- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

கார்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சும் கடல்!

உங்களுக்கு தெரியுமா கடல்களும் மரங்களை போல் கார்பன்டை ஆக்ஸைடை (CO2) உறிஞ்சிக்கொள்கிறது என்று?; சுற்றுப்புறசூழல் சீர்கேடும் குறைந்துகொண்டிருக்கும் புவியின் வாழ்நாளும்;

saveourearth_002 [1]அனைவருக்கும் வணக்கம் (இரண்டாவது உயிர்க்கோளம் அதாவது இரண்டாவது பூமி பற்றிய எனது முந்தைய பதிவை அனைவரும் வாசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன், வாசிக்க தவறியவர்கள் நேரமிருப்பின் இங்கு சென்று வாசித்துவிட்டு இந்த பதிவை தொடர வேண்டுகிறேன்) புவியில் உயிரினங்கள் உருவாக அடிப்படை காரணமாக விளங்கிய உயிர்கோளம் (Biosphere) கிட்டத்தட்ட 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே புவியில் உருவாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது! புவியின் உயிர்கோளம் அதாவது புவியில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இன்னும் அதிகபட்சமாக 2.5 பில்லியன் ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது! அதன் பிறகு சூரியனின் மேற்பரப்பில் ஏற்படவிருக்கும் வெப்பநிலை வேறுபாட்டின் காரணமாக புவியின் உயிர்க்கோளம் அழிக்கப்பட்டு பூமி உயிரினங்கள் இல்லாத கோளாக மாறிவிடும் என்கிறார்கள் விண்ணியல் வல்லுனர்கள்! ஆனால் இன்று நாம் செய்துகொண்டிருக்கும் தவறுகளால் புவி அதன் வாழ்நாளிளிருந்து கிட்டத்தட்ட ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே அழிய காத்திருக்கிறது என்றால் அதிர்ச்சியாக உள்ளதல்லவா? வாருங்கள் இன்றைய பதிவினூடாக இதைப்பற்றி அலசுவோம்!

பெருகிவரும் நகரமயமாக்களுக்காக இன்று நாம் காடுகளை அதிக அளவில் அழித்து வருகிறோம்! காடுகள் அழிக்கப்படும் போது விலைமதிப்பில்லாத இயற்கை பொக்கிஷங்களான… மரங்கள், செடிகள், கொடிகள், நுண்ணுயிரிகள், பறவையினங்கள் மற்றும் விலங்கினங்கள் ஆகியவை அனைத்தும் சேர்ந்தே அழிக்கப்படுகின்றன! இவை அனைத்தும் சேர்ந்துதான் சூழ்நிலைமண்டலத்தை உருவாக்குகின்றது என்று முந்தைய பதிவில் பார்த்தோம், உங்கள் நினைவில் இருக்கும் என்று நம்புகிறேன்! மனிதன் ஆதிகாலம் தொட்டே தன் தேவைக்காக இல்லாமல் சுயநலத்திற்காக மட்டும் அழித்த தாவர வகைகளின் எண்ணிக்கை (கவனிக்க தாவர வகைகளின்) லட்சத்தையும் தாண்டும் என்கிறது தாவரவியல் வரலாறு!

deforestationforestdestruction [2]இன்று காடுகள் எந்த அளவு அழிக்கப்பட்டுக்கொண்டிகிறது என்பதற்கு உதாரணமாக அதிர்ச்சியான புள்ளிவிபரம் ஒன்றைப் பார்ப்போம் வாருங்கள்! சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு வரை நிலப்பரப்பின் பெரும்பகுதியை (50% approximately, except Sea) காடுகள்தான் உள்ளடக்கியிருந்திருக்கிறது! கடந்த 2010 ஆம் ஆண்டு இயற்கையின் வளங்களின் தற்போதைய நிலை பற்றி அறிய மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவில் தற்போது உலகில் 30% காடுகள் தான் எஞ்சியிருப்பதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது! பெருகிவரும் நகரமயமாக்களுக்காக கடைசி 200 வருடங்களில் மட்டும் நாம் அழித்த காடுகளின் அளவு சுமார் 10% இருக்கும் என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது!

