- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

இந்திய அறிவியலின் தந்தை!

c-v-raman [1]அறிவியல்கூடங்கள் நிறைய நிதியுடனும் நவீனச் சாதனங்களுடனும் இயங்கினாலும், இருப்பதிலேயே மிகவும் விலையுர்ந்ததும் மற்றும் துல்லியமானதும் இன்றும் மனித மூளை தான்.

யாரும் சர்.சி.வி.ராமனைவிட அதனைச் சிறப்பாக உணர்த்திவிட முடியாது – இந்தியாவில் செய்த நடந்த அறிவியல் பணிகளுக்காக ஆராய்ச்சிகளுக்காக நோபல் பரிசு வாங்கிய ஒரே இந்தியர். அவர் பயன்படுத்திய அடிப்படை உபகரணங்களின் விலை வெறும் ரூ.200 தான்.

இந்தக் குறிப்பிடத்தக்க விஞ்ஞானி, தமிழகத்தின் திருச்சி அருகே நவம்பர் 7, 1888ல் பிறந்தார். அவருடைய தந்தை இயற்பியல் மற்றும் கணிதத்தின் விரிவுரையாளராக இருந்தார். ராமன் பலதரப்பட்ட பாடங்களைப் புத்தகங்களின் மூலம் இளம்வயதிலேயே கற்றார். அவருடைய தந்தை அவருக்கு இசையை ரசிக்கும் ஆர்வத்தைத் தூண்டினார் – பின்னர் இதன் மீதே நிறைய ஆராய்ச்சிகளைச் செய்தார்.

ராமன் தன்னுடைய ஆரம்பக் கல்வியினை விசாகப்பட்டினத்தில் பயின்றார். அந்தக் காலத்தில் மெட்ரிகுலேஷன் முடிக்க எந்த வயது வரம்பும் இல்லை, ராமன் தன் 11 வயதில் அதனை முடித்தார். ராமன் சென்னை மாகாணக் கல்லூரியில் 1902ல் நுழைந்து 1904ல் BA பட்டத்தை முதல் இடத்திலும் இயற்பியலில் தங்கப் பதக்கத்துடனும் வென்றார். 1907ல் மீண்டும் MAவை அதிக மதிபெண்களுடன் முடித்தார். ராமன் சிறிய உருவம் எண்ணில் அடங்காக் கேள்விகளை கேட்டது. அவருடைய ஆசிரியர்கள் அடிக்கடி “நீ இந்த வகுப்பு மாணவர் தானா?” என்ற கேள்வியை எழுப்புவார்கள். கல்லூரி முடித்ததும் அவர் மேற்படிப்பிற்கு வெளிநாடு செல்ல அறிவுறுத்தப்பட்டார். ஆனால் ராமனின் மெலிந்த உருவம், சென்னையில் இருந்த பொது மருத்துவரை ஈர்க்கவில்லை, இங்கிலாந்தின் கடுமையான காலநிலைக்கு ராமன் தாங்கமாட்டார் என்றார். இந்தியாவிலேயே தங்க வைத்தமைக்கு ராமன் அவருக்கு நன்றி கூறினார்.

ராமன் தன் MA இயற்பியலுக்குப் பிறகு என்ன செய்தார்? அந்த நாட்களில் அறிவியலுக்கு வெகு சில இடங்களே இருந்தது, எந்த ஒரு வழியும் இல்லாமல் அவர் கல்கத்தா நிதி துறையில் அரசு ஊழியராகச் சேர்ந்தார்.

நிதித்துறையில் சேர்ந்தாலும் அவருடைய இயற்பியலுக்கான வேட்கை குறையவில்லை. அவர் சோதனைகளைத் தன் இல்லத்தில் ஏற்படுத்தியிருந்த ஆய்வகத்தில் செய்தார். இப்படியாகக் கதை போகும் போது, ஒரு நாள் இல்லம் திரும்பும் சமயம் ஒரு பெயர் பலகையைப் பவ்பசாரில் பார்க்கின்றார், அது இந்திய அறிவியல் வளர்ச்சி அசோசியேசன் (IACS) பெயர் கொண்டிருந்தது. அவர் சென்றுகொண்டிருந்த டிராமில் இருந்து குதித்து IACSசிற்கு ஓடினார், அங்கே அவரை அமிர்த்லால் சிர்கார் வரவேற்றார். அமிர்த்லாலுடைய தந்தை மஹேந்திரலால் சிர்கார் இந்த நிறுவனத்தை இந்தியாவில் அறிவியலை ஊக்குவிப்பதற்காக 1876ல் நிறுவினார். ராமன் இந்த ஆய்வகத்தில் தன் அலுலகம் முடித்ததும் வந்து ஆய்வுகளைச் செய்தார். விரைவில் அவர் அனைவரையும் கவரும்படியான அறிவியல் கட்டுரைகளை வெளியிட்டார்.

