- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

கழுதை தேய்ந்து கட்டெறும்பானது – தேர்ச்சி விகிதம்

கழுதை தேய்ந்து கட்டெறும்பானது – பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம்

Annadurai_statue [1]அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகள் கடந்த 2015 ஆம் ஆண்டில் ஏப்ரல், நவம்பர் மாதங்களில் நடைபெற்ற தேர்வுகளில் பெற்ற மாணவர் தேர்ச்சி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி ஒரு கல்லூரியில் 3 மாணவர்களும், மற்றொரு கல்லூரியில் 6 மாணவர்களும் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 2015 நவம்பர் பருவத் தேர்வில் ஒரு கல்லூரியில் ஒரு மாணவர் கூட தேர்ச்சிப் பெறவில்லை.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த பொறியியல் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகிதம் வெளியிடப்பட்டு வந்தது. குறைவான தேர்ச்சி பெற்ற சில கல்லூரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகம் தேர்ச்சி பட்டியலை வெளியிடவில்லை.

இதை எதிர்த்து சிலர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் மாணவர் தேர்ச்சி குறித்த விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு வந்தது.

நிகழாண்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கவிருக்கும் நிலையில், கடந்த கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதுகுறித்த செய்தி தினமணியில் வெளியானது.

இந்நிலையில் 2015 ஏப்ரல்-மே மற்றும் நவம்பர்-டிசம்பர் பருவத் தேர்வுகளின் மாணவர் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் கல்லூரிகளின் பட்டியலை பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டது.

இதில் 2015 ஏப்ரல்-மே பருவத் தேர்வுகளில், 3 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்திலே மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 522 கல்லூரிகள் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலின் கடைசி இடத்தில் விழுப்புரம் வேதாந்த தொழில்நுட்பக் கல்லூரி இடம்பெற்றுள்ளது. இங்கு தேர்வெழுதிய 214 பேரில் 6 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 2.89 சதவீதமாகும். இதற்கு அடுத்ததாக கோவை விஷ்ணு லட்சுமி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் 60 பேர் தேர்வெழுதி 3 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 5 சதவீதமாகும். கன்னியாகுமரி நாராயணகுரு சித்தார்த்தா பொறியியல் கல்லூரியில் தேர்வெழுதிய 64 பேரில் 5 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 7.81 சதவீதமாகும்.

இதுபோல, 21 பொறியியல் கல்லூரிகள் 20 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி விகிதத்தையும், 33 கல்லூரிகள் 25 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி விகிதத்தையும், 44 கல்லூரிகள் 30 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி விகிதத்தையும் பெற்றுள்ளன. 50 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி விகிதத்தை 191 கல்லூரிகள் பெற்றுள்ளன.

முதலிடம்:  இந்த ஏப்ரல்-மே பருவத் தேர்வு தேர்ச்சி விகிதப் பட்டியலில் கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பம் மற்றும் அப்லைடு ஆராய்ச்சி கல்வி நிறுவனம் 97.32 தேர்ச்சி விகிதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக 94.45 சதவீத தேர்ச்சியுடன் நாமக்கல் கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியும், மூன்றாமிடத்தில் 93.48 தேர்ச்சி விகிதத்துடன் காரைக்குடி சி.எஸ்.ஐ.ஆர். கல்வி நிறுவனமும் இடம்பெற்றுள்ளன.

சென்னை, அதன் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள பிரபல பொறியியல் கல்லூரிகளில் 85 சதவீதத்துக்கும் குறைவாகவே தேர்ச்சி பெற்றுள்ளன.

2015 நவம்பர்-டிசம்பர் பருவத் தேர்வுகள்

2015 நவம்பர்-டிசம்பர் பருவத் தேர்வுகளின் தேர்ச்சி விகிதப் பட்டியலிலும் கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பம் மற்றும் அப்லைடு ஆராய்ச்சி கல்வி நிறுவனம் 97.01 தேர்ச்சி விகிதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது. விருதுநகர் ராம்கோ தொழில்நுட்ப கல்வி நிறுவனம் 87.97 சதவீதத்துடன் இரண்டாம் இடத்திலும், திருவள்ளூர் ஆர்.எம்.டி. பொறியியல் கல்லூரி 87.91 சதவீதத்துடன் மூன்றாமிடத்திலும் உள்ளன.

இந்தப் பருவத் தேர்வில் 319 பொறியியல் கல்லூரிகள் 50 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளன. அதுபோல 223 கல்லூரிகளில் 40 சதவீத்துக்கும் குறைவான தேர்ச்சி விகிதமும், 137 கல்லூரிகளில் 30 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி விகிதமும், 103 பொறியியல் கல்லூரிகளில் 25 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி விகிதமும், 66 பொறியியல் கல்லூரிகளில் 20 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி விகிதமும் இடம்பெற்றுள்ளன.

20 கல்லூரிகளில் 10 சதவீதத்துக்கும் குறைவாக ஒற்றை இலக்க தேர்ச்சி விகிதம் இடம்பெற்றுள்ளது.

மொத்தம் 516 பொறியியல் கல்லூரிகள் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில் வேலூர் ஸ்ரீ சித்தேஸ்வரார் பொறியியல் கல்லூரி கடைசி இடத்தில் உள்ளது. இந்தக் கல்லூரியில் தேர்வெழுதிய 14 பேரில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை.

திருவண்ணாமலை ஆக்ஸ்ஃபோர்ட் பொறியியல் கல்லூரியில் 260 பேர் தேர்வெழுதியதில் ஒரு மாணவர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு விவரங்களுக்கு-  www.annauniv.edu