எதிர்காலத்தில் நகரங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பிருப்பதால் காடுகள் இன்னும் அதிகமாய் அழிக்கப்படக்கூடும் என்றும் காடுகளை அழிக்கும் விசயத்தில் இதே ரீதியில் இன்னும் நாம் 500 ஆண்டுகள் பயணித்தோமானால் அதன் பிறகு “நேஷனல் ஜியோகிராபிக் சேனல் வீடியோக்களை” தவிர்த்து வேறெங்கும் காடுகளை காண முடியாது என்றும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது! தாவரங்களும்.., தாவரங்களை உள்ளடக்கிய காடுகளும் அழிக்கப்படும் போது வளிமண்டலத்திலுள்ள கரியமிலவாயு (CO2) சமநிலைப்படுத்தப்பட்டு காற்றில் உயிர்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் நிலைநிருத்தப்படுவதில் பல்வேறு சிக்கல்கள் உண்டாகும் என்பதை இங்கே விளக்கி கூற தேவையில்லை என்று கருதுகிறேன்!

கரியமிலவாயு நீக்கப்படுதல் என்றதும் எனக்கு மற்றொரு விஷயம் ஞாபத்திற்கு வந்தது! உங்களுக்கு தெரியுமா, மரங்களைப் போலவே வளிமண்டலத்திலுள்ள கரியமிலவாயுவை (CO2) அகற்றுவதில் கடல்களும் (Sea) முக்கிய பங்கு வகிக்கிறது என்று? மரங்களை போல கடல்கள் கரியமிலவாயுவை உட்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடுவதில்லைதான் ஆனால் வாகனங்கள், தொழிற்ச்சாலைகள் மற்றும் இன்னபிற வஸ்துகளால் வெளியேற்றப்பட்டு வளிமண்டலத்தில் கலக்கும் அதிகப்படியான கரியமிலவாயுவை உறிஞ்சி வெளியேற்றி சுற்றுப்புறசூழல் பாதிப்படையாமல் காக்கும் விசயத்தில் கடல்கள் மிகமுக்கிய பங்குவகிக்கிறது என்றால் மிகையில்லை! ஒளிச்சேர்க்கையின் (Photosynthesis) போது தாவரங்கள் வளிமண்டலத்திலிருந்து கார்பன்டை ஆக்ஸைடை (CO2) உறிஞ்சிக்கொள்ளும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்! மேலும் பள்ளிகூட பாட புத்தகங்களில் இதுபற்றி விரிவாக படித்தும் இருப்போம்! தாவரங்கள் உயிருள்ளவை…, ஆகையால் தாவரங்கள் வளிமண்டலத்திலிருந்து வாயுக்களை உறிஞ்சிக் கொள்வதில் நமக்கு வியப்பேதும் இருக்கப்போவதில்லை! ஆனால் நீரோ உயிர் அற்றது! என்றால் கடல் நீரால் எப்படி கார்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சிக்கொள்ளமுடிகிறது என்று நீங்கள் கேட்கலாம்! இங்கு தான் வேதியியல் (Chemistry) என்ற ஒன்று வேலை செய்கிறது! கடல் நீர் கார்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சிக்கொள்ளுதல் ஒரு உயிரியல் (Biological) கலந்த இயற்பிய-வேதியியல் (Physio chemical) நிகழ்வு ஆகும்!

