Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,864 முறை படிக்கப்பட்டுள்ளது!

30 வகை சேமியா உணவுகள்! 2/2

         கீரை சேமியா கட்லெட்

p117   தேவையானவை: சேமியா – 1 கப், கீரை (நறுக்கியது ) – 1 கப், உருளைக்கிழங்கு – 2, பிரெட் – 2 ஸ்லைஸ், மைதா – 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது – ஒன்றரை டீஸ்பூன், மல்லித்தழை – சிறிது, எலுமிச்சம்பழச் சாறு – சிறிதளவு, உப்பு – தேவைக்கு, மைதா – அரை கப், பிரெட் தூள் – தேவைக்கு ஏற்ப, எண்ணெய் – தேவைக்கு.

செய்முறை: கீரையை நன்கு அலசிப் பிழிந்துகொள்ளுங்கள். உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்துக்கொள்ளுங்கள். சேமியாவை கொதிக்கும் நீரில் வேக வைத்து வடித்துக்கொள்ளுங்கள். மைதா, பிரெட் தூள், எண்ணெய் நீங்கலாக மற்றவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள். தேவையான வடிவங்களில் கட்லெட்டுகளாக செய்து கொள்ளுங்கள். மைதாவை தோசை மாவு பதத்தில் கரைத்து, அதில் கட்லெட்டுகளை ஒவ்வொன்றாக நனைத்து எடுத்து, பிரெட் தூளில் புரட்டி காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள். சூப்பர் சுவையுடன் இருக்கும் இந்த கீரை சேமியா கட்லெட்.

சேமியா மஞ்சூரியன் பால்ஸ்

p118தேவையானவை: சேமியா – 1 கப், பச்சை மிளகாய் – 2, இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 5 பல், பெரிய வெங்காயம் – 1, கார்ன்ஃப்ளார் – 2 டேபிள்ஸ்பூன், மைதா – 2 டேபிள்ஸ்பூன், சோயா சாஸ் – 1 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, எண்ணெய் – தேவைக்கு, ஆரஞ்சு ரெட் கலர் – கால் டீஸ்பூன்.

செய்முறை: சேமியாவை கொதிக்கும் நீரில் போட்டு, வெந்ததும் வடித்து வைத்துக்கொள்ளுங்கள். பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெய் நீங்கலாக மற்றவற்றை ஒன்றாக சேர்த்து, தேவையான தண்ணீர் தெளித்து நன்கு கெட்டியாக பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள். வித்தியாசமான ருசியில் மஞ்சூரியன் பால்ஸ் தயார்.

லெமன் சேமியா

p119தேவையானவை: சேமியா – 1 கப், எலுமிச்சம்பழச் சாறு – 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 1, இஞ்சி – 1, பூண்டு, கறிவேப்பிலை – சிறிது, பெருங்காயம் – கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவைக்கு.

தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன், எண்ணெய் – ஒன்றரை டேபிள்ஸ்பூன்.

செய்முறை: சேமியாவை கொதிக்கும் நீரில் வேக வைத்து வடியுங்கள். பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காய வைத்து தாளிக்கும் பொருட்களை சேருங்கள். அவை பொன்னிறமானவுடன் இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள்தூள், பெருங்காயம் சேர்த்து கிளறி சேமியாவில் சேருங்கள். அத்துடன் எலுமிச்சம்பழச் சாறு, உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.

சேமியா சீஸ் கிரிஸ்பீஸ்

p120தேவையானவை: சேமியா – 1 கப், பனீர் – 200 கிராம், சீஸ் – 3 கட்டி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1 டேபிள்ஸ்பூன், மிளகுதூள் – 1 டீஸ்பூன், பூண்டு – 2 டீஸ்பூன், மைதா – அரை கப், கார்ன்ஃப்ளார் – கால் கப், பிரெட் தூள் – தேவையானது, எண்ணெய் – வறுக்க, உப்பு – தேவைக்கு.

செய்முறை: சேமியாவை 6 கப் கொதிக்கும் தண்ணீரில் நன்கு வேக விட்டு வடியுங்கள். சேமியாவுடன் துருவிய பனீர், சீஸ், பச்சை மிளகாய், மிளகுதூள், பூண்டு, உப்பு, கார்ன்ஃப்ளார் சேர்த்து நன்கு பிசையுங்கள். இந்தக் கலவையிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து, வேண்டிய வடிவத்தில் செய்யுங்கள். மைதாவுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து கொள்ளுங்கள். சேமியா கிரிஸ்பீஸை அதில் நனைத்து, பிரெட் தூளில் புரட்டி காயும் எண்ணெயில் வறுத்தெடுங்கள். சூடாக பரிமாறுங்கள். குழந்தைகளின் ஃபேவரிட் ஆகிவிடும் இந்த கிரிஸ்பீஸ்.