1917ல், சர் அசுதோஷ் முகர்ஜி, துணை வேந்தர் – கல்கத்தா பல்கலைக்கழகம், ராமனுக்குத் தரக்நாத் பாலித் தலைவர் பதவியை இயற்பியல் துறையில் வழங்கினார். ராமன் சந்தோஷத்தில் துள்ளினார். இருப்புநிலை தாள்களுக்கு ஒரு முழுக்கு போட்டுவிட்டுத் தான் செல்ல ஆசைப்பட்ட துறைக்கு நகர்ந்தார்.

1921ல், ஒரு வெளிநாட்டு மாநாட்டிற்குக் கடலில் பயணித்தார். இந்தக் கடல் பயணம் இயற்பியலில் மிகமுக்கியமான பல விளைவுகளைக் கொடுத்தது. அவர் கடலின் நீலநிறத்தில் ஈர்க்கப்பட்டார். ஏன் கடல் நீல நிறத்தில் இருக்கின்றது? கடலின் நீல நிறம் வானைப் பிரதிபலிக்கின்றதா? இதற்கு வேறு காரணங்கள் இருக்கின்றதா? ராமன் தண்ணீருக்கும் சூரியஒளிக்கும் இடையே ஏதோ நடக்கின்றது என உள்ளூர உணர்ந்தார். தன் சக பயணிகள் சீட்டு கட்டுகளும் பிங்கோவும் விளையாடியபோது ராமன் ஒரு பாக்கெட் நிறமாலையைக் கொண்டு பரிசோதனைகளை நடத்திக்கொண்டிருந்தார். பல்வேறு ஊடகத்தின் மூலம் ஒளிச்சிதறல்களை ஒரு தாளின் மீது செலுத்தினார்.

இந்தியா திரும்பியதும் அவர் இந்த விஷயத்தில் தீவிர ஆராய்ச்சிகளைச் செய்தார். அவர் ஒளிவிட்டங்களைப் பல்வேறு திரவங்களில் செலுத்தி அதன் விளைவுகளைப் படித்தார். கடைசியாக 1928, ஓர் வண்ணமுடைய (ஒற்றை நிற) ஒளியைத் திரவத்தில் செலுத்தும்போது, ஒளிக்கூறு மற்றும் திரவ மூலக்கூறுகள் இணைந்து ஒளியினைச் சிதறடிக்கின்றன என்பதை நிறுவினார். வெளிவரும் ஒளி செலுத்தியதைவிட வேறு நிறத்தில் வந்தது. இது உயர் அளவு ஆற்றல் மற்றும் குறைந்த அளவு ஆற்றலுக்குச் செலுத்திய ஒளிக்கு ஏற்ப மாறுபட்டது. இது தான் ராமன் விளைவு, பின்னர் இதுவே நோபல் பரிசினைப் பெற்றுத்தந்தது. இந்தக் கண்டுபிடிப்பு மேலும் பல ஆராய்ச்சிகளுக்கு உலகெங்கும் வழிவகுத்தது. இது பொருட்களின் அமைப்புகளைப் பற்றியஆய்வு செய்ய சிறந்த கருவியாக பயன்பட்டது.

அங்கீகாரங்கள் வெகு தொலைவில் இருக்கவில்லை. சர் எர்னஸ்ட் ரூத்தர்போர்டு ராமன் விளைவினை ராயல் சொசைட்டி மற்றும் பிரிட்டிஷ் அரசிடம் அறிவித்து, அவருக்கு வீரத்திருமகன் பட்டம் கொடுக்க ஏற்பாடு செய்தார். 10, டிசம்பர் 1930ல் அவருக்கு உயரிய விருதான நோபல் பரிசு கிடைத்தது. அறிவியலுக்காக நோபல் பரிசினைப் பெறும் முதல் ஆசிரியர் மற்றும் வெள்ளை அல்லாத மனிதர் இவர் தான். அவருக்கு முன்னர் ரவீந்திர நாத் தாகூர் இலக்கியத்திற்கான நோபல் பெற்றார், ராமனின் மருமகன் சுப்பிரமணியன் சந்திரசேகர் பின்னர் 1983ல் நோபல் பரிசினைப் பெற்றார்.

