- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

எப்போதும் நல்லதையே பேசுங்கள்! சிறுகதை

ஒரு கோபக்கார வாலிபன் இருந்தான். அவனுக்குக் கோபம் வந்தால் தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்தபடி எல்லோரையும் மனம் புண்படும் வார்த்தைகளால் பேசி விடுவான். பின்னர் அவர்களிடம் வருத்தப் படுவான்.

நாளடைவில் அவனைப் பலருக்கு இதனாலேயே பிடிக்காமல் போனது. அவனைத் தவிர்க்க ஆரம்பித்தார்கள். இவனும் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றினாலும் எப்படி என்றுதான் தெரியவில்லை.

ஒரு நாள் அந்த வாலிபன்இ தன்னுடைய அப்பாவிடம் வந்து தன் நிலையைக்கூறினான். ”என்னை யாருக்கும் பிடிக்கவில்லை. யாரும் என்னிடம் பழகுவதில்லை. என்னிடம் உள்ள இந்த கோபத்தினால் வரும் தரக்குறைவான வார்த்தைகளைப் பேசாமல் கோபத்தைக் கட்டுப்படுத்த வழி சொல்லுங்கள்’ என்றான். அவன் தந்தை அவனிடம் ஒரு பாத்திரம் நிறைய ஆணிகளையும் ஒரு சுத்தியலையும் கொடுத்தார்.

ஒவ்வொரு முறை கோபப்படும் போதும் சம்பந்தப் பட்டவர்களைத் திட்டுவதைத் தவிர்த்து விட்டுஇ வீட்டுக்குப் பின்னால் உள்ள மரத்தில் ஓர் ஆணியை ஆத்திரம் தீரும் வரை அறைந்து ஏற்றி விடும்படி கூறினார்.

முதல் நாள் அந்த மரத்தில் சுமார் 50 ஆணிகளை அறைந்து ஏற்றினான். நாட்கள் செல்லச் செல்ல அவனைக் கோபமூட்டுபவர்கள் முன் வன்மையாகப் பேசுவதைக் கட்டுப் படுத்தக் கற்றுக் கொண்டான். கோபம் வந்தால்தான் உடனே ஆணி அடிக்கப் போக வேண்டுமே!
நாளடைவில் ஆணியையும்இசுத்தியலையும் எடுத்துக் கொண்டு வேலிப் பக்கம் போகுமுன் கோபவெறி குறைந்து போய்இ வேலியில் ஆணி அறைவது குறையத் தொடங்கியது. சில நாட்களில் ஆணி அடிக்க வேண்டிய தேவையே அவனுக்கு இருக்கவில்லை.

அப்பாவிடம் போய் விவரத்தைச் சொன்னான். அவர் உள்ளுக்குள் மகிழ்ச்சியடைந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவனிடம் ஓர் ஆணி பிடுங்கும் கருவியைக் கொடுத்து மரத்தில் அவன் அடித்த ஆணிகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கச் சொன்னார்.

எல்லா ஆணியையும் பிடுங்கிய பிறகு அப்பாவும் மகனும் அந்த மரத்தைப் பார்க்கப் போனார்கள். அப்பா மரத்தில் ஆணிகளைப் பிடுங்கிய இடத்தில் இருந்த வடுக்களை மகனுக்குக் காட்டி கோபம் வந்தால் அறிவிழந்து சொல்லும் சுடுசொல்லும் இந்த ஆணியைப் போலத்தான். ஆணியைப் பிடுங்குவது போல் நீ பேசியதற்கு மன்னிப்புக் கேட்டாலும்இ அந்த சொல் தைத்த இடத்தில் உள்ள வடு இந்த ஆணி ஏற்படுத்திய வடுவைப் போலவே மறைவது மிகக் கடினம் என்று அவனுக்கு எடுத்துக் கூறினார்.

மகனும் கருத்தை நன்றாக உணர்ந்து திருந்தி அனைவரும் போற்றும் வகையில் வளர்ந்து வாழ்க்கையில் வெற்றிகள் பல பெற்றான்.
நாமும் கூட நமக்கு கோபம் வரும் போது பிறரை தவறான வார்த்தைகளால் காயப்படுத்தி விடுகிறோம். மேலும் கோபப்பட்டதற்காக வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டாலும் நாம் கூறிய வார்த்தைகள் அவர்கள் உள்ளத்தில் வடுவாகவே காணப்படும்.

ஆகவே நாம் பேசும் போது நாவை அடக்கிஇ என்ன பேச வேண்டும் என்பதை யோசித்து பேச வேண்டும். நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம்.

நல்ல வார்த்தை பேசுவது என்பது தர்மம் செய்வதற்கு சமமானது. நபி முஹம்மது ஸல் அவர்களது கூற்றை கீழே உள்ள ஹதீஸ் மூலம் அறியலாம்..

“எனவே, பேரீச்சம் பழத்தின் ஒரு சிறிய துண்டை தர்மம் செய்தாவது அதுவும் கிடைக்கவில்லையெனில் ஒரு நல்ல வார்த்தையின் மூலமாவது அந்த நரகத்திலிருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்” எனக் கூறினார்கள்.” முஸ்லிம்: எண் 1413