சேமியா பக்கோடா

p121தேவையானவை: சேமியா – அரை கப், கடலைமாவு – 1 கப், பெரிய வெங்காயம் – 2, இஞ்சி – 1 துண்டு, பச்சை மிளகாய் – 5, சோம்பு – 1 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, உப்பு – தேவைக்கு, எண்ணெய் – தேவைக்கு.

செய்முறை: 2 கப் தண்ணீரை கொதிக்க வைத்து சேமியாவை வேக வைத்து வடியுங்கள். ஆறியவுடன் அதில் கடலை மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை, சோம்பு, உப்பு சேர்த்து தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்து பிசறுங்கள். எண்ணெயைக் காய வையுங்கள். ஒரு கரண்டி சூடான எண்ணெயை சேமியா கலவையில் சேர்த்து பிசைந்து, சிறு சிறு பக்கோடாக்களாக கிள்ளி எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள்.

சேமியா பொங்கல்

p122தேவையானவை: சேமியா – 2 கப், பாசிப்பருப்பு – அரை கப், பெருங்காயம் – அரை டீஸ்பூன், உப்பு – ருசிக்கு, கறிவேப்பிலை – சிறிது, நெய் – 2 டேபிள்ஸ்பூன்.

தாளிக்க: மிளகு – 1 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், இஞ்சி – 1 டேபிள்ஸ்பூன், முந்திரி (நறுக்கியது) – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், நெய் – 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: 1 டீஸ்பூன் நெய்யில் சேமியாவை சிறிது வறுத்தெடுங்கள். பருப்பை தண்ணீர் சேர்த்து குழைய வேகவையுங்கள். வெந்தவுடன் அதில் 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கும்போது உப்பு, 1 டீஸ்பூன் நெய் ஆகியவை சேர்த்து பெரிய தீயில் 2 நிமிடம் வேகவிட்டு, தீயை குறைத்து நன்கு வேக விடுங்கள். அதில் பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்குங்கள். எண்ணெய், நெய்யைக் காயவைத்து தாளிக்கும் பொருட்களை சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கி பொங்கலில் சேர்த்து கலந்து சூடாக பரிமாறுங்கள்.

சோயா சேமியா

p123தேவையானவை: சேமியா – 1 கப், சோயா நக்கட்ஸ் – 10, பெரிய வெங்காயம் – 2, வெங்காயத் தாள் – ஒரு கைப்பிடி, சோயா சாஸ் – 1 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.

அரைக்க: மிளகாய்தூள் – ஒன்றரை டீஸ்பூன், பூண்டு – 6 பல்.

செய்முறை: 6 கப் தண்ணீரை கொதிக்க வைத்து சேமியாவை வேக வைத்து வடியுங்கள். கொதிக்கும் நீரில் சோயாவை போட்டு 10 நிமிடம் கழித்து பிழிந்து எடுத்து, பச்சை தண்ணீரில் இருமுறை அலசி பிழிந்துகொள்ளுங்கள். சிறு துண்டுகளாக நறுக்குங்கள். வெங்காயத்தை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்குங்கள். மிளகாய்தூள், பூண்டு சேர்த்து ஒன்றாக அரையுங்கள். எண்ணெயை நன்கு காய வைத்து அரைத்த விழுதை சேருங்கள். பச்சை வாசனை போனதும் வெங்காயம், சிறிது உப்பு, பிழிந்துவைத்திருக்கும் சோயா சேர்த்து நன்கு வதக்கி, சோயா சாஸ், சேமியா, வெங்காயத் தாள், தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.

சேமியா சர்க்கரை பொங்கல்

p124தேவையானவை: சேமியா – 1 கப், பாசிப்பருப்பு – அரை கப், வெல்லம் – ஒன்றரை கப், நெய் – அரை கப், முந்திரிப்பருப்பு – 10, திராட்சை – 12, ஏலக்காய்தூள் – 1 டீஸ்பூன்.

செய்முறை: பாசிப்பருப்பை மலர வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள். நெய்யில் பாதியை காயவைத்து முந்திரி, திராட்சை சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து 2 கப் தண்ணீர் சேருங்கள். தண்ணீர் கொதித்ததும் சேமியாவை சேர்த்து நன்கு வேகவிடுங்கள். வெல்லத்தை பொடித்து, அரை கப் தண்ணீர் சேர்த்து கரையவிட்டு வடிகட்டி வெந்த சேமியாவில் சேருங்கள். அத்துடன் பாசிப்பருப்பையும் போட்டு, நன்கு சேர்ந்து வரும் வரை கிளறுங்கள். கடைசியில் ஏலக்காய்தூள், மீதமுள்ள நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.

