Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

August 2014
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,919 முறை படிக்கப்பட்டுள்ளது!

லிஸ்ஸி வேலஸ்க்யூஸ் – தோற்றம் தந்த ஏற்றம்

yu_2014420hஅழகாக இருக்கவேண்டும் என்பதற்காக எத்தனைப் பாடுபடுகிறோம். அழகுச்சாதனப் பொருட்களுக்கு எத்தனைச் செலவழிக்கிறோம். இவரை ஒரு கணம் நோக்குங்கள். இருபத்தைந்து வயதே நிரம்பிய லிஸ்ஸி வேலஸ்க்யூஸ் (Lizzie Velasquez) ஒரு அமெரிக்கர். உலகின் அவலட்சணமான பெண்(World’s Ugliest woman) என்று சக மனிதர்கள் தன்னை அழைக்க அனுமதிக்கிறார். இவரது இந்தத் தன்னம்பிக்கை வெளித்தோற்றத்தை முன்னிலைப்படுத்தும் இந்த உலகில் எத்தனை அபூர்வமானது!?

லிஸ்ஸி வேலஸ்க்யூஸ் பிறந்தபோதே அவரது உடலில் உள்ள ஹார்மோன் சுரப்பிகள் சரிவர வேலை செய்யவில்லை. உடல் உறுப்புகள் வளரத் தேவைப்படும் கொழுப்பும் புரதமும் போதுமான அளவு உடலில் தங்க மறுத்தன. இதனால் உடல் உறுப்புகள் அந்தந்த வயதுக்குரிய வளர்ச்சியை எட்டமுடியாத நிலை. மேலும் விரைவாக முதிர்ச்சியைச் சந்திக்கும் சருமப்பிரச்சினையும் எதிர்கொள்ள ஆரம்பித்தார்.

தினசரி 3, 770 கலோரிகளைச் சராசரி அமெரிக்கர்கள் உண்ண வேண்டியிருந்தால், கொழுப்பு மற்றும் புரதம் வெளியேறும் பிரச்சினையால் லிஸ்ஸி தினசரி 5000 கலோரிகள் உணவைப் பிரித்து உண்ணவேண்டியிருந்தது. நல்லவேளையாக உடல் எலும்புகள், பற்கள் வலுவாக அமைந்துவிட்டன. இவருக்குப் பிறந்தது முதல் சிகிச்சை அளித்துவரும் டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தின் தென்மேற்கு மருத்துவ மையம் ,லிஸியின் உடல்நலக்குறைவை progeroid syndrome என அறிவித்தது. மிக அபூர்வமான இந்த நோயால் தனது தனது நான்காவது வயதில் வலது கண் பார்வையை இழந்தார். இடது கண்ணிலோ மங்கலான பார்வைதான்.

தடையறத் தாக்கிய மனிதர்கள்

இத்தனை துயரங்களோடு மிக விநோதமான வெளித்தோற்றம் லிஸ்ஸியின் அடையாளமானது. இதனால் குழந்தைப் பருவம் முதலே வெறுப்பைச் சந்திக்க ஆரம்பித்தார். தனது பள்ளிக் காலத்திலேயே சக மாணவர்களால் சூனியக்காரி என்றும், இன்னும் பல கடும் சொற்களால் குத்திக்கிழிக்கப்பட்டார்.

பள்ளியில் மாணவர்கள் இவரை நடத்தியதைவிட விட 30 வயதுக்கு மேற்பட்ட வளர்ந்த மனிதர்களால் இவர் சந்தித்த வேதனைதான் கொடுமையின் உச்சம். லிஸியை பேய் என்றும் , மான்ஸ்டர் என்றும், உனக்கெல்லாம் இந்த உலகில் இடமில்லை.. செத்து போ என்றும் ஒருவர் ஈவிரக்கமின்றி வசைபாடி ஒரு காணொளியை யூடியூபில் உலவவிட்டிருக்கிறார் என்றால் லிஸ்ஸியின் நிலைமையை நீங்கள் உணரமுடியும். பிரச்சினைகளைச் சந்தித்த பள்ளிக் கல்லூரி நாட்களிலெல்லாம் குளியலறையில் தனிமையில் அழுது தீர்த்தார். ஆனால் சொல்லடிகளுக்காகவெல்லாம் இனிச் சுணங்கியிருக்கக் கூடாது என்று தகவலியல் படிப்பில் முதுகலை பட்டம்பெற்றபோது முடிவு செய்தார்.

கசப்பான சொற்களுக்குப் பதிலாக

எத்தனை எதிர்மறை வார்த்தைகளால் தன்னைத் தாக்கினார்களோ அதற்கு நேர்மாறாக ‘ பாசிட்டிவ் வார்த்தைகள்’ மூலம் தன்னைத் திரும்பிப்பார்க்க வைக்கமுடியும் என்று நம்பினார். விளைவு! மனிதர்களைத் தன் மந்திரச் சொற்களால் கட்டிப்போடும் மிகப்பிரபலமான தன்னம்பிக்கை பேச்சாளர் ஆகியிருக்கிறார் லிஸ்ஸி. வாழ்க்கையில் மிக மோசமான சூழ்நிலைகளை வெற்றிகரமாக எப்படி எதிர்கொள்வது என்பதைப் பற்றி தனது தன்னம்பிக்கை கருத்தரங்குகளில் பேசி வருகிறார் லிஸி. இவர் மோட்டிவேஷனல் ஸ்பீச் தரும் கூட்டங்களில் குண்டூசி விழுந்தால் கேட்கும் அமைதி மட்டுமல்ல, தேவைப்படும்போது உற்சாகமும், சந்தோஷமும் கூச்சலும், விசிலும் கரவொலியும் அதிரும். காரணம் லிஸ்ஸியிடம் இயல்பாகவே அமைந்துவிட்ட நகைச்சுவை உணர்வு. சொற்களின் வலிமையை உணர்ந்ததால் தற்போது ஒரு எழுத்தாளராகவும் அடுத்த பரிமாணத்தைத் தொட்டுவிட்டார். லிஸி தற்போது எழுதி வெளியிட்டிருக்கும் ‘அழகாய் இருங்கள், நீங்களாய் இருங்கள்’(Be Beautiful Be You!) என்ற புத்தகம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் சூடாக விற்றுக்கொண்டிருக்கிறது.

அழகின் இலக்கணம்

“இப்படித்தான் இறைவன் என்னைப் படைத்திருக்கிறார். எதன்பொருட்டும் என் தோற்றத்தையும் நான் மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. எல்லோரையும்போல் இயல்பாக வாழ்வதில் எனக்கு எந்த மனப்பிரச்சினையும் இல்லை. எனது இந்தத் தோற்றமே என் ஏற்றத்துக்கு முக்கியக் காரணம். அப்படியிருக்கும்போது இது எத்தனை அழகான தோற்றம்! என் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களை , திட்டுகளை நான் பெரிதுபடுத்துவதில்லை , அவற்றை வெற்றுச் சொற்களாகவே பார்க்கிறேன். எல்லாவற்றையும் கேட்டுச் சிரித்துக் கொள்கிறேன்.

நான் என்பது என் தோற்றத்தைப் பொறுத்ததல்ல, என் செயல்களைப் பொறுத்ததே. என் பதிலடியை என் தன்னம்பிக்கையின் மூலமும், வெற்றியின் மூலமும் என்னைத்திட்டுபவர்களுக்கும் புறக்கணிப்பவர்களுக்கும் காட்ட விரும்புகிறேன்.” என்று அழகின் இலக்கணத்தை மாற்றி எழுதியிருக்கிறார் லிஸ்ஸி.

தி  இந்து