- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

கண்பார்வை குறையை வென்ற உறுதிமிக்க உள்ளம்!

உங்களைப்பற்றி…மலைபோல் எழுந்த மாற்றுத்திறனாளி

432_blind17 [1]என் சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர், விருது நகர் மாவட்டம். என் தந்தை பாலயானந்தம். தாய் சுந்தராம்பாள்.

என்னுடன் பிறந்தவர்கள் என்னோடு சேர்த்து எட்டு பேர். நான்தான் இளைய மகன்.

நான் இரண்டு மாதக் குழந்தையாக இருந்து போது, ஒரு கொடிய காய்ச்சல் என்னை தாக்கிய தாகவும், அதன் விளைவாக நான் கண்பார்வை இழந்ததாகவும் என் பெற்றோர் சொல்வார்கள்.

எனக்கு பார்வை கிடைக்க பெரிதும் முயற்சி செய்தனர். நானும் அலோபதி, ஹோமியோபதி மற்றும் சித்தா என பல மருத்துவ முறைகளைப் பின்பற்றியும் எந்தப்பயனும் இருக்க வில்லை.

உங்கள் இளமைக்காலம் மற்றும் கல்வி கற்கிற போது இருந்த தடைகளை எப்படித் தாண்டி வந்தீர்கள்?

என்னுடைய ஆரம்பக் கல்வியை என்னுடன் பிறந்தவர்கள் கற்றுக்கொடுத்தார்கள். பின்பு சென்னை பூந்தமல்லியில் பார்வையற்றவர்களுக் காக நடத்தப்படும் பள்ளியொன்றில் என் கல்வியைத் தொடர்ந்தேன். அப்போது நடைபெற்ற பத்தாம் வகுப்புத்தேர்வு முடிவுகளில் பள்ளியின் இரண்டாம் மாணவனாக தேர்வு பெற்றேன். என்னுடைய உயர்நிலைக்கல்வியை கோவை இராமகிருஷ்ணா பள்ளியில் பயின்றேன்.

இந்தப் பள்ளியின் சிறப்பே என்னை பார்வையுடைய மாணவர் களுடன் பயில அனுமதித்ததுதான். அங்குதான் எனக்கு மன ஊக்கம், தைரியம், தன்னம்பிக்கை என அனைத்தும் சாத்தியப் பட்டது. அன்று ஆசிரியராக இருந்த கந்தசாமி அண்ணா என்னை பெரிதும் உற்சாகப்படுத்தினார்.

பார்வையுடைய மாணவர்களுடன் படிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் படிப்பைத் தவிர வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் கற்றுக் கொண்டேன். இங்கு எனக்கு பாடங்கள் ப்ரெய்லி அல்லது கேசட் வடிவில் வழங்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து பாண்டிச்சேரி, டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரியில், இளநிலை சட்டம் படித்தேன். இங்கு படிக்கிற காலத்தில் என்னுடைய பாடக்குறிப்புகளை ப்ரெய்லி முறையிலும் பிறர் சொல்லச் சொல்லவும் குறிப்பெடுத்துக்கொள்வேன்.

நான் ப்ரெய்லி முறையை தேர்ந்தெடுத்து இருந்ததால், பிறர் சொல்லச் சொல்ல குறிப்பெடுப் பதில் பார்வையுடைய மாணவர்களைக் காட்டிலும் வேகமாக செயல்படமுடிந்தது.

அவர்கள் விட்டு விட்ட வாக்கியத்தை, சொல்லை என்னைக் கேட்டு எழுதிக்கொள்வார்கள். என்னுடைய சகோதரர்களும், உடன்பயின்ற மாணவர்களும் எனக்காக புத்தகங்களைப் படித்துக் காட்டுவார்கள். எனக்காக கேசட்டுகளில் பதிவு செய்து கொடுப்பார்கள். அது எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தது. என்னுடைய இளநிலைப் படிப்பில் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பாடத்தில் தங்கப்பதக்கம் வென்றேன். அதன்பிறகு, என்னுடைய முதுநிலை சட்டப் படிப்பை தொடர்ந்தேன். மெட்ராஸ் பல்கலைக் கழக அளவில் மூன்றாமிடம் பிடித்தேன்.

