- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

வாக்கினில் இனிமை வேண்டும்

சிந்தனை செய் நண்பனே…

ஒருவரது தவறை உணர்த்த வேண்டும் என்றால், அவரது மனதைப் புண்படுத்தாமல் உணர்த்த வேண்டும். இல்லை என்றால் அது எதிர் விளைவுகளை உண்டாக்கும். இதனை எப்படி கையாள்வது என்று பார்ப்போம்.

பிருத்வி ஒரு கல்லூரி பேராசிரியர் மாணவர்களைத் திருத்தி, நல்வழிப்படுத்தி அவர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதை லட்சியமாகக் கொண்டவர். ஒரு மாணவன் தவறு செய்தால், அவன் செய்த தவறைச் சுட்டிக்காட்டி விமர்சித்து, அதனை திருத்த முயற்சி செய்வார்.

ஒருநாள், அவருடைய வகுப்பில் படிக்கும் ஒரு மாணவன், பிருத்வி வைத்த வகுப்புத் தேர்வில் தோல்வி அடைந்துவிடுகிறான். அவனைத் தன்னைச் சந்திக்குமாறு, ஆசிரியர்கள் முன்னிலையில் திட்டித்தீர்க்கிறார். இப்படி இருந்தால், அந்த மாணவன் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது என்று கூறுகிறார். இதுதான் அவனைத் திருத்த சிறந்த வழி என்று நினைக்கிறார் பேராசிரியர் பிருத்வி.

மாணவர்கள் அனைவரும், அவரை அணுகுவதையே விட்டுவிடுகிறார்கள். அவர் மிகவும் கடுமையாகப் பேசுவதாக எண்ணுகிறார்கள்.

மாணவர்கள், தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆசைப்படும் பிருத்வி, தனது சக ஆசிரிய நண்பர் ஒருவரிடம் கேட்கிறார். அதற்கு அந்த நண்பர், மாணவர்கள் பிருத்வியைக் கண்டாலே பயப்படுகிறார்கள். கடுமையாக எல்லோர் முன்னிலையிலும் விமர்சிப்பவர் என்று எண்ணுகிறார்கள் என்று கூறுகிறார். இதைக்கேட்ட பிருத்வி, அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைகிறார். மாணவர்களை நல்வழிப்படுத்த, தான் செய்த முயற்சியை, மாணவர்கள் தவறாகப் புரிந்து கொண்டதை நினைத்து வேதனை அடைகிறார்.

அவர் குழப்பமாக இருக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம், தனது நெருங்கிய நண்பர் சூர்யாவைச் சந்தித்து ஆலோசிப்பது உண்டு. அதேபோல் இந்த முறையும் சூர்யாவைச் சந்தித்து, இதனைப் பற்றிக் கூறுகிறார். சூர்யா, விமான ஓட்டுநராகப் பணிபுரிபவர்.

ஒருவரது தவறை உணர்த்த, அவரைக் காயப்படுத்துவது நல்லதல்ல. உணர்வுகளைப் புண்படுத்தாமல் எப்படி கூறவேண்டும் என்பதை அவருடைய விமான ஓட்டுநர் அனுபவத்தை வைத்து விளக்குகிறார்.

பிறரைப் புண்படுத்தாமல், தவறைச் சுட்டிக்காட்டுவது, ஒரு கலை. ஒருவர் செய்யும் தவறினைத் திருத்த முயற்சி செய்ய வேண்டுமே தவிர, அவரை தாழ்த்தக்கூடாது. அவரைப் புண்படுத்தாமல், செய்த தவறை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்று கூறுகிறார் சூர்யா. இதற்கு நல்ல உதாரணம், விமானத்தை தரை இறக்கும் விமானியை, எவ்வாறு விமான தளத்தில் இருக்கும் வாட்ச்டவர் விமர்சிக்கிறது என்பதுதான்.