சேமியா உருளை பேட்டீஸ்

p125தேவையானவை: சேமியா – 1 கப், உருளைக்கிழங்கு – 3, பச்சை மிளகாய், இஞ்சி விழுது – 1 டீஸ்பூன், மல்லித்தழை – 1 டேபிள்ஸ்பூன், மாங்காய்தூள் – 1 டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் – 3 டேபிள்ஸ்பூன், உப்பு – ருசிக்கு, நொறுக்கிய கார்ன்ஃப்ளேக்ஸ் – 1 கப், எண்ணெய் – வறுக்க.

செய்முறை: சேமியாவை 6 கப் தண்ணீரில் வேக விட்டு வடியுங்கள். உருளைக்கிழங்கை வேகவிட்டு நன்கு மசியுங்கள். அதில் சேமியா, அரைத்த விழுது, மல்லி, மாங்காய்தூள், கார்ன்ஃப்ளார், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து சிறிது சிறிதாக வேண்டிய வடிவத்தில் செய்யுங்கள். பின்னர் அதனை நன்றாக நொறுக்கிய கார்ன்ஃப்ளேக்ஸில் புரட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள்.

பருப்பு சேமியா

p126தேவையானவை: சேமியா – 1 கப், துவரம்பருப்பு – முக்கால் கப், தக்காளி – 3, தேங்காய் துருவல் – கால் கப், உப்பு – ருசிக்கு, கறிவேப்பிலை, மல்லிதழை – சிறிதளவு, எலுமிச்சம்பழச் சாறு – ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – சிறிது.

தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, பெருங்காயம் – கால் டீஸ்பூன், எண்ணெய் – 1 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது.

செய்முறை: சேமியாவை 6 கப் தண்ணீரில் வேக வைத்து வடியுங்கள். துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவையுங்கள். தக்காளியை பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காய வைத்து தாளிக்கும் பொருட்களை சேருங்கள். பின்னர் தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, வேக வைத்த பருப்பு, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடுங்கள். கடைசியில் மல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு, சேமியா சேர்த்து நன்கு கிளறி பரிமாறுங்கள்.

சேமியா இட்லி

p127தேவையானவை: சேமியா – அரை கப், ரவை – அரை கப், தேங்காய் துருவல் – கால் கப், ஆப்ப சோடா – கால் டீஸ்பூன், சற்று புளிப்பான தயிர் – 1 கப், உப்பு – ருசிக்கு, எண்ணெய் – 2 டீஸ்பூன்.

தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன், நறுக்கிய முந்திரி – 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3, இஞ்சி – 1 துண்டு, கறிவேப்பிலை – சிறிது, மல்லித்தழை – சிறிது, நெய் – டேபிள்ஸ்பூன், எண்ணெய் – 1 டீஸ்பூன்.

செய்முறை: சேமியா, ரவையை 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயில் தனித்தனியே வறுத்து ஒன்றாக கலந்து வையுங்கள். எண்ணெய், நெய்யை காய வைத்து, கடுகு முதல் முந்திரி வரை சேர்த்து வறுத்து, பின்னர் பொடியாக நறுக்கிய இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து 1 நிமிடம் வதக்கி, ரவை சேமியா கலவையில் சேருங்கள். அத்துடன் உப்பு, தேங்காய் துருவல், தயிர் (தேவையானால் சிறிது தண்ணீர்) சோடா உப்பு சேர்த்து நன்கு இட்லி மாவு பதத்தில் கலந்துகொள்ளுங்கள். இட்லி தட்டுகளில் அல்லது சிறிய கப்புகளில் ஊற்றி நன்கு வேக விட்டு எடுங்கள். வித்தியாசமான, சுவையான டிபன் இந்த சேமியா இட்லி.

சேமியா காய்கறி கட்லெட்

p128தேவையானவை: சேமியா – அரை கப், உருளைக்கிழங்கு – 2, கேரட் – 1, பீட்ரூட் – 1, பட்டாணி – கால் கப், பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 3, இஞ்சி – 1 துண்டு, புதினா – சிறிதளவு, மல்லித்தழை – சிறிதளவு, மைதா – அரை கப், பிரெட் தூள் – 1 கப், மிளகுத்தூள் – 1 டீஸ்பூன், கரம் மசாலா தூள் – 1 டீஸ்பூன், உப்பு – ருசிக்கு, எண்ணெய் – பொரிக்க.