நீதிமன்ற வழக்குகளை எப்படி எதிர் கொள்கிறீர்கள்? சட்டத்துறையில் சாதனையாளராக இருக்கும் உங்களுக்கு அந்த வெற்றி எப்படி சாத்தியப்பட்டது?

வழக்கமாக இந்தத்துறையில் ஆரம்ப காலத்தில் ஒரு சீனியர் வழக்கறிஞரிடம் பயிற்சி பெற வேண்டும். ஆனால் என்னை ஜுனியராக ஏற்றுக்கொள்ள பலரும் தயங்கினார்கள். அதிலும் குறிப்பாக ஒருவர், என்னால் எப்படி வழக்குகள் நடத்த முடியும் என்று அச்சப்படுவதாகவும், என் திறமை குறித்து சந்தேகப்படுவதாகவும் கூறி என்னை ஜூனியராக ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.

ஆனால் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திரு. அருணாச்சலம் எந்தத் தயக்கமும் இன்றி என்னை ஜூனியராக ஏற்றுக்கொண்டார். அவருடைய உதவியிலும், மேற்பார்வையிலும் கிரிமினல் சட்டம் படித்தேன். அதேநேரம், கடலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் திரு.வேதநாயகம் எந்தச் சந்தேகமும், அச்சமும் இன்றி என்னை அவர் ஜூனியராக சேர்த்துக்கொண்டார்.

சட்டத்தின் பல கிளைகளை எனக்கு கற்றுக் கொடுத்தார். ஆரம்ப காலத்தில், வழக்கு தாக்கல் செய்வதற்குத் தேவையான குறிப்புகளை எனக்காக படித்துக் காட்டுவார். நான் அதை ப்ரெய்லி முறைப் படி குறிப்பெடுத்துக்கொள்வேன். பின்பு என் குறிப்புகளை தட்டச்சு செய்பவருக்கு படித்துக் காட்டி என் குறிப்புகளை தயார் செய்வேன். நான் அவருக்காக பல வழக்குகளை நடத்தி அவருடைய கட்சிக்காரர்களுக்கு சாதகமாக தீர்ப்புகளை கிடைக்கச் செய்திருக்கிறேன்.

இருந்தாலும் துவக்க காலத்தில், அவரிடம் வருகிற கட்சிக்காரர்கள், வழக்கை நான்தான் நடத்தப் போகிறேன் என்கிறபோது சிறிது தயக்கம் காட்டுவார்கள். இது குறித்து என் சீனியரிடம் கருத்தும் கேட்பார்கள்.

அதற்கு அவர், நான் வழக்கை நடத்தும் விதம் குறித்து விளக்கமாக அவர்களுக்குச் சொல்வார். இருந்தாலும், ஒரு வித மனக்குறை யோடுதான் அவர்கள் ஒப்புக் கொள்வார்கள். பின்பு தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக வழங்கப் பட்டபின் மனநிறைவுடன் சென்றவர்கள் பலர்.

நான் வழக்கை எவ்வாறு நடத்துகிறேன் என்று ஒரு கேள்வி வரும்!! எனக்கோர் உதவியாளர் உண்டு. அவர் எனக்காக கோப்பு களைப் படித்துக் காட்டுவார்.

வழக்கு வெற்றி பெற சாதகமான குறிப்புகளை அவர் படிப்பதன்மூலம் ப்ரெய்லி முறையில் குறித்துக்கொள்வேன். நான் தொகுத்துள்ள குறிப்புகளின் மூலம் நீதி மன்றத்தில் வாதிடுவேன்.

என் வெற்றிகளின் மூலம், கடலூர் தொழிற்சங்கங்களில் எனக்கென ஓர் அங்கீகாரம் கிடைத்தது. அவர்களுக்காக பல வழக்குகளில் பங்கு பெற்றிருக்கிறேன்.

நீங்கள் வெற்றி பெற்ற ஏதேனும் ஒரு வழக்கைப் பற்றிக் கூறுங்களேன்?

