- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

சூழ்நிலைக் கைதியாக வேண்டாம்!

images [1]வரவுக்கு ஏற்ற செலவு செய்தால்தான் சிக்கல் என்பதே இல்லையே. ஆனால், இன்றைய சமூகத்தில் நிலவும் மிக முக்கிய சிக்கல்களுக்குக் காரணம் வரவுக்கு மீறியும், சேமிப்பையும் தாண்டி கடன் வாங்கி செலவு செய்யும் அளவிற்கு நிலைமை கைமீறிப் போய்விட்டது.

 நுகர்வு கலாசாரத்தின் பாதிப்பினால் அளவுக்கு மீறிய ஆசை. ஆசை என்று சொல்வதைவிட பேராசை என்று சொல்லலாம். ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்றால் பேராசையை என்னவென்று சொல்வது?

 சாதாரண நடுத்தர மக்களை குறிவைத்து நடைபெறும் பல்முனைத் தாக்குதலுக்குத் தப்பி அவரவர் திட்டப்படி பட்ஜெட் வாழ்க்கை வாழ்வது என்பது மிக சுலபமான காரியமில்லை.
கண்ணால் காணும் திரைப்படங்களில், தொலைக்காட்சி தொடரில் வரும் வீடு, வாகனங்கள் நம் மனதில் ஆழமாகப் பதிந்து அவ்வப்போது கனவில் தோன்றி ஆசைக்கு பன்னீர் வார்த்துக் கொண்டிருக்கும்.

 பலர் தங்கள் நகைகளை அடமானம் வைத்து சில தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனர். அதனால்தான் ஆங்காங்கே அடகுக்கடைகள் பெருகியவண்ணம் உள்ளன. முறையாக சம்பாதித்து இயன்ற அளவு சேமித்து படிப்படியாக வளர்தல் என்பது நியாயமான ஒரு வழி.

 அதைவிடுத்து குறுக்கு வழியில் விரைவாக வளர வேண்டும் என முடிவெடுத்தால், வேறு வழியேயில்லை தவறு செய்துதான் ஆகவேண்டும். மனசாட்சியும், செயல்விளைவுத் தத்துவமும் அங்கே எடுபடாது.

 இவர்களுக்குத் தகுந்தபடி இப்போது சந்தைக்கு வரும் பொருள்கள் அனைத்தும் தவணை முறையில் வழங்கப்படுகின்றன.

 நமது கனவு இல்லத்திற்காகவோ,கம்ப்யூட்டர், ஐ-போன், வீட்டு உபயோகப் பொருட்கள்,கனவு வாகனத்திற்காகவோ, அவர்கள் கேட்கும் அனைத்துத் தகவல்களையும், அடமானமாக காலிமனை பத்திரத்தையோ, நகைகளையோ வைத்து அவர்கள் காட்டும் ஒப்பந்தங்களில் குறைந்தது 50 முதல் 60 கையொப்பம் இட்டு கடன் வாங்கிவிடுவோம்.

 பிறகு மாதந்தோறும் தவணை என கட்டும்போதுதான் தெரியும். நிம்மதி கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறோம் என்று. இதில் சற்று நிதானமாக சிந்தித்து அளவுக்குத் தகுந்தபடி கடன் வாங்கினால் தப்பித்துவிடுவோம். இது அத்தனைக்கும் காரணம் பேராசைதான்.

 அளவுக்கு மீறி மகிழ்ச்சியை அடகு வைத்துவிட்டு பிறர் தங்களைப் பார்த்து பெருமையாக நினைக்க வேண்டும் என ஆயிரக்கணக்கான சதுரடியில் வீடும், இருசக்கர வாகனமே போதும் என்ற நிலையில், விலையுயர்ந்த காரும் என கடன் வாங்கிச் செலவு செய்து

தங்கள் அந்தஸ்தை உயர்த்தி என்ன பயன்?
ஆரோக்கியமான வாழ்க்கைதான் முக்கியம் என்பதை காலம் கடந்து உணர்ந்து என்ன பயன்? வாழும்போதே மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.

குழந்தைகள் மற்றும் வீட்டில் உள்ளவர்களின் சிறுசிறு ஆசைகளை நிறைவேற்றுவதை விடுத்து மிகவும் கஞ்சத்தனமாக சேமிக்கிறோம் என்ற பெயரில் சேமித்து பிறகு வாங்க எல்லோரும் சந்தோசமாக இருக்கலாம் என்றால் எப்படி?

 எனவே, வாழ்க்கை என்பதை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதில்தான் உள்ளது. இருப்பது போதும் என்று திருப்தியுடன் வாழ்வது ஒருமுறை. அல்லது வாழ்க்கையின் இலக்கு ஒன்றை நினைத்து அதை அடைவதுதான் குறிக்கோள்.

 அதுவரை மகிழ்ச்சி என்பதே கிடையாது என்று வாழ்வதும் ஒரு முறை. அல்லது சூழ்நிலைக்கு ஏற்ப தங்கள் தேவைகளை சமாளித்து அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி அனைவரையும் மகிழ்ச்சியுடன் அரவணைத்துச் செல்வது என்பதும் ஒருவகை.

 ஒருமுறை அருட்தந்தை வேதாத்திரி மகரிஷியிடம் ஓர் அன்பர், “அய்யா, எனது மகளின் திருமணத்திற்கு ஏற்பாடு நடக்கிறது. பணம் பற்றாக்குறை, ஒரே கவலையாக உள்ளது. கடன் வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்ன செய்வது?’ என கேட்க, அதற்கு மகரிஷி “உங்களிடம் நீங்கள் குடியிருக்கும் வீட்டைத் தவிர, வேறு என்ன சொத்து இருக்கிறது?’ என கேட்க, அதற்கு அவர் “வீட்டிற்கு அருகில் காலியிடம் இருக்கிறது, இப்போது இருக்கும் வீட்டை இடித்து பெரிதாக கட்டவேண்டும் என்பதற்காக வைத்துள்ளேன்’ என்று சொல்ல, மகரிஷி “உடனடியாக அந்த காலி இடத்தை விற்பனை செய்து உங்கள் மகளின் திருமணத்தை கடனில்லாமல் நடத்துங்கள்’ என ஆலோசனை வழங்கினார்.

 மேற்கண்ட உதாரணத்தின்படி, நாம் இருக்கும் வசதிகளை வைத்து வாழ்ந்து கடனாளியாக இல்லாமல், அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வது என்பது புத்திசாலித்தனம்.
எனவே, இருக்கும் வீடு, அடிப்படைத் தேவையான வாகனம், குழந்தைகளுக்குக் கல்வி, ஆரோக்கியமான வாழ்க்கை, எதிர்பாராத செலவுகளுக்கு கையிருப்பு பணம் என்ற சூழலில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். ஆசைகள் இருக்கலாம், அது நமது குறிக்கோளை அடைய துணைபுரியும்.

 ஆனால், பேராசை என்பது நமக்கு நாமே குழிபறிப்பது. எனவே, சூழ்நிலைக் கைதியாக வேண்டாம். நகரமயமாதலில் நமது சூழல் நரகமாகிவிடாமல் இருக்க வேண்டும். சூழ்நிலையை நாம் கையாளும் நிலையில் வைத்திருப்போம்.

எஸ்ஏ. முத்துபாரதி