temperaturesea [3]பொதுவாக எல்லா வாயுக்களுமே நீரில் கரையும் தன்மை கொண்டவை! மற்ற வாயுக்களுடன் ஒப்பிடும் போது கார்பன்டை ஆக்ஸைடு நீரில் அதிக அளவு கரையும் தன்மை கொண்டது! அதுமட்டுமின்றி கார்பன்டை ஆக்ஸைடு இயல்பாகவே எவ்வித தூண்டுதலும் இன்றி குளிர்ந்த நீருடன் வேதிவினை புரியும் தன்மைகொண்டது! கார்பன்டை ஆக்ஸைடின் இந்தப் பண்புதான் அது வளிமண்டலத்திலிருந்து பிரிந்து எவ்வித தூண்டலும் இன்றி கடல் நீருடன் சேர்ந்து வேதிவினை புரிய முக்கிய காரணமாக திகழ்கிறது! இங்கே கடல் நீரின் குளிர்ச்சி பற்றி நான் விளக்க தேவையில்லை என்று கருதுகிறேன்! தொடர்ந்து கார்பன்டை ஆக்ஸைடு கடல் நீருடன் வேதிவினை புரிந்து கார்மானிக் அமிலம் (H2CO3), பைகார்பனேட் (HCO3) மற்றும் கார்போனேட் (CO3) ஆகிய அமிலங்களாக சிதைவடைகிறது! கடலின் மேற்பரப்பில் நிகழ்ந்த இந்த நிகழ்வின் (this event called as Physiochemical) மூலம் உருவான அமிலங்கள் கடலின் அடிப்பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்டு (this event called as Biological) அவை கரிம கார்பன்களாக மாற்றம் செய்யப்படுகின்றன! இந்நிகழ்வு எப்போதும் தொடர்ச்சியாக நிகழ்ந்துகொண்டே இருப்பதால்தான் வளிமண்டலத்திலிருந்து கார்பன்டை ஆக்ஸைடை வெளியேற்றுவதில் கடல்கள் முக்கிய பங்குவகிக்கிறது! சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி 2007 – 2011 ஆம் ஆண்டு கால இடைவெளிகளில் தொழிற்சாலை மற்றும் இன்னபிற வஸ்துகளால் வெளியேற்றம் செய்யப்பட்ட கரியமிலவாயுக்களில் சுமார் 25% சதவீதத்தை கடல்கள் இவ்வாறு உறிஞ்சி வெளியேற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது! தொழில்புரட்சி துவங்கிய நாளிலிருந்து இன்று  வரை வெளியேற்றம் செய்யப்பட்ட கரியமிலவாயுவில் தோராயமாக 50% அளவிற்கு கடல்கள் உறிஞ்சிக்கொண்டுள்ளது என்றால் வளிமண்டலத்திலிருந்து கார்பன்டை ஆக்ஸைடை வெளியேற்றுவதில் கடல்கள் எத்தனை முக்கியத்துவம் பெறுகிறது என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளலாம்!

SeaWaterPollution [4]கார்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சிக்கொள்வதில் மட்டுமல்ல பூமியின் தட்பவெப்பத்தை கவனித்துக் கொள்வதிலும் கடல்கள் முக்கிய பங்குவகிக்கிறது என்றால் மிகையில்லை! சூரிய வெப்பத்தின் பெரும்பகுதியை கிரகிக்கும் கடல்கள் மட்டும் இல்லையென்றால் பூமி என்றைக்கோ குளிர்ந்து மனிதர்களற்ற கோளாக மாறிப்போயிருக்கும்! இப்படிப்பட்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கடல் பிரதேசத்தைக்கூட மனிதன் மாசுபடுத்துவதிலிருந்து விட்டுவைக்கவில்லை என்றுதான் கூறவேண்டும்! ஆண்டொன்றுக்கு தோராயமாக மூன்று முதல் நான்கு லட்சம் டன் அளவு வரையிலான குப்பைகள் இந்தியக் கடலோரப்பகுதியில் மட்டும் கொட்டப்படுகிறது என்றால் உலகம் முழுவதிலும் உள்ள கடல் பிரதேசங்களில் எவ்வளவு குப்பைகள் கொட்டப்படும் என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்! கொட்டப்படும் குப்பைகளில் 80% சதவீதம் பிளாஸ்டிக் குப்பைகள் என்று மிரட்டுகிறது மற்றுமொறு ஆய்வு!

