- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

பெத்த பிள்ளைகள் கைவிட்ட போது… உண்மைக் கதை

அம்மா… அரபியரின் தாயுள்ளம்

இங்கு நான் தங்கியிருக்கும் (துபாய்) வீட்டிலிருந்து இரண்டு வீடுகள் தள்ளியிருக்கும் ஒரு அரபி வீட்டில் கடந்த முப்பது வருசமாக வேலை பார்க்கும் இலங்கையை சேர்ந்த ஒரு அம்மாவின் கதை இது…

கிட்டத்தட்ட அவங்களை பதிமூணு வருசமா எனக்கு தெரியும். இப்போ அவங்களுக்கு அறுபது வயசாகுது, சின்ன வயசுலேயே குடும்பத்தை பிரிந்து வந்ததாலோ என்னவோ, எல்லோர் மீதும் அதிக அன்பும் அக்கறையும் செலுத்த கூடியவர்.

அவங்க வேலை பார்த்த அந்த அரபி வீட்டின் ஒட்டு மொத்த நிர்வாகமும் இவங்க கையில்தான் இருந்தது, இவங்களும் ரொம்ப நேர்மையா கிட்ட தட்ட அந்த குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போலவே இருந்தாங்க, அந்த அம்மாவுக்கு இரண்டு மகள்கள், ஆறு பேரன் பேத்திகள்… எல்லோரும் இலங்கையில்தான் இருக்காங்க, தன்னோட இந்த முப்பது வருஷ வருமானம் அனைத்தயும் தன்னோட இரண்டு மகள்களுக்குதான் செலவு செய்தார்களே தவிர தனக்கென அஞ்சு பைசாகூட அவங்க வச்சிக்கிட்டது கிடையாது.

சரி… அறுபது வயசாயிடுச்சி, வேலை பார்த்தது போதும் இனிமே நம்ம மகள்கள் நம்மள கவனிச்சுப்பாங்கன்னு சொல்லி ரொம்ப நமபிக்கையோட, இங்கிருந்து கிளம்பி ஊருக்கு போயிட்டாங்க…ஆனா அவங்களை அனுப்ப அந்த அரபி குடும்பதுக்கு மனசே இல்லை, இருந்தாலும் நான் என்னோட கடைசி காலத்தை என் மகள்களோடும் பேரன் பேத்திகளோடும் கழிக்கணும்னு சொல்லி அந்த அரபி குடும்பத்தை ஒரு வழியா சமாதான படுத்திட்டு இலங்கைக்கு போனாங்க.

அவங்க ஊருக்கு போயி நாளே மாசம்தான் ஆகுது, அதுக்குள்ளே அவங்களோட ரெண்டு மகள்களுக்குள்ளும் சண்டை வந்து,அம்மா உனக்குத்தான் எல்லாம் செஞ்சாங்க அதுனாலே நீதான் பாத்துக்கணும் ஒரு மகளும், இல்லே உனக்குத்தான் எல்லாம் செஞ்சாங்க அதுனாலே நீதான் பாத்துக்கனும்ன்னு சொல்லி இன்னொரு மகளும் மாறி மாறி சண்டை போட்டிக்கிட்டு கடைசிலே ரெண்டு பேருமே இவங்களை கவனிக்காமே விட்டுட்டாங்க…

எதார்த்தமா ஒரு நாள் இவங்க வேலை பார்த்த இந்த அரபி அவங்களுக்கு சும்மா நலம் விசாரிக்கிறதுக்காக போன் பண்ணியிருக்கார், அப்போ அவங்க மஞ்ச காமலையும் டைபாயிடு காய்ச்சலும் வந்து, கவனிக்க யாருமே இல்லாமே தன்னோட சொந்தகாரங்க வீட்ல படுத்த படுக்கையா இருந்திருக்காங்க. இதை கேள்விப்பட்ட அந்த அரபி உடனே வெளிநாட்ல படிச்சிட்டு இருந்த தன்னோட மகனுக்கு போன் பண்ணி விசயத்தை சொல்லி உடனே போயி அவங்களை இங்கே கூட்டிட்டு வான்னு சொல்லிட்டாரு..அந்த அரபியோட மகனும் உடனே லண்டனில் இருந்து கிளம்பி இலங்கைக்கு போயி அவங்களை கொண்டு வந்து கொழும்பில் உள்ள பெரிய மருத்தவமனையில் ஒரு வாரம் வைத்து சிகிச்சை அளித்து அவங்க ஓரளவு குணம் அடைந்தவுடன் துபாயிக்கு கொண்டு வந்து, இங்கயும் ஒரு வாரம் மருத்துவமனையில் வைத்து கிகிச்சை அளித்து பூரண குணமானவுடன் இப்போ அந்த அரபியோட வீட்லயே கூட்டிட்டு வந்து வச்சிருக்காங்க.

இப்போ விசிட் விசாலதான் வந்திருக்காங்க, அறுபது வயசுக்கு மேலே இங்கே வீட்டு வேலை செய்பவர்களுக்கு விசா அடிக்க முடியாது… இருந்தாலும் தன்னுடைய தனி அதிகாரத்தை பயன்படுத்தி அவருக்கு விசா அடிப்பதாகவும்,வேலை எதுவும் செய்ய வேண்டாம் இங்கு இருக்கும் மற்ற வேலையாட்களை வைத்து வீட்டை கவனிச்சிட்டு நீங்க சும்மா இருந்தாலே எங்களுக்கு போதும்ன்னும் அந்த அரபியும் அரபியின் மனைவியும் சொல்லிட்டாங்களாம்.

இத எல்லாம் அவங்க சொல்லி முடிக்கும் வரை, அவங்க கண்ணுல இருந்து தாரை தாரையாய் கண்ணீர் வழிஞ்சிட்டே இருந்துச்சு… அவங்களுக்கு என்ன ஆறுதல் சொல்லுறதுன்னு தெரியலே. சரிம்மா உங்களோட இந்த கதையே நான் பேஸ்புக்ல எழுதபோறேன்னு சொன்னேன், நீ எந்த புக்குளையும் எழுதிக்கோ ஆனா கடைசி காலத்துல பெத்த புள்ளைங்கள நம்பி இருந்திட வேணாம்ங்றத மட்டும் தெளிவா எழுதிடுன்னு சொன்னாங்க. இறைவன் ஒரு கதவை அடைச்சா மறுகதவை திறப்பான்னு கேள்வி பட்டிருக்கேன், ஆனா உங்க விசயத்துலதான் அத நேர பாக்குறேம்மான்னு சொல்லிட்டு வந்தேன்.

-Mohamed Ali