விதவைப்பெண் ஒருவர் தன் குழந்தையுடன் வந்திருந்தார். கணவன் இறந்து விட்டதால் அதன் மூலம் கிடைக்கவேண்டிய நிவாரணத் தொகை கேட்டு பல வழக்கறிஞர்களிடம் சென்றார். ஆனால் பலரும், அவர் விவாகரத்து பெற்ற பின்தான் கணவர் இறந்தார். எனவே, வழக்கில் வெற்றிபெறுவது கடினம் என அந்தப் பெண்ணின் வழக்கை ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்கள். ஆனால், விவாகரத்து பெற்றபின் 20 வருடங்கள் அந்தப்பெண் கணவருடன் சேர்ந்து வாழ்ந்தார் என்பதற்கான சாட்சியங்களைக் கண்டறிந்து அந்த வழக்கை வெற்றிகரமாக நடத்திக் கொடுத்தேன்.

உங்கள் வங்கித்தேர்வை எதிர்கொண்ட விதம்?

கோவையில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயாவின் மனிதவளத்துறை பிரிவு, பொறியியல் துறை மாணவர்களுக்கு நுகர்வோர் சட்டம் மற்றும் பல சட்டப் பிரிவுகள் குறித்து உரை நிகழ்த்த அழைப்பார்கள். அப்பொழுது என்னுடைய நலன்விரும்பிகள் என்னை வங்கிகளிலும், மாஜிஸ்ட்ரேட்களிலும் இருக்கும் ‘சட்டத்துறை அதிகாரி’ பணியிடத்திற்கு விண்ணப்பிக்குமாறு கூறினார்கள்.

ஆனால் என்னுடைய அனைத்து விண்ணப்பங்களும் எனக்கு கண்பார்வை இல்லை என்ற ஒரே காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டன. அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தேன். எழுத்துத்தேர்வில் தேவைக் கதிகமான மதிப்பெண்கள் பெற்றபொழுதும், நேர்முகத்தேர்வில் எனக்கு மதிப்பெண்கள் குறைக்கப்பட்டிருந்தன.

நேர்முகத்தேர்வில் நான் பங்கு கொண்ட விதத்தை நிரூபிப்பது கடினம் என பலரும் கூறினார்கள். அனைத்துத் தடைகளையும் தாண்டி இறுதியாக அலகாபாத் வங்கியில் ‘சட்ட அதிகாரி’ யாக பணி நியமனம் கிடைத்தது.

உங்களை மிகவும் பாதித்த சம்பவம் எது?

வங்கியில் பணியமர்த்தப்பட்டபோதும், நான் எப்படி பணிபுரிவேன் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எனக்கிருந்தது. தொடக்க காலத்தில் எனக்கென ஓர் உதவியாளர் இருந்தார். அவரை என் சொந்த செலவில் பணியமர்த்தி இருந்தேன். எனக்கான கோப்புகளையும் குறிப்பு களையும் படித்துக் காண்பிப்பார். நான் பெறுகிற சம்பளத்திற்கு இணையான சம்பளத்தை அவருக்கு கொடுக்க வேண்டியிருந்தது. அது என் பொருளாதாரச் சூழலுக்கு ஒத்துப்போகவில்லை. எனவே மாற்றுத் திறனாளிகளுக்கான கம்ப்யூட்டர் பயிற்சியில் சேர்ந்தேன்.

அங்கு ஒஅரந – (ஒர்க்ஷ அஸ்ரீஸ்ரீங்ள்ள் ஜ்ண்ற்ட் நர்ன்ய்க் ஹய்க் ள்ஸ்ரீழ்ங்ங்ய் ழ்ங்ஹக்ண்ய்ஞ் ள்ர்ச்ற்ஜ்ஹழ்ங்) மற்றும் கர்ஸ்வேயில் (ஓன்ழ்க்ஷ்ஜ்ங்ண்ப்) என்ற மென்பொருள் எனக்கு அறிமுகமானது. இந்த மென்பொருள் நமக்கு வரும் மின்னஞ்சல்களையும், குறுஞ்செய்திகளையும் மற்றும் கணினி வழி இருக்கும் அனைத்துக் கோப்புகளையும் படித்துக் காண்பித்துவிடும்.