இப்படி அளவுக்கு அதிகமாக கொட்டப்படும் குப்பையால் கடல் தன் இயற்க்கைத்தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவிடும்.., இதன் காரணமாக மேற்சொன்ன கடலின் இன்றியமையா பணியான வழிமண்டலத்தில் கலந்திருக்கும் அதிகப்படியான கார்பன்டை ஆக்ஸைடை வெளியேற்றுதல் மற்றும் சூரிய வெப்பத்தை உறிஞ்சி தட்பவெப்பத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ளுதல் போன்ற பணிகளில் கடல் தோல்வியை சந்திக்க ஆரம்பிக்கும்! இது நிகழ ஆரம்பிக்கும் போது அதன் விபரீதம் எப்படியிருக்கும் என்று நான் இங்கே விளக்கிகூற தேவையில்லை!

effectsofseawaterpollutionduetooilspills [5]குப்பைகளை விட கடல் அதிக அளவில் மாசடைவது எண்ணெய்க் கழிவுகளால் தான் என்கிறது மற்றுமொறு ஆய்வு! கச்சா எண்ணெய் கழிவுகள் கடலில் கொட்டப்படும் போது அதிலிருக்கும் பாலிசைக்ளிக் அரோமேடிக் ஹைட்ரோகார்பன் (Polycyclic Aromatic Hydrocarbon, known as PAH) என்ற நச்சுப்பொருள் கடலில் கலந்துவிடுகிறது! இது கடலையே கருப்பு நிறமாக மாற்றும் தன்மைகொண்டது என்பதோடு மட்டுமல்லாமல் கடலிலுள்ள உணவுசங்கிலி முழுவதிலும் விஷத்தையும் பாய்ச்சக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது! இந்த நச்சுப்பொருள் முதலில் தாக்குவது கடலில் வாழும் நுண்ணுயிரிகளைத்தான், பின்பு இந்த நுண்ணுயிரிகளை உண்டு வாழும் மீனையும் பாதிக்கிறது! இறுதியில் மீனை உணவாக உட்கொள்ளும் மனிதனையும் பாதிக்கிறது.

Healtheffectsofpollution [6]கடல் மாசுபடுதல் இதோடு நின்றுவிடுகிறது என்றா நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை! நகரங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றம் செய்யப்படும் கழிவு நீர்.., பெரும்பாலும் கடலில்தான் போய் கலக்கிறது! இதன் காரணமாக கடல் நீர் கொஞ்சம் கொஞ்சமாக மாசடைந்து அமிலத்தன்மை அடைந்துவருவதாகவும் கூறப்படுகிறது! சமீபத்தில் மற்றுமொறு அதிர்ச்சியான தகவலும் கசிய ஆரம்பித்துள்ளது! அதாவது வளர்ந்த நாடுகள் தங்களிடமுள்ள “ரசாயன ஆயுதக் கழிவுகளை” எவருக்கும் தெரியாமல் கடலில் கொட்டி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டது! இதற்க்கு இயற்கை ஆர்வலர்களிடமிருந்து எழுந்த கடும் எதிர்ப்பை தொடர்ந்து தற்போது சர்வதேச கடல்பகுதிகள் செயற்கைக்கோள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது! கடல்பரப்பையே இந்த அளவு மாசுபடுத்திக்கொண்டிருக்கும் போது மனிதன் நிலப்பரப்பை மட்டும் சும்மாவா வைத்திருப்பான்?