செய்முறை: சேமியாவை 3 கப் கொதிக்கும் நீரில் போட்டு, நன்கு வேக விட்டு வடியுங்கள். உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்துக்கொள்ளுங்கள். 2 டீஸ்பூன் எண்ணெயைக் காய வைத்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, புதினா, மல்லித்தழையைச் சேர்த்து 3 நிமிடம் வதக்குங்கள். பின்னர் துருவிய கேரட், பீட்ரூட்டையும், பட்டாணியையும் சேர்த்து மேலும் 3 நிமிடம் வதக்கி மசித்த உருளைக்கிழங்கு, சேமியா, கரம் மசாலா சேர்த்து நன்கு கலந்து கிளறி இறக்குங்கள்.

இக்கலவையை வேண்டிய வடிவத்தில் செய்து 1 கப் தண்ணீரில் கரைத்த மைதாவில் நனைத்தெடுத்து, பிரெட் தூளில் புரட்டி காயும் எண்ணெயில் பொரியுங்கள். சூடாக சாஸுடன் பரிமாறுங்கள்.

சேமியா தோசை

p128aதேவையானவை: சேமியா – 1 கப், தோசை மாவு – 4 கப், பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 3, புதினா – கைப்பிடியளவு, மல்லித்தழை – கைப்பிடியளவு, இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன், மிளகாய் தூள் – 2 டீஸ்பூன், உப்பு – ருசிக்கு, எண்ணெய் – பொரிக்க.

தாளிக்க: எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு – 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன்.

செய்முறை: சேமியாவை 6 கப் கொதிக்கும் நீரில் சேர்த்து நன்கு வேக விட்டு வடியுங்கள். எண்ணெயைக் காய வைத்து தாளிக்கும் பொருட்களை சேருங்கள். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்குங்கள். அத்துடன் தக்காளி, மிளகாய்தூள், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி, சேமியா சேர்த்து கிளறி இறக்குங்கள். தோசைக் கல்லை காயவைத்து, மாவில் சிறிதளவு எடுத்து சற்று கனமாக தேயுங்கள். அதன் மேல் சேமியா கலவையை பரவினாற் போல் வைத்து புதினா, மல்லித்தழையை தூவி, சுற்றிலும் எண்ணெய் விட்டு நன்கு வேக விட்டு திருப்பவும். மேலும் நன்கு வேக விட்டு எடுத்து, சூடாக பரிமாறுங்கள்.

சேமியா கேசரி

p129தேவையானவை: சேமியா – 1 கப், சர்க்கரை – ஒன்றரை கப், நெய் – கால் கப், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், ஆரஞ்சு ரெட் கலர் – ஒரு சிட்டிகை, முந்திரிப்பருப்பு – 10, திராட்சை – 10, ஏலக்காய்தூள் – 1 டீஸ்பூன்.

செய்முறை: எண்ணெய், நெய்யில் பாதி, பாதி எடுத்து, இரண்டையும் காய வைத்து, முந்திரி, திராட்சை சேர்த்து 1 நிமிடம் வறுத்தெடுங்கள். பின்னர் சேமியாவை சேர்த்து ஒரு நிமிடம் வறுத்துக்கொள்ளுங்கள். அதில் அரை கப் கொதிக்கும் நீரை ஊற்றுங்கள். ஆரஞ்சு ரெட் கலர் சேர்த்து, நன்கு வேக விட்டு தீயை குறைத்து, மூடிபோட்டு 2 நிமிடம் வேகவிடுங்கள். மூடியை திறந்து சர்க்கரை சேருங்கள். சர்க்கரை கரைந்து, மீண்டும் கெட்டியாகும் வரை கிளறி, கடைசியில் ஏலக்காய்தூள், மீதமுள்ள நெய் சேர்த்து கிளறி இறக்குங்கள்.

சேமியா நூடுல்ஸ்

p130தேவையானவை: சேமியா – 1 கப், கேரட் – 1, பீன்ஸ் – 6, குடமிளகாய் – சிறியதாக 1, கோஸ் – 50 கிராம், பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 6 பல், வெங்காயத் தாள் – ஒரு கைப்பிடி, சோயா சாஸ் – அரை டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், மிளகுதூள் – 1 டீஸ்பூன்.

செய்முறை: 6 கப் தண்ணீரை கொதிக்கவைத்து சேமியாவை வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள். காய்கறிகளை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்குங்கள் (பூண்டு, இஞ்சி, மிளகாய் உள்பட). எண்ணெயைக் காய வைத்து (புகைய), வெங்காயத் தாள் நீங்கலாக மற்றவற்றை ஒன்றாக சேருங்கள். அத்துடன் உப்பு, சோயா சாஸ் சேர்த்து 5 நிமிடம் வதக்கி சேமியாவை சேருங்கள். அத்துடன், மிளகுதூள், வெங்காயத் தாள், உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.