பல நூற்றாண்டுகளாக வெளிநாட்டவரின் ஆட்சியில் இருந்ததால், இந்தச் சர்வதேச அங்கீகாரம் இந்திய அறிவியல் சமூகத்தின் சுய மதிப்பினைப் பெரிதாக உயர்த்தியது. ஒரு இந்திய விஞ்ஞானிக்கு, முழுக்க முழுக்க இந்தியாவில் வேலை செய்து, இந்த உயரியக் கெளரவத்தை பெற்றது நிச்சயம் பாரட்டத்தக்கது. ஜூலை 1893ல், ராமன், டாடா அறிவியல் கழகத்தின் முதல் இந்திய இயக்குனராக நியமிக்கப்பட்டார். இது பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தின் (IISc) முன்னோடி. அடுத்த 15 வருடங்கள் ராமன் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்தார், கடுமையான உழைப்பினால் அங்கிருந்த இயற்பியல் துறையினைச் சர்வதேச அங்கீகாரம் பெறும் வரை உயர்த்தினார். அவர் உலகத் தரம் வாய்ந்த விஞ்ஞானிகளை உருவாக்கி, பயிற்சிகொடுத்து ஊக்கமும் கொடுத்தார். அவர் X- கதிர் விளிம்பு விலகலில், அவருக்கு விருப்பமான திரவம் மற்றும் பொருட்களுக்கான (திரவம் மற்றும் திடம்) இடைவிளைவுகள் பற்றிய ஆராய்ச்சிகளைத் துவங்கி வைத்தார்.

ராமன் அறிவியலை மக்களிடம் கொண்டுசெல்வதில் ஆர்வம் காட்டினார். திறமையுள்ள பேச்சாளராகப் பல உரைகளை விரிவாக நிகழ்த்தினார். அவர் அறிவியல் மூலம் ஆனந்தம் கொள்ளவும், சமூகத்தை உயர்த்தவும் அழுத்தம் கொடுத்தார். நகைச்சுவையாகப் பேசுயதால், இவருடைய உரைகளை மக்கள் விரும்பினர். அவருடைய பிரபல அறிவியல் உரைகளின் சமயத்தில் மக்கள் வாயடைத்து கேட்பார்களாம். அவருடைய உரைகளுடன் செயல்முறை விளக்கங்களும் நிகழும். அவரது ‘வானம் ஏன் நீலநிறத்தில் இருக்கின்றது?’ என்ற உரை அறிவியல் உணர்வினையும் வழிமுறையையும் விளக்கியது. அறிவியலைக் கற்பது என்பது சூத்திரங்களையும் தரவுகளையும் கற்பது அல்ல, படிப்படியாகக் கேள்விக் கேட்டு அறிந்துகொள்வதே. இந்தச் சீரான முறையினால், எப்படி வேலைச் செய்கின்றது என விளக்கப்படும்.

அவர் இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் (INSA) நிறுவன உறுப்பினர். ராமன் இசைக்கருவிகளின் ஒலியியல் பணியாற்றினார். அவர் திசைவேகங்களின் மேற்பொருந்துதல் அடிப்படையில், வளைந்த சரங்களின் குறுக்குநிலை அதிர்வுக் கோட்பாட்டிற்கு வழிவகுத்தார். இவர் தான் முதல் முதலாக இந்திய மேளவாத்திங்களான தபலா மற்றும் மிருதங்கத்தில் உள்ளச் சீரிசையைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர்.

திருவாங்கூர் இரசாயன மற்றும் உற்பத்திக் கம்பெனியை 1943ல் துவங்கினார். 1948ல் அவருடைய ஓய்விற்கு முன்னர், சொந்தமாக ஒர் ஆராய்ச்சி நிறுவனத்தைத் துவங்கினார் – ’ராமன் ஆராய்ச்சி நிறுவனம் பெங்களூர்’. இந்த நிறுவனம் முழுக்க முழுக்கத் தனிநபர்க் கொடையினால் இயங்கியது. அவருடைய ஆராய்ச்சிகளை 1970 வரை தொடர்ந்தார். அக்டோபர் 2, 1970ல் மகாத்மா காந்தி நினைவு உரையினை ராமன் நிறுவனத்தில் நிகழ்த்தினார். உடல்நிலைக் குன்றி அதே வருடம் 1970, நவம்பர் 21-இல், தனது 82-வது வயதில் மறைந்தார். அவர் “இந்திய விஞ்ஞானத்தின் தந்தை’ என்று போற்றப்படுகிறார். “ராமன் விளைவை’ அவர் கண்டறிந்த 1928, பிப்ரவரி 28 தினத்தை கௌரவிக்கும் விதமாக, அந்நாளை தேசிய அறிவியல் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம்.

இந்தியா பெற்றெடுத்த சிறந்த மகன்களின் ஒருவர் சர்.சி.வி.ராமன் என்பதில் ஐயமே வேண்டாம். அவரின் 125வது பிறந்தநாளான இன்று அவரை நினைவுகூர்வதோடு மட்டுமல்லாமல் அறிவியல் என்பது ஆக்கதிற்கானது, அதன் கூர்மை வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படவேண்டும் என்பதையும் நினைவு கூர்வோம்
– விழியன்