நிலப்பரப்பு தற்போது எந்த அளவு மாசுபடுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணமாக ஒரு சிறிய விஷயத்தை இங்கே பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்! மனிதர்களால் அத்தனை சுலபமாக அடைந்துவிடமுடியாத புவியின் உச்சபட்ச உயர்ந்த நிலப்பரப்பு எவரெஸ்ட் என்பது நாம் அனைவரும் அறிந்ததே! பல நூற்றாண்டுகளாக எட்டமுடியாமல் இருந்த இந்த புவியின் உயர்ந்த நிலப்பரப்பை உலகிலேயே முதன்முதலாக நியுசிலாந்து நாட்டை சேர்ந்த எட்மண்ட் ஹில்லாரி (Edmund Percival Hillary, 1919 – 2008) மற்றும் நேபாளத்தை சேர்ந்த டென்சிங் நோர்கே (Tenzing Norgay, 1914 – 1986) ஆகிய இருவரும் 1953-ஆம் ஆண்டு மே மாதம் 29-ஆம் தேதி எட்டிபிடித்தனர்! அன்றிலிருந்து இன்றுவரை உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த மலை ஏறும் நிபுணர்கள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை புரிந்துவருகிரார்கள்.! எவரெஸ்ட் சிகரத்தை தொடும் ஒவ்வொரு மலையேற்றக் குழுவும் பயணத்தின் போது அவர்களுடன் கொண்டுசெல்லும் உணவுடப்பாக்கள், பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள், தட்டுகள் ஆகியவற்றை உபயோகித்துவிட்டு மலையிலேயே வீசிவிட்டு திரும்புகின்றனர்!

மலையேற்றக்குழு மலையில் விட்டுவந்த குப்பைகள் அனைத்தையும் ஒன்று சேர்த்தால் புவியில் இன்னொரு எவரெஸ்ட் மலையையே உருவாக்கலாம் என்னும் அளவிற்கு இன்று குப்பைகளால் நிரம்பி வழிகிறது எவரெஸ்ட்! தொடர்ந்து இமயமலையின் சுற்றுப்புறசூழல் பாதிப்படைய ஆரம்பித்ததும் விழித்துக்கொண்ட நேபாள அரசு இதற்க்காக அபா செர்பா (Apa Sherpa, 1961 – Present) என்பவரது தலைமையில் குழு ஒன்றை அமைத்து எவரெஸ்ட் மலையில் தேங்கிக்கிடக்கும் குப்பையை அகற்றும் பணியை (Eco Everest Expedition) 2008 ஆம் முதல் துவக்கி செயல்படுத்திவருகிறது! கடந்த நான்கு ஆண்டுகளில் வெவ்வேறு மலையேற்ற குழுக்களின் வாயிலாக இதுவரை அப்புறப்படுத்தப்பட்ட குப்பைகளின் மொத்த எடை கிட்டத்தட்ட 20,000 கிலோ என்றால் சுற்றுப்புறசூழலை மாசுபடுத்திக்கொண்டிருப்பதில் மனிதன் இமாலய சாதனையை படைத்துக்கொண்டிருக்கிறான் என்பதற்கு இதைத்தவிர வேறு என்ன ஆதாரம் வேண்டும் நண்பர்களே!

இப்போதுவரை… சுற்றுப்புறசூழல் தொடர்ந்து மாசடைந்துகொண்டிருப்பதை நம்மால் கட்டுப்படுத்தமுடியவில்லை என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டியதுள்ளது! எதிர்காலத்தில் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக நகரங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் இதன் எதிரொலியாக காடுகளும் அதிகமாக அழிக்கப்படக்கூடும்! இதன் காரணமாக புவியின் வெப்பநிலை உயர்ந்து உயிர்க்கோளம் கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்படைந்து அதன் உட்சபட்ச வாழ்நாளிலிருந்து (2.5 பில்லியன் ஆண்டுகளிலிருந்து) தோராயமாக ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே முற்றிலும் அழிந்துபோய் விடலாம் என்று மிரட்டுகிறார்கள் சுற்றுப்புறசூழல் ஆய்வாளர்கள்! இதனை வலுவான ஆதாரங்கள் கொண்டு இவர்கள் நிரூபிக்கவில்லை என்றாலும் கூட நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகள் இதனை உண்மையென்றே உணர்த்துகின்றன! சுருக்கமாக ஒரு வரியில் சொன்னால் மனிதகுலம் தங்களை அறியாமல் ஒட்டு மொத்தமாக தற்கொலை முயற்ச்சியில் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை ஈடுபடுத்தி வருகிறது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை!

வரலாற்று சுவடுகள்