இதன் மூலம் நான் சுயமாகவும் சுதந்திர மாகவும் இயங்கமுடியும். ஆனால் இதற்கு மிகவும் செலவாகும் என்பதால் இதை எனக்கு ஏற்பாடு செய்து கொடுக்க வங்கி முன் வரவில்லை. அந்த நேரங்களில் எல்லாம் நான் மிகவும் பாதிக்கப் பட்டேன். மீண்டும் வழக்கறிஞராய் வாதாடவே சென்று விடலாம். இந்தப் பதவி வேண்டாம் என்றெல்லாம் தோன்றியது. இருப்பினும் எனக்கு மேல் இருந்த அதிகாரிகள் பலருக்கு மனம் தளராமல் வேண்டுதல்களை அனுப்பிக் கொண்டே இருந்தேன். நான் வேலையில் சேர்ந்த மூன்றாண்டுகளுக்குப்பின், அப்பொழுது சென்னை நகரின் தலைமை அதிகாரியாய் இருந்த கே.பி. ஜெயின் அவர்கள் எனக்கு கணினியும் தேவையான மென்பொருளையும் வழங்கினார். அன்று முதல் என் கடமைகளை நானே தனித்துச் செய்கிறேன்.

உங்களை உற்சாகப்படுத்திய சம்பவம் எது?

என் செயல்களை யார் உதவியுமின்றி நானே தனித்து செய்யத் துவங்கியபின், எனக்கு மேலாளராக பதவி உயர்வு கிடைத்தது.

இப்பொழுது சென்னை மண்டலத்தின் கீழ் இயங்கும் புதுச்சேரி உட்பட மொத்தம் 50 கிளை வங்கிகளின் சட்ட ரீதியான பிரச்சனைகளை நிர்வகித்து வருகிறேன்.

என் மேற்பார்வையின் கீழ் நிலுவையில் இருந்த 60% தொகை திரும்பப் பெறப்பட்டது. இந்த அங்கீகாரம் என்னை இன்னும் நம்பிக்கையோடு செயல்பட உற்சாகப்படுத்தியது.

நீங்கள் இத்தனை உத்வேகத்தோடு செயல் பட உங்களை உந்திய புத்தகங்கள், மனிதர்கள் பற்றிச் சொல்லுங்களேன்?

சத்திய சோதனை  என்ற காந்தியின் சுயசரிதை என்னை மிகவும் ஊக்கத்துடன் செயல்படவைத்தது. இதில் அவர் தொட்ட உயரங்கள், வீழ்ந்த இடங்கள், அவர் செய்த உச்சகட்ட தவறு, நியாயம் என அனைத்தையும் எந்த ஒளிவுமறைவும் இன்றி பேசுவார். அப்துல் கலாமின் ‘அக்னிச் சிறகுகள்’ புத்தகம் அவர் செய்த சாதனைகளைப் பற்றி மட்டும் பேசாமல் அந்த சாதனைகள் அவருக்கு எப்படி சாத்தியப்பட்டது என்பது குறித்தும் பேசுவார். இந்த இரண்டு புத்தகங்களையும் அனைவரும் மிகத் தீவிரமாகப் படிக்க வேண்டும் என்பது என் விருப்பம்.

என்னுடைய முன்னுதாரணமாக நான் நினைப்பது திரு. சதன் குப்தா அவர்களைத் தான். இந்திய நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்ட பார்வையற்ற முதல் எம்.பி..! மேற்கு வங்க அரசின் தலைமை வழக்குரைஞர்… இன்னொருவர் என் வாழ்க்கையில் உண்டு. அவரைப் பற்றி சொல்லாது போனால் இந்த நேர்காணலும் என் வாழ்வும் முழுமையடையாது. அவர் என் மனைவி தமிழ்ச் செல்வி. இவர் என் உறவினரோ, என்னோடு பணி புரிந்தவரோ அல்லது எனக்கு முன்பே அறிமுக மானவரோ அல்ல.

