- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

யார் இந்த பண்புகளின் பொக்கிஷம்?

images [1]முதல் பார்வையில் அவர் மீது அச்சம் கலந்த மரியாதை ஏற்படும். பழகி விட்டாலோ, விலகவே முடியாத அளவுக்கு அவர் மீது பிரியம் உருவாகி விடும்.

▪ அவர் பேசினால் பேச்சு சரளமாக இருக்கும், சொல் தெளிவாக இருக்கும், கருத்து சரியானதாக இருக்கும். ஆனால், அதற்காக பெரியதொரு சிரமம் எடுத்துக் கொள்ள மாட்டார்.

▪ கிராமவாசி, நகரவாசி இருவருக்கும் தகுந்தவாறு தனது பேச்சு நடையை, முறையே எளிய முறையிலும் கருத்தாழமிக்கதாகவும் அமைத்துக் கொள்வார்.

▪ இரண்டு வாய்ப்புகள் வரும் போது, அதில் எளிதானதையே தேர்வு செய்வார். ஆனால், அது பாவமாக இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால், அதிலிருந்து காத தூரம் விலகி விடுவார்.

▪ அவர் தனக்காக யாரையும் பழிவாங்கியதில்லை, யார் மீதும் கோபித்ததில்லை. இறை கண்ணியம் பாழாக்கப்பட்டால் மட்டுமே கோபத்தை வெளிப்படுத்துவார்.

▪ எவரும் அவரிடம் உதவி கேட்டு, இல்லை என்று அவர் சொன்னதில்லை. இருந்தால், உடனே அதை வழங்கி விடுவார். இல்லை யென்றால், இருப்பவரிடம் வாங்கித் தருவார்.

▪ இறைவன் தன்னைத் தேர்வு செய்யும் முன்பே உண்மையாளர், நம்பிக்கையாளர் என்று மக்களால் அழைக்கப்பட்டவர்.

▪ அரசர்களுக்கு முன் மக்கள் எழுந்து நிற்பது போல தனக்கு முன் எவரும் எழுந்து நிற்பதை விரும்பாதவர்.

▪ இல்லத்துள் நுழைந்து விட்டால், தனது வேலையை தாமே செய்து கொள்ளும் உங்களைப் போன்ற சாமான்ய மனிதராகவே, அவர் மாறிவிடுவார் என்று தமது மனைவியரால் குறிப்பிடப்பட்டவர்.

▪ தமது பணியாளர்களை விட, தன்னை உயர்வாகக் கருதிக் கொள்ளாதவர். மட்டுமல்ல, தமக்குப் பணிவிடை செய்தவருக்குத் தாமும் பணிவிடை செய்பவர்.

▪ உணவுண்ணும்போது குறை கூறும் பழக்கமில்லாதவர். பிடித்தால், உண்ணுவார். இல்லை என்றால், எதுவும் சொல்லாமல் எழுந்து விடுவார்.

▪ மேல்தட்டு மக்களை மாத்திரமல்ல, அடித்தட்டு மக்களையும் நினைவில் வைத்து, அவர்  தொடர்ந்து காணப்படாவிட்டால், பிறரிடம் அவர் பற்றி விசாரிப்பார்.

▪ விசாரணையில் அவர் உள்ளூரில் இருப்பதாக தெரிய வந்தால், சென்று உடல் நலம் விசாரிப்பார். வெளியூர் சென்றதாகக் கேள்விப்பட்டால், அவருக்காக பிரார்த்தனை செய்வார்.

▪ மக்கள் அவர் சம்மந்தப்பட்ட விஷயங்களை மறந்து விட்டாலும், மக்கள் சம்மந்தப்பட்ட எதையும் அவர் மறக்கவே மாட்டார்.

▪ மக்களுக்கு அதிக நன்மைகள் புரிந்து, அவர்களுக்கு அதிக உபகாரம் புரிபவரே, அவர் உள்ளத்திலும், அவரது அவையிலும் அதிகக் கண்ணியம் வாய்ந்தவர்.

▪ ஒரு சபைக்குச் சென்றால், தனக்கென ஓரிடத்தை, ஓர் ஆசனத்தை எதிர்பார்க்காமல் சபையின் முடிவெல்லையிலேயே அமர்ந்து கொள்வார்.

▪ அவர், தன்னைத்தான் அதிகம் விரும்புகிறார் என்று, ஒவ்வொருவரும் எண்ணுமளவிற்கு, எல்லாரிடமும் இனிமையாக நடந்து கொள்வார்.

▪ ஒருவர் அவர் முன்பு பேசினால், இடையில் குறுக்கிட மாட்டார். பேசி முடிக்கும் வரை அமைதி காப்பார்.

▪ தேவை நிமித்தம் எவரும் அவரிடம் வந்தால், அவராக அங்கிருந்து செல்லும் வரை, அவரோடு உரையாடிக் கொண்டிருப்பார்.

▪ அவரது கைகளை எவரும் பிடித்தால், அவராகக் கைகளை எடுக்கும் வரை, தனது கைகளைக் கழட்டிக் கொள்ள மாட்டார்.

▪ பிணங்கிக் கிடப்போரிடையே இணக்கத்தை ஏற்படுத்துவாரே தவிர, இணக்கமாக இருப்போரி டையே பிணக்கத்தை ஏற்படுத்த மாட்டார்.

▪ ஒருவர் பற்றி விரும்பாத செய்தி எதையும் கேள்விப்பட்டால், மக்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று, பொதுவாகவே குறிப்பிடுவார். சம்மந்தப்பட்டவருடைய பெயரைக் குறிப்பிட்டு அவரைச் சங்கடப்படுத்த மாட்டார்.

● தனிப்பட்ட வகையில், மூன்று குணங்களை    விட்டும் தன்னைப் பாதுகாத்துக் கொண்டவர் :
▪ முகஸ்துதிக்காக எதையும் செய்வது,
▪ அதிகப் பிரசங்கித் தனம் செய்வது,
▪ தேவையற்றவற்றில் ஈடுபடுவது.

● சமூகத் தளங்களில், மூன்று குணங்களை    விட்டும் தன்னைப்பாதுகாத்துக் கொண்டவர் :
▪ பிறரைப் பழிப்பது, ஏசுவது,
▪ பிறரைப் பற்றி குறை கூறுவது,
▪ பிறர் குறையைத் தேடி அலைவது.

▪ அவர் பேசினால் அனைவரும் செவிமடுப்பர்;
▪ ஆணையிட்டால், அனைவரும் அடிபணிவர்;
▪ ஏவாமலேயே பணிவிடை செய்ய முன்வருவர்;
▪ மக்கள் திரளைப் பெற்றவர்; காரணம்,
▪ அவர் கடுகடுப்பானவர் அல்லர்;
▪ முகம் சுழிப்பவரும் அல்லர்.

யார் இந்த மாமனிதர் என்ற யோசனையா?

நபிகள் நாயகம் முஹம்மது ஸல் அவர்களாகும் !.

அகில உலக மக்களுக்குமான ரோல் மாடல்.

-நிமிர்ந்து நில் மண்டியிடாதே.

இந்த உத்தமர் பற்றி மேலும் அறிய கீழ்கண்ட லிங்க்கை கிளிக் செய்யவும்

media4us.com [2]