்கான மரண தண்டனையை நிறைவேற்றுவதா, மன்னிப்பதா என்ற விவாதம் பிரெஞ்சு கன்வென்ஷனில் நடைபெற்றபோது மன்னருக்கு மரணதண்டனை என்று வாக்களித்தவர் எண்ணிக்கை 361. மன்னிப்புக் கொடுப்போம் என வாக்களித்தவர் எண்ணிக்கை 334. இதிலிருந்து புரிவது என்ன? மரணத் தறுவாயிலும் செல்வாக்காகவே இருந்தார் பதினாறாம் லூயி என்பது புரிகிறதா?

ஏழாண்டுக்காலம் சிறிய ஓர் அறுவை சிகிச்சைக்குத் தயங்கி அல்லது கூச்சப்பட்டு மனைவியைத் திருப்தி செய்ய முடியாமல், அவளது தவறான அரசியல் முடிவுகளை ஏற்று நடந்ததால் ஒரு நல்ல மனிதர் அரசையும் உயிரையும் இழந்தார். ஏழாண்டுக்குப் பிறகு தமது மைத்துனரின் உறுதியான ஆலோசனைப்படி அந்தச் சிகிச்சையை மேற்கொண்டார். இல்வாழ்வுத் தகுதி பெற்றார். ஆனால், அதற்குள் நாட்டு அரசியல் நிலை செப்பனிட முடியாத அளவு சிக்கலாகி இருந்தது. சின்னப் பிரச்சனைகளை உரிய காலத்தில் தீர்க்க விரும்பாதவர்கள் பெரிய இழப்பைச் சந்திக்க நேரிடும். புரிகிறதா?
ஒரு கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது. வீட்டில் மேல் தளத்தின் உட்பூச்சு நடந்தபோது நிறைய சிமெண்ட் கலவை சிந்தியிருந்தது. உடனுக்குடன் அதனை எடுப்பது நடக்கிற காரியம் இல்லை. காரணம் மேற்கூரை பூசும் போது நிறைய சிமெண்ட் கலவை கீழே விழும். கொஞ்சம் பொறுத்துத்தான் அனைத்தையும் கூட்டிப் பெருக்கி அள்ள முடியும். ஆனால், வீட்டு சொந்தக்காரர் சிமெண்ட் வீணாகிறது என்று தொழிலாளர்களைத் திட்டிக் கொண்டே இருந்தார். தொழிலாளர்கள் கடுப்பாக வேலை செய்தார்கள். கொஞ்சம் பொறுமை வேண்டாமா! ஆனால் ஒன்று கொஞ்சம் பொறுத்து சிமெண்ட்டை அள்ளவில்லை என்றால் அவ்வளவுதான்.! சிமெண்ட் கலவை தரையில் உறுதியாகக் கெட்டியாகிவிடும். அதன் பின் கொத்திதான் எடுக்க வேண்டும். இதனால் பொருளும் நஷ்டம். உழைப்பும் சம்பளமும் வேறு கூடுதலாகும்.

அந்தக் “கொஞ்சம் பொறுத்து” என்கிற கால எல்லையில் விழிப்பு மிக மிக அவசியம். மிக முன்னதாகச் செய்ய வேண்டியது எது, கொஞ்சம் காலம் தாழ்த்திச் செய்ய வேண்டியது எது என்கிற தெளிவும் விவேகமும் நமக்கு மிகவும் அவசியம்.

இன்னொன்று சொல்கிறேன். பிறருக்குக் கெடுதல் செய்ய வேண்டும் என்கிற அளவு நமக்குச் சிலசமயம் கோபம் வரும். அப்போது கெடுதலை உடனே செய்துவிடக் கூடாது. அந்தச் செயலை எவ்வளவு காலம் தாழ்த்தலாமோ அவ்வளவு தாழ்த்தலாம். தவறில்லை. ஆனால் நம்மவர்கள் பிறருக்குக் கெடுதலை மட்டும் அவசர அவசரமாகச் செய்து விட்டு பிறகு அவஸ்தைப் படுகிறார்கள்.

ஒருமுறை சேரன் எக்ஸ்பிரஸில் சென்னையில் இருந்து கோவை வரும்போது நடந்த சம்பவம். இரவு பதினோரு மணிக்கு ரயில் புறப்படும் சமயம் ஒருதாயும் மகளும் அவசர அவசரமாக வந்து பெட்டியில் ஏறினர். அவர்களுக்கு வழி விடாது ஒரு ராணுவ வீரர் தமது பெரிய இரும்புப் பெட்டி கைப்பைகள் என்று பல மூட்டை முடிச்சுகளை வாயில் கதவருகே வைத்துக் கொண்டு இடையூறாக நின்றிருந்தார்.

சிரமப்பட்டு தாயும் மகளும் ஏறிவிட்டனர். உண்மையில் ப.ப.உ (டிக்கட் பரிசோதகர்) பின்னால் இருந்து தள்ளி ஏற்றிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

ரயில் புறப்பட்டும் விட்டது. எரிச்சலுடன் ராணுவ வீரரிடம் உங்கள் பெர்த் எது? ஏன் வழியில் பொறுப்பின்றி இப்படி அடைத்துக் கொண்டு நிற்கிறீர்கள்? என்று கேட்டார். பெர்த் ரிசர்வ் ஆகவில்லை. என்னுடன் வந்த இன்னொரு ராணுவ வீரர் பிளாட் பாரத்திலிருந்து எங்கள் லக்கேஜீகளை (இன்னும் வேறு) எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவற்றை வாங்கத் தான் வழியில் நின்றேன் என்று வெகு அலட்சியமாகச் சொன்னார்.
அவ்வளவுதான் ரிசர்வேஷன் இல்லாம ஏன்யா ஏறினே என்று ப.ப.உ. கத்த நான் மிலிடிரியாக்கும் என்று ராணுவ வீரர் எகிற ஏக ரகளை. அளவு கடந்த கோபத்தில் இறங்குய்யா கீழே என்று கத்தியடியே ப.ப.உ. ராணுவ வீரர் கைப்பையைத் தூக்கி ஓடும் ரயிலிலிருந்து பிளாட்பாரத்தில் எறிய… அடிதடி ஆரம்பமாகி விட்டது.

சாமாதனம் செய்து வைத்து நாங்கள் விசாரித்தால் பெரிய சிக்கல் புலப்பட்டது. ராணுவ வீரர் மறுநாள் போய் குன்னூரில் பொறுப்பில் (ஈன்ற்ஹ்) சேரவேண்டிய ராணுவ உத்தரவு கைப்பைக்குள் இருக்கிறது. ரயிலோ ஓடிக்கொண்டிருக்கிறது. இப்போது என்ன செய்வது? எவ்வளவு கோபத்திலும் ப.ப.உ. அப்படிச் செய்யலாமா? கெடுதலை உடனே செய்வதா? தயவு செய்து தோன்றுகிற கெடுதலை மட்டும் உடனே செய்யாதீர்கள். கொஞ்சம் காலம் தாழ்த்தி செய்ய வேண்டியதைச் சரியாகக் காலம் தாழ்த்தி செய்யுங்கள். உடனே செய்ய வேண்டியவற்றை உடனே செய்யுங்கள். பதினாறாம் லூயி ஞாபகம் இருக்கட்டும்.

நன்றி: சுகி. சிவம் – நமதுநம்பிக்கை