என் நண்பர் ஜோதிலிங்கம் அவர்களின் உறவினர். என் நண்பர் என் திருமணத்தில் எனக்கிருந்த நடைமுறை சிக்கலைப் பற்றி அவரிடம் கூறியபொழுது, எந்தவிதத் தயக்கமும் இன்றி என்னை திருமணம் செய்து கொள்ள தானே முன்வந்தார். வங்கிப் பணியில் சேர்ந்தபொழுது ஓர் உதவியாளர் வைத்துக் கொள்வதில் எனக்கிருந்த நடைமுறை நெருக்கடிகளின்போது என் மனைவி வங்கிக்கே வந்து எனக்காக உதவி செய்வார்.

மொத்தத்தில் என் மனைவிதான் என் கண்கள். அவர் மூலமாகத்தான் இந்த உலகை நான் பார்க்கிறேன்.

மாற்றுத்திறனாளிகளுக்கு நீங்கள் சொல்ல நினைப்பது?

நம்மிடம் இருக்கும் திறன்களை எண்ண வேண்டும். நம்மிடம் இல்லாதவற்றைப் பற்றி நாம் கவலைப்படத் தேவை இல்லை. நம்மோடு படைக்கப்பட்ட திறமைகளைக் கண்டறிந்து திறம் பட செயல்படுத்தி உயரங்கள் தொட வேண்டும். நமக்கான தடைகள் எத்தனையோ உண்டு. இருப்பினும் வெறுப்பு கொள்ளத் தேவையில்லை. கவிஞர் வைரமுத்து அவர்கள் சொல்வார், ”தலைகீழாய் பிடித்தாலும் மேல் நோக்கி எரியும் தீ. தலை கீழே ஆனாலும் மேல் நோக்கி உயரணும் நீ” என்று. எந்தச் சூழலிலும் பரிதாபங்களை ஏற்காமல் நம்பிக்கை ததும்பச் செயல்படுவோம்.

இளைஞர்களுக்கு உங்கள் கருத்து…

நம்முடைய வாழ்க்கை முழுமைக்கும் அடித்தளம் அமைத்துக்கொடுப்பது இளமைக் காலம்தான். நாம் இளமையில் கற்கிற கல்வி, ஈட்டுகிற பொருள், தொடர்பு கொள்கிற மனிதர்கள்தான் நம் மொத்த வாழ்விலும் வழித் துணை. சிறிய வெற்றிகளுக்கு மகிழ்வதும், சிறிய தோல்விகளுக்கு துவள்வதும் இளமையில் தவிர்க்கப்படவேண்டும்.

எட்வின் சி.பிலிஸ் கூறுவார், ”தோல்வி இல்லாத நிலை மட்டும் வெற்றியல்ல. உச்ச கட்ட இலக்கை அடைவதே வெற்றி. போரில் ஜெயிக்காவிட்டாலும் பரவாயில்லை. யுத்தத்தில் வெற்றி பெறவேண்டும்” என்று. இளைஞர்கள் தாம் தேர்வு செய்கிற எந்தத் துறையாய் இருந்தாலும் தனித்து ஜொலிக்கிறவர்களாக விளங்கவேண்டும். குட்டைகளைப் போல அடிப்படை நிலைகளிலேயே தேங்கி விடாமல் அனுபவங்கள் மூலமாய் மேலும் கற்று, காட்டாறாய் பாய்ந்தோட வேண்டும்.

உங்கள் வருங்காலக் கனவு?

ஏதேனும் ஒரு வங்கிக்கு ‘நிர்வாக இயக்குனராக’ பொறுப்பேற்க வேண்டும். சட்டப் பிரிவுகளில் வழக்கறிஞர்கள், நீதிபதிகள், சட்ட வல்லுநர்களுக்கு உதவுகின்ற தரம்மிக்க புத்தகம் ஒன்றையும், பாமர ஜனங்களுக்கு உதவுகின்ற சட்டப்புத்தகம் ஒன்றையும் எழுதவேண்டும். இவை தான் என் கனவுகள். அதற்காக சட்டத்துறையில் ஆய்வு மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளேன்.