வாட்ச்டவர், விமானம் சிறப்பாக செயல்படுவதற்கு, விமானிக்கு தக்க தகவல்களை சரியான நேரத்தில் பரிமாறிக் கொண்டிருக்கும். தவறு எதுவாக இருந்தாலும் அது விமானிக்குச் சுட்டிக்காட்டப்படும். வேகமாக வந்தாலோ, தரை இறக்கும் நிலை சரியில்லை என்றாலோ, மிகவும் தாழ்வாக வந்தாலோ, இப்படி எதுவாக இருந்தாலும் சுட்டிக்காட்டப்படும். இப்படி எதைக் கூறினாலும் எந்த விமானியும் அதனைத் தவறாக எடுத்துக்கொள்வதில்லை. ‘ஏன் எப்பொழுதும் குற்றம் கண்டுபிடிக்கிறார்கள்? ஏதாவது நன்றாக இருக்கிறது என்று கூறக்கூடாதா?’ என்றெல்லாம் எந்த விமானியும் கேட்பது இல்லை.

இந்த இடத்தில் நாம் எதை மனதில் கொள்ள வேண்டும் என்றால், விமானியும், பயணிகளும் தங்களுடைய இடத்துக்கு பத்திரமாக செல்லவேண்டும் என்ற நோக்கத்துடன் தான் வாட்ச்டவர் நபர் விமானியின் தவறை சுட்டிக்காட்டுகிறார். எந்த வாட்ச்டவர் நபரும் விமானியை விமர்சிப்பதில்லை. அவருடைய செயலைத்தான் விமர்சிக்கிறார். அதேபோல், பெரிய ஒலி பெருக்கியில் கூறாமல், விமானிக்கு மட்டுமே கேட்கும் வண்ணம், காதில் பொருத்தும் கருவி மூலம் அவருக்குக் கூறுகிறார். விமானியிடம், “நீங்கள் இன்னும் இரண்டு நிமிடத்தில் தரையை தொட்டுவிடுவீர்கள்” என்று கூறினால், ‘மிகவும் தாழ்வாக வருகிறீர்கள்’ என்று அர்த்தம். இதனைக் கூறியதற்காக, விமானி, அந்த வாட்ச்டவர் நபரின் மீது கோபம் கொள்ளப்போவது இல்லை. அதனை நல்ல முறையில் எடுத்துக் கொண்டு, தன்னைத் திருத்திக்கொள்வார்.

இவை அனைத்தையும் விளக்கிக் கூறிய பின்னர், பிருத்விக்கு தான் செய்த தவறு புரிந்தது. மாணவர்களின் மனதைப் புண்படுத்தாமல் எப்படி நல்வழிப்படுத்துவது என்று ஆராய்ந்து செயல்படப் போவதாக சூர்யாவிடம் கூறினார் பிருத்வி.

சில நாட்களுக்குப்பிறகு, பிருத்வியுடைய துறையில், அவர் வைத்த வகுப்புத் தேர்வில், ஒரு மாணவன் தோல்வி அடைந்து விடுகிறான். இந்த முறை, அந்த மாணவனை ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்று, மனதைப் புண்படுத்தாமல், ஏன் அவன் அந்தப்பாடத்தில் தோல்வி அடைந்தான் என்று கேட்டு அறிகிறார். அவனுக்கு தினமும் மாலையில் ஒரு மணிநேரம் சிறப்பு வகுப்பு எடுப்பதாகக் கூறுகிறார். மிகவும் மகிழ்ச்சி அடைந்த மாணவன், பிருத்விக்கு மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறான்.

ஒருவரை நல்வழிப்படுத்த நினைத்து விமர்சிக்கும்போது, அந்த விமர்சனம், அவரை முன்னேற தூண்டுவதாக இருக்க வேண்டும். தவிர, அந்த நபரைக் காயப்படுத்துவதாக இருக்கக்கூடாது. ஒரு மனிதனை விமர்சிக்காமல், அவனுடைய செயலினை விமர்சிக்க வேண்டும்.

அடுத்த முறை யாரையாவது அவருடைய செயலைப்பற்றி விமர்சிக்கும்போது, விமானிகள் எப்படி கையாள்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

317 [1]சொல்லில் உறுதி வேண்டும்!
வாக்கினில் இனிமை வேண்டும்!
அனைவரும் நன்மையடைய வேண்டும்!
நலம்பெற வாழ்ந்திட வேண்டும்!

நன்றி ரஜினிகாந்த் கே   – நமது நம்பிக்கை