- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

சந்தேகங்களுக்கு மருத்துவரின் ஆலோசனைகள்!

எண்டோஸ்கோபி சிகிச்சையைப்பற்றிய கேள்விகளுக்கு கோவை என்.ஜி. மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் லேபராஸ்கோபி மற்றும் எண்டோஸ்கோபி சிகிச்சை நிபுணர் டாக்டர். மனோகரன் விளக்கம் அளிக்கிறார்.

பெப்டிக் அல்சர் என்பது என்ன? விவரிக்கவும்.

சாப்பிட்டு வயிறு காலியானவுடன் வலி ஏற்படும். இதற்கு பெப்டிக் அல்சர் என்று பெயர். இந்த பிரச்னைக்கு எண்டோஸ்கோபி பரிசோதனை செய்து பார்த்து உணவு முறையில் மாற்றம் செய்து மருந்து எடுத்துக்கொண்டால் சரியாகிவிடும்.

இரவில் குறைவாக சாப்பிடவேண்டும் என்று சொல்கிறார்கள் ஏன்?

இரவு நேரத்தில் குறைவாக உண்ண வேண்டும். ஏனென்றால் இரவில் உறங்குவதால் செரிமானம் ஏற்படுவது கடினம். காலையில் சக்கரவர்த்தி போல் உண்ண வேண்டும். மதியம் சராசரி மனிதனைப்போல் சாப்பிட வேண்டும். இரவில் பிச்சைக்காரனைப்போல் சாப்பிட வேண்டும் என்ற பழமொழிக்கேற்ப காலையில் நன்றாக சாப்பிட வேண்டும். மதியம் சராசரியாக சாப்பிட வேண்டும். இரவில் அரை வயிறு தான் சாப்பிட வேண்டும்.

நான் தினசரி வாக்கிங் செல்கிறேன். அப்பொழுது வயிறு வலி ஏற்படுகிறது எதனால்?

பொதுவாக வாக்கிங் செல்வதற்கும் வயிறு வலிக்கும் தொடர்பு இல்லை. உங்கள் வயிற்றில் ஏதாவது பிரச்னையாக இருக்கலாம். அல்லது வாக்கிங் செல்வதற்கு முன் வயிறு நிறைய நீங்கள் சாப்பிட்டிருக்கலாம். வாக்கிங் செல்வதற்கு முன் வயிறு நிறைய உண்ணக்கூடாது. இருந்தபோதிலும் வலி எதனால் என்பதை தெரிந்து கொள்ள உடனடியாக குடல்நோய் மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

என் குழந்தைக்கு பல் எல்லாம் சொத்தையாக உள்ளது. வயதுக்கு மீறிய உடல் பருமன் உள்ளது ஏன்?

சாக்லேட், கேக் போன்ற இனிப்பு வகைகளை குழந்தைகள் அளவாக உண்ண வேண்டும். அதிகமாக உட்கொள்ளும்போது பல் சொத்தையாக வாய்ப்பிருக்கிறது மற்றும் உடல் பருமன் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. வேதிப்பொருள் அதிகமாக கலந்த உணவுப்பொருட்களை குழந்தைகளுக்கு உண்ணக்கொடுப்பதை தவிர்க்கவும்.

எனது மனைவிக்கு அடிக்கடி அடி வயிறு வலிப்பதாக சொல்கிறார் ஏன்?

அடிவயிற்றில் குடல், சிறுநீரகம், சிறுநீர்ப்பை, அபன்டிக்ஸ் பெண்களுக்கு கர்ப்பபை போன்றவை உள்ளன. எனவே அடி வயிற்றில் வலி என்றால் எந்த உறுப்பு பாதிக்கப்பட்டது என்பதை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும். அதிலும் தெரியவில்லை என்றால் சி.டி. ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும்.

அபண்டிக்ஸ் ஆபரேசன் செய்த இடத்தில் வலி உள்ளது ஏன்?

எண்டோஸ்கோபி செய்து பார்க்க வேண்டும். ஆபரேசன் செய்த இடத்தில் புண் ஏதேனுமிருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

குழந்தைகளுக்கு பழம் கொடுக்கலாமா?

குழந்தைகளுக்கு பழம் உண்ணக்கொடுப்பது நல்லது. ஆனாலும் பழம் சுத்தமாகவும் அழுகிப்போகாமலும் இருக்க வேண்டும்.

குளிர்பானங்கள் சாப்பிடும் போது உடல் புல்லரிப்பது போன்று உள்ளது எதனால்?

பழரசம் சாப்பிடுவதால் எந்த பிரச்சினையும் இருக்காது. ஒரு வேளை ஐஸ் அதிகமாக சேர்த்து கொள்வதால் உடல் புல்லரிப்பது போன்றிருக்கும். ஐஸ் குறைப்பது நல்லது.

அசைவ உணவு தொடர்ந்து சாப்பிடுவது நல்லதா?

அசைவ உணவு ஒரு வேளைக்கு சாப்பிட்டால் அடுத்த வேளைக்கு வயிறை பட்டினிபோடுவது நல்லது. அல்லது மோர் போன்ற லேசான உணவை எடுத்துக்கொள்வது நல்லது.

நன்